ரிஷபம் – ஆங்கில புத்தாண்டு ராசி பலன் – 2023

254

வசீகரமான ரிஷப ராசியினருக்கு இந்த ஆங்கில புத்தாண்டு இனிமையான சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு முழுவதும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும்.

குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். இந்த ஆண்டின் சனிப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைப் பாதையை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என்பதும் சிறிதும் சந்தேகம் இல்லை. குருப் பெயர்ச்சி நன்மை, தீமை இரண்டையும் சேர்ந்தே வழங்கப் போகிறது. ராகு/கேதுக்களின் சஞ்சாரம் சிறு மன சஞ்சலத்திற்குப் பிறகு காரிய வெற்றியைத் தரும். மிக மோசமான பலனை தராது என்பதை உறுதியாகக் கூறலாம். இனி விரிவான பலன்களைக் காணலாம்.

குருவின் சஞ்சார பலன்கள்: ரிஷப ராசிக்கு 8,11ம் அதிபதியான குருபகவான் இதுவரை 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தார். இனி 12ம் இடமான அயன, சயன விரய ஸ்தானத்திற்கு ஏப்ரல் 22, 2023ல் இடம் பெயறுகிறார். குருபகவான் விரய ஸ்தானத்திற்குச் செல்வதால் பலருக்கு வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அடிக்கடி வெளியூர், வெளிநாட்டு பிரயாணங்கள் செல்ல வேண்டி வரலாம். சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அதற்கான பணியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் விரயங்களும் அதற்கு ஏற்றார்போல் இரு மடங்காக இருக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் ஆதாயம் நன்மை அடைந்தவர்களே உங்களுக்கு போட்டியாக மாறி எதிரியாக செயல்பட்டு சூழ்ச்சி செய்து உங்களை வீழ்த்த நினைக்கலாம். சிலரின் மனம் அலை பாய்ந்து குறுக்கு வழியில் ஈடுபட்டு தொழிவில் வீண் விரயங்களை சந்திக்கலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம். எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட விரயத்தை சுபமாக்க முடியும். சிலருக்கு சிறு சிறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும்.சுப கிரகம் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை கவலை இருந்தாலும் மறந்து நிம்மதியாக தூங்குவீர்கள்.

சனியின் சஞ்சார பலன்கள்: ரிஷபத்திற்கு 9,10ம் அதிபதியான ஸ்ரீ சனி பகவான் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலிருந்து 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு ஜனவரி 17, 2023ல் மாறுகிறார்.தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் முத்தாய்ப்பான பலன் தரும். குலத்தொழில் செய்பவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலம் பற்றிய நல்ல சிந்தனைகள் உண்டாகும். கடின உழைப்பு, விடா முயற்சி, வைராக்கியத்தால் தடைகளை கடந்து வெற்றி வாகை சூடுவீர்கள். தொழில் தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறும். எதிரிகளால் உண்டாகிய தொல்லைகள் விலகும்.

பல வழிகளில், பல தொழில்களில் சிறிய முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும். மற்றவர்களால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும். கூலித் தொழிலாளிகளுக்கு இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து வேலை கிடைத்து வாழ்வாதாரம் உயரும்.

எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். புதிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி பெருகும். வெளியில் சொல்ல முடியாது தவித்த பல பிரச்சனைகள் தானாக தீரும். அதிர்ஷ்டச் சொத்து, லாட்டரி, போட்டி, பந்தய லாபம் உண்டு. நண்பர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவு உண்டு.

ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்: அக்டோபர் 30, 2023 வரை ராகு 12ம் இடத்திலும் கேது 6 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு ராகு 11ம் இடத்திற்கும் கேது 5ம் இடத்திற்கும் செல்கிறார். ராகு கேதுக்கள் தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்த்துவார்கள். வேதனைகளை விரட்டி சாதனைகளாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும். மூத்த சகோதர சகோதரிகள், சித்தப்பா இவர்கள் மூலம் பணவரவும் ஆதாயம் உதவிகள் கிடைக்கும். சிலர் தொழில், லாபம் என்று உபரியாக சம்பாதித்து சட்ட படியான அன்பான மனைவியிடம் வருமானத்தை கொடுக்காமல் சட்டத்திற்கு புறம்பான இரண்டாவது மனைவியிடம் வருமானத்தை கொடுத்து ஏமாறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு புகழ், வெற்றி கிடைக்கும்.

