வடகடலில் சீனர்கள்? -சீனாவுக்கு எதிராக தேவையற்ற பயம் ஒன்றை உலகம் முழுவதிலும் உள்ளது

30

 

வடகடலில் சீனர்கள்? -சீனாவுக்கு எதிராக தேவையற்ற பயம் ஒன்றை உலகம் முழுவதிலும் உள்ளது

 

 

வடகடலில் சீனர்கள்? 

வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர்  என்று கருதி ருவிற்றரில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருக்கிறார். உள்நாட்டில் வீதித் திருத்த பணிகளிலும் சீனர்கள் வேலைக்கமர்த்தப்படுவதாக அப்பதிவில் உள்ளது. ஆனால் அது சீனர் அல்ல கிழக்கை சேர்ந்த ஒரு முஸ்லிம் என்பது தெரிய வந்ததும் சுமந்திரன் தான் வெளியிட்ட தகவலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சுமந்திரனுக்கு ஒரு பதில் குறிப்பையும் பதிவிட்டிருந்தது.வழமையாகத் தான் என்ன கதைக்கிறேன் என்பதனை நன்கு சிந்தித்து பிடி கொடாமல் கதைக்கும் சுமந்திரன் இந்த விடயத்தில் அவசரப்பட்டு ஏன் அப்படியொரு குறிப்பை டுவிட்டரில் போட்டார் ?  சீனர்கள் நாடு முழுவதும் பரவி விட்டார்கள் என்ற பிரமை அவருக்கு ஏற்பட்டுள்ளதா ?ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவ்வாறு ஒரு பிரமை ஏற்படக் காரணம் என்ன? கௌதாரிமுனை கிராமசேவகர் பிரிவிற்குள் வரும் கல்முனை பந்தலடி என்ற பகுதியில் அமைந்திருக்கும் கடலட்டைப் பண்ணையில் சீனர்கள் காணப்பட்டமையும் அதற்கு ஒரு காரணமா?

அக்கடலட்டைப் பண்ணை பற்றிய விவரத்தை முதலில் வெளிப்படுத்தியது கிளிநொச்சியை சேர்ந்த ஒரு செய்தியாளர்தான். அப்பகுதியில் சீனர்கள் கடந்த இரண்டரை மாதங்களாக கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருவது தொடர்பான தகவல்கள் அச்செய்தியாளருக்கு கிடைத்தன.மீனவர் சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் சீனர்களோடு இணைந்து செயற்படுவதாகவும்  சந்தேகிக்கப்படுகிறது. தனக்குக் கிடைத்த தகவலை உறுதிப்படுத்துவதற்காக கல்முனை பந்தலடிக்கு மேற்படி செய்தியாளர் சென்றிருக்கிறார். அங்கிருந்த சீனர் கடல் வழியாகப் படகின் மூலம் அந்த இடத்தைவிட்டு நீங்கிச் செல்வதை கண்டிருக்கிறார். அந்த படகில் கியூலன் Guilan (Pvt) Ltd பிரைவேட் லிமிடெட் என்று எழுதப்பட்டிருக்கிறது.

அரியாலை கிழக்கில் ஏற்கனவே இயங்கி வரும் கடலட்டைக்  குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பண்ணையிலிருந்து அவர்கள் படகுகள் மூலமாகவே கல்முனை பந்தலடிக்கி வந்து போகிறார்கள். ஊடகங்களில் அந்த இடம் கௌதாரிமுனை என்று குறிப்பிடப்பட்டாலும் அது கல்முனை பந்தலடி என்பதே சரி.கல்முனைக் கடலில் வெற்று பிளாஸ்டிக் பரல்களை பரப்பி அவற்றின்மீது குடில் ஒன்றை அமைத்து சீனர்கள் அதில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பூநகரிப் பகுதியூடாக அதாவது தரை வழிப் பாதை ஊடாக அந்தப் பகுதிக்கு செல்வதில்லை. மாறாக கடல்வழிப் பாதை ஊடாக அரியாலை கிழக்கில் இருந்து அங்கே வருகிறார்கள். கல்முனை பந்தலடியிருந்து கிழக்கு அரியாலை இருபது நிமிடங்களுக்கு குறையாத கடற்பயணத் தூரம்

