வங்கதேசத்திற்கு சொந்த மண்ணிலே மரண அடி கொடுத்து தொடரை வென்ற இலங்கை!

137

 

சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணியை 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி தொடரை முழுவதுமாக வென்றது.

இலங்கை 531
இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் சாட்டோகிராமில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இலங்கை 531 ஓட்டங்களும், வங்கதேசம் 178 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதன்மூலம் வங்கதேச அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில் மஹ்முதுல் 24 ஓட்டங்களும், ஸாகிர் ஹசன் 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

வங்கதேசம் ஆல் அவுட்
பின்னர் வந்த நஜ்முல் ஹொசைன் 20 ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் அடித்த மொமினுல் ஹயூ 50 ஓட்டங்களில் பிரபத் ஜெயசூரியா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அடுத்து ஷாகிப் அல் ஹசன், லித்தன் தாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தக் கூட்டணி 61 ஓட்டங்கள் குவித்தது. கமிந்து மெண்டிஸ் 36 ஓட்டங்களில் இருந்த ஷாகிப் அல் ஹசனை வெளியேற்றினார்.

லித்தன் தாஸ் 38 ஓட்டங்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. இறுதியில் 318 ஓட்டங்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மெஹிதி ஹசன் மிராஸ் மட்டும் கடைசி வரை வெற்றிக்காக போராடி ஆட்டமிழக்காமல் 81 (110) ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றார்.

 

SHARE