திருமணம்: ராசிக்கு 7ம் இடத்திற்கு கோட்சார சனியின் 10ம் பார்வை இருப்பதால் திருமண முயற்சி இழுபறியாகும்.சுய ஜாதகத்தில் 7ம் இடத்தில் அசுப கிரகம் இல்லாமல் இருந்தால் நல்ல வரன் கிடைக்கும். எந்த தடையும் இன்றி பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் நடைபெறும். 7ம் இடத்திற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபட தடைகள் தகறும்.

பெண்கள்: பெண்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நன்மை தரும். உங்களின் அனைத்து விருப்பங்களும் ஒவ்வொன்றாக நிறைவேறும். தாய் வீட்டுச் சீதனத்தால் புகுந்த வீட்டில் கவுரவம் உயரும். உற்சாகமும், தெம்பும் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும்.

மாணவர்கள்: சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். காலத்தின் அருமை உணர்ந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்த வெற்றி உங்களுக்கு கரம் கொடுக்கும். கல்வியில் தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர சாதகமான காலமாகும். உங்கள் லட்சியத்தை அடைய நவகிரகங்கள் ஆசி வழங்கும்.

கிருத்திகை 2,3,4: தன வரவில் தன் நிறைவு உண்டாகும். வராக்கடன்கள் வசூலாகும். கடனுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். புதிய சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும். கடந்தகால நெருக்கடிகள் குறையத் துவங்கும்.குடும்ப உறவுகளிடம் புரிதல் உண்டாகும். பிணக்குகள் தீரும். சொந்தவீடு, மனை, வாகனம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்து விஷயங்களில் இருந்து வந்த வம்பு வழக்குகள் குறையும். தம்பதிகள் தேவையற்ற பேச்சு மற்றும் முன் கோபத்தை குறைப்பது நல்லது. சிலரின் விவாகரத்து வழக்கு சாதகமாகும். வேலை பார்ப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். தடை, தாமதங்கள் அகலும்.

பரிகாரம்: கால பைரவரக்கு சந்தன காப்பு சாற்றி வழிபட முன்னேற்றங்கள் அதிகரிக்கும்.

ரோகிணி: திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும். தொழில் ரீதியான ஏற்றம், அபிவிருத்தி ஏற்பட்டு லாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் மங்கள ஓசையையும், மழலை குரலும் ஒலிக்கப் போகிறது. எதிர்பாராத உதவிகளால் வாழ்வாதாரம் உயரும். கூலித் தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடிகள் சீராகும். உத்தியோகத்தில் நிலவிய இடையூறுகள் குறையத் துவங்கும் பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புத்திர பிராப்த்தி கிட்டும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் உண்டாகும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள்.

பரிகாரம்: ரோகிணி நட்சத்திரத்தினர் ஏகாதசி திதியில் அல்லது ரோகிணி நட்சத்திர நாளில் திருப்பதி வெங்கடாஜல பதியை வழிபட வேண்டும்.

மிருகசீரிஷம் 1,2: மன சஞ்சலங்கள் குறையும். பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மன உளைச்சலைத் தந்த உயர் அதிகாரி இடமாற்றம் ஆகுவார். முதலீட்டாளர்களுக்கு நம்பகமான வேலையாட்கள் கிடைப்பார்கள். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக இடம் பெயரலாம். வேலைக்கு சென்று வர வசதியாக வீடு மாற்றம் செய்யலாம். பெண்களுக்கு வீட்டிலும் உத்தியோகத்திலும் வேலைப்பளு மிகுதியாக இருக்கும். தந்தையின் உள்ளுணர்வை புரிந்து கடந்த கால கசப்பான சம்பவங்களை மறக்க முயற்சிப்பீர்கள். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். பெண்களுக்கு தடைபட்ட பணிகள் துரிதமாகும். மொத்தத்தில் பலபாக்கியங்கள் உண்டாகும்.

பரிகாரம்: தினமும் வில்வாஷ்டகம் படித்து வர தொழிலில் லாபம் பெருகும். ரிஷப ராசியினர் புத்தாண்டிற்கு சென்று வர வழிபட வேண்டிய ஸ்தலம் சிதம்பரம் கோவில். ரிஷப ராசியினர் நேரம் கிடைக்கும் போது சிதம்பரம் சென்று நடராஜரையும், தில்லை காளியையும் வழிபட நிலையில்லாமல் ஆடிக் கொண்டு இருக்கும் வாழ்க்கை சமன்படும். உள்ளத்தில் தெளிவு பிறக்கும். பொருள் குற்றம் நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

maalaimalar

SHARE