அரியாலை கிழக்கில் ஏற்கனவே  கடலட்டைக் குஞ்சு உற்பத்திப் பண்ணை ஒன்று இயங்கிவருகிறது. அந்தப்பண்ணை 2011ஆம் ஆண்டு ஒரு தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களக் குடிமகனின் பெயரில் பதியப்பட்டுள்ளது. அவர்தான்2018இல் சீனர்களை  அங்கே கொண்டு வந்தார். சீனர்களோடு தமிழர்களும் வேலை செய்கிறார்கள். முகாமையாளராக இருப்பவர் ஒரு தமிழர். உதவியாளர்களாகவும் தமிழர்கள் உண்டு. அப்பண்ணை கடற்கரையில் ஒரு தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. கடற்கரையில் 16 சீமெந்துத் தொட்டிகளை உருவாக்கி அந்த தொட்டிகளில் கடற் சூழலை செயற்கையாக ஏற்படுத்தி அதற்குள் கடலட்டைக் குஞ்சுகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த கடலட்டைக் குஞ்சுகளைத்தான் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் உட்பட பெரும்பாலான கடலட்டை வளர்ப்பவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அப்பண்ணையைத்தான் கல்முனை கடலை நோக்கி அவர்கள் விஸ்தரிக்க முயன்றதாக கருதப்படுகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதைத்தொடர்ந்து கல்முனை பந்தலடி பகுதியைச் சேர்ந்த விநாயகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் பெயரால் இரண்டு ஏக்கர் காணியில் கடலட்டைப் பண்ணை ஒன்றை உருவாக்குவதற்கு பிரதேச செயலரிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. எனினும் அனுமதி இதுவரையிலும் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் சீனர்கள் கடற்றொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலருடைய அனுசரணையோடு அங்கே கடலட்டை வளர்ப்பை தொடங்கிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

2009இற்குப்பின் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக தமிழ் கடற்பகுதிகளில் கடலட்டை பண்ணைகள் அதிகரித்த அளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 15 கடலட்டைகளைக் கொண்ட ஒரு கிலோ கடலட்டை கிட்டத்தட்ட 20,000 ரூபாய்க்கு போகிறது.இது சீனாவில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கு விற்கப்படுமாம். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கடலட்டையில் பெரும்பகுதியை சீன நிறுவனங்களே கொள்வனவு செய்கின்றன.

அரியாலை கிழக்கில் சீனர்கள் தங்கியிருக்கும் பண்ணை அமைந்திருக்கும் இடம் யாழ் குடா நாட்டின் வரைபடத்தில் குடாக்கடலை நோக்கி துருத்திக்கொண்டு தெரியும் ஒரு நிலத்துண்டு ஆகும். அப்படித்தான் கல்முனை பந்தலடியும். பெரு நிலப்பரப்பிலிருந்து கடலை நோக்கி துருத்திக்கொண்டு தெரியும் ஒரு நிலத்துண்டு அது.இவ்விரண்டு நிலத் துண்டுகளிலும் நிலை கொண்டிருப்பவர்கள் குடாக்கடலின் மீது தமது கண்காணிப்பை வைத்திருக்கலாம்.

சர்ச்சைக்குரிய கடல் அட்டை பண்ணையில் இருந்து கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கடற்படை முகாம் உண்டு.கல்முனையில் இருந்து குறுக்காக கிட்டத்தட்ட 48 கிலோமீட்டர் தொலைவில் நெடுந்தீவு காணப்படுகிறது. நெடுந்தீவில் இருந்து குறுக்காக ஏறக்குறைய 50கிலோ மீட்டர் தொலைவிலேயே தமிழகம் காணப்படுகிறது.நெடுந்தீவும் உட்பட யாழ் குடாநாட்டின் மூன்று தீவுவுகளில் சீனா மீளப் புதுப்பிக்கப்படும் எரிசக்தித் திட்டம் ஒன்றை நிறுவ இருக்கிறது. அதற்குரிய காணிகள் சுவீகரிக்கப்பட்டு வேலியிடப்பட்டு அவற்றில் இது மின்சார சபைக்கு சொந்தமான இடம் இதற்குள் யாரும் நுழையக்கூடாது என்று அறிவித்தல் பலகை நடப்பட்டிருக்கிறது.

எனவே கிழக்கு அரியாலை , கல்முனையில் பந்தலடி, நெடுந்தீவுமுட்பட மூன்று தீவுகள் ஆகியவற்றை இணைத்து குடாக்கடல் உள்ளடங்களாக பாக்கு நீரிணையில் நெருக்கமான ஒரு வலைப்பின்னலை உருவாக்கலாம். அப்படிப்பார்த்தால் இதை வெறுமனே கடலட்டை விவகாரமாக மட்டும் பார்க்கலாமா  என்று சந்தேகிப்பவர்களும் உண்டு.

