லண்டனில் இந்திய மாணவர்கள் இருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் மாலை, சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர்.
அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர்.
அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீ பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததும் தெரியவந்தது.
மாணவர்கள் மறைவு குறித்த தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் மறைவுக்கு தூதரகம் தரப்பிலும், பல்கலைக்கழகம் தரப்பிலும் இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும், மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.