ஆனால் சீனர்கள் உலகம் முழுவதும் தாங்கள் சந்தைகளைத்தான் திறப்பதாக கூறுகிறார்கள். தங்களுடைய பிராந்தியத்துக்கு வெளியே உலகில் எந்த ஓரிடத்திலும் தாங்கள் போர்முனையைத் திறக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். சீன விரிவாக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க முதலீட்டு விரிவாக்கம்தான். உட்கட்டுமான அபிவிருத்திதான்.இந்த உட்கட்டுமான அபிவிருத்திகள் அனைத்தும் சீனாவை நோக்கி மூலப்பொருட்களை கொண்டு செல்லும் அதே சமயம் சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வெளிச் சந்தைக்கு கொண்டு வரும் நோக்கிலானவை. எனவே சீனா உலகம் முழுவதும் முதலீடுகளை மட்டுமே நகர்த்தி வருவதாக கூறிக் கொள்கிறது.

மாறாக மேற்கு நாடுகள் படைகளை நகர்த்துகின்றன. உலகின் பல்வேறு இடங்களில் மேற்கு நாடுகள் படைத்தளங்களைப் பேணி வருகின்றன. ஆனால் சீனா பொதுவாக முதலீடுகளைத்தான் நகர்த்தி வருகிறது. அது ஆக்கிரமிப்பு நோக்கிலானது அல்ல என்று சீனாவை ஆதரிப்பவர்களும் சீன முதலீடுகளை ஊக்குவிப்பவர்களும் கூறிவருகிறார்கள்.சீனா பல்வேறு நாடுகளின் படையெடுப்புக்கு உள்ளாக்கியதே தவிர சீனா ஒருபோதும் பிறநாடுகள் மீது படையெடுக்கவில்லை என்று அண்மையில் மகிந்த ராஜபக்ச உரையாற்றியிருந்தார்.சீனக்  கொமியூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு  நிறைவையொட்டி நடந்த வைபவத்தில் காணொளித் தொழில்நுட்பமூடாகக் கலந்து கொண்டு அவர் அவ்வாறு உரையாற்றினார்.

சீனாவுக்கு எதிராக தேவையற்ற பயம் ஒன்றை உலகம் முழுவதிலும் உள்ள ஒரு பகுதி விமர்சகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் கட்டி எழுப்பி வருவதாக சீனாவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது ஒருவித அச்ச நோய். அதாவது சீனா போபியா என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இது தனிய முதலீடு மட்டுமல்ல இதுவும் ஒரு ஆக்கிரமிப்புத்தான் என்று சீனாவை சந்தேகத்தோடு பார்ப்பவர்கள் கூறுகிறார்கள். பலமான ஒரு பொருளாதாரம் நிதி ரீதியாக நலிவுற்ற பொருளாதாரங்களின் மீது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு இதுவென்றும் தேவைகளை அடிப்படையாக வைத்து இயலாமையைச் சுரண்டி ஒரு சந்தை ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.அதை சீனாவின் கடன் பொறி அல்லது சந்தை குண்டு என்றும் அவர்கள் அழைக்கிறார்கள்.

மேலும் சீனப் பெருந்தலைவர் மாவோ சே துங் முன்பு கூறிய ஒரு கதையை அவர்கள் நினைவுபடுத்துகிறார்கள். பெரிய மீனும் சிறிய மீனும் வசிக்கும் ஒரு கடலில் பெரிய மீன் சிறிய மீன்களை தனக்கு உணவாகச் சாப்பிட்டு வந்தது. ஒரு கட்டத்தில் சிறிய மீன்கள் பெரிய மீனிடம் போய் முறையிட்டன. அப்பொழுது பெரிய மீன் கூறியது இங்கு எல்லோருமே சமம். அவரவர் அவரவருக்கு விருப்பமானதை சாப்பிடலாம் என்று. ஆனால் சிறிய மீன்களால் அவற்றின் சிறிய வாயால் எப்படி பெரிய மீனைச் சாப்பிடுவது ?

நாடுகளுக்கிடையே நிதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் பொழுது பலம் தொடர்பில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் பொழுது எல்லாரும் ஒன்றுதான் எல்லாருக்கும் சம வாய்ப்பு என்று கூறும்பொழுது பலமானது பலவீனமானதை தின்றுவிடும்.  வறிய நாடுகளை நோக்கிய சீனாவின் முதலீடுகளும் அப்படிப்பட்டவைதான் என்று சீன முதலீடுகளை விமர்சிப்பவர்கள்சுட்டிக் காட்டுகிறார்கள்.

இவ்வாறான வாதப்பிரதிவாதங்களின் பின்னணியில்தான் இலங்கைத் தீவிலும் சீன முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அவை தென்னிலங்கையை தாண்டி தமிழ்ப் பகுதிகளுக்கும் பரவத் தொடங்கி விட்டன.குறிப்பாக தென்னிந்தியாவுக்கு அணக்கமாக வந்து விட்டன.இதன் விளைவாக ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் அருண்ட கண்களுக்கு இருண்டதெல்லாம் சீனாவாகத் தெரிந்ததா?

 

 

SHARE