வடகிழக்கில் தேசியக் கொடி சர்ச்சை – தமிழர் தாயகப்பூமியில் தேசியத் தலைவர் பிரபாகரன் வடிவமைத்த புலிக்கொடியே பறக்கவேண்டும்
599
இலங்கையின் தேசியக் கொடி பற்றிய சர்ச்சை சமகால அரசியல் அரங்கில் மேலோங்கிவிட்டிருப்பதை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள். இந்த போக்கின் பின்னால் உள்ளார்ந்திருக்கும் அரசியல் நலன்கள், பேரினவாதிகளின் பாசிச நலன்கள், அவர்களின் நீண்டகால குறுங்கால தந்திரோபாயங்கள், அவர்களின் திசைவழி என்பன குறித்து அலட்சியப்படுத்திவிட முடியாது.
தேசியக் கொடி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் அவ்வளவு அக்கறைக்குரிய ஒன்றாக இல்லாமல் போய் நெடுங்காலம் ஆகிவிட்டாலும் கூட அரசியல் தளத்தில் தேசியக்கொடியை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அலட்சியப்படுத்திவிட முடியாது. மேலும் சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது நிருவனமயப்பட்டது என்று நாம் கூறும் போது அது எப்படி என்று நிறுவுவதற்கு இந்த சம்பவங்களின் போக்குகளே மூலாதாரங்களாக அமைகின்றன. அது தவிர அசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஒன்றை சவாலுக்குள்ளாக்கும் பேரினவாத அராஜகங்கங்களை நிறுவனமயப்பட்ட பேரினவாத கட்டமைப்பானது திரைமறைவில் அனுசரணை வழங்கவே செய்யும். அத்தகைய போக்கிற்கான சிவில் ஆதரவும் போதுமான அளவு கிடைக்கவே செய்யும். அதைத்தான் “நிருவனமயப்பட்டது” என்கிறோம்.
இலங்கையின் அரசியலமைப்பு, அரசியல் அதிகாரம், கல்வி கட்டமைப்பு, நீதி-நிர்வாகத்துறை, சிவில் நிறுவனங்கள், பௌத்த நிறுவனங்கள், ஊடகத்துறை என அனைத்துத் துறைகளும் சிங்கள பௌத்த பேரினவாதமயப்படுத்தப்பட்டது தான் என்பதை வரலாறு மீள மீள உறுதியாக தெளிவுபடுத்திவந்திருக்கிறது. எனவே தான் அதனை மாற்றியமைப்பதும் அத்தனை இலகுவான காரியமல்ல என்பதை நீதி கோரும் சக்திகள் அனைத்தும் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதற்கான தொடர் போராட்டம் என்பது சகல வழிகளிலும், சகல வடிவங்களிலும், சகல உத்திகளாலுமே சாத்திப்படுத்தலாம். எனவே தான் தேசிய கொடி விடயத்தையும் ஒரு “விவகாரமாக” அணுகுவது அவசியமாக ஆகியிருக்கிறது.
முன்னெடுத்துள்ள சக்திகள்?
கடந்த மூன்றாண்டுகளுக்குள் பேரினவாதத்தை பட்டை தீட்டியதில் பொது பல சேனாவின் பங்கு பாரியது. சற்று ஓய்ந்திருந்த பேரினவாத சக்திகளை உசுப்பேத்தி வெளிக்கிளரச் செய்ததில் அதன் பங்கு முக்கியமானது. உண்மையை சொல்லப்போனால் இத்தகைய பேரினவாத கிளர்ச்சியை முன்னெடுப்பதற்கான ஓர்மமும், பலமும் ஜாதிக ஹெல உறுமயவிடம் தான் இருந்தது. ஆனால் அதன் பாராளுமன்ற பாதை அதன் வீரியத்தை சற்று ஜனநாயகப்படுத்தியிருந்தது. அந்த இடைவெளியையே பொது பல சேனா நிரப்பியது. அப்படிப்பட்ட பொது பல சேனா மிகக் குறுகிய காலத்தில் இராட்சத பலத்தை அடைந்ததற்கு மகிந்த அரசாங்கத்தின் அனுசரணை முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
பொது பல சேனாவின் அடக்கமுடியாத அடாவடித்தனங்களை அதனை ஆக்கியவர்களால் கூட அடக்க முடியாத நிலை தோன்றியது. சென்ற வருடம் இதே மாதத்தில் அழுத்கமையில் மேற்கொண்ட கலவரம் பொது பல சேனாவின் பலத்துக்கு ஒரு சான்று என்பது மட்டுமல்ல அதன் பலவீனத்துக்கும் சான்றாக அமைந்தது. பொது பல சேனாவுக்கும் தமக்கும் ஓட்டும் இல்லை, உறவும் இல்லையென்று பலர் தப்பியோடினார்கள். ஆனால் பொது பல சேனா தம்மை சிங்கள பௌத்த தரப்புக்கு தலைமையாக்கும் பிரயத்தனங்கள் எதுவும் பலிக்கவில்லை. பல செயற்திட்டங்களை பாரிய அளவில் மேற்கொண்ட போதும் அவை எதுவும் வெற்றிபெறாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தரப்புக்கு ஆதரவை தெரிவிக்க கூட முடியாத நிலை தோன்றியது. எவருக்குமே பொது பல சேனாவின் ஆதரவு தேவையில்லை ஆளை விட்டால் போதும் என்கிற நிலை உருவானது. மகிந்த தரப்பின் தோல்விக்கு பொது பல சேனாவின் பாத்திரமும் முக்கியமானது என்பதை மகிந்த தரப்பே பகிரங்கமாக ஒப்புகொள்ள வேண்டிய நிலை இன்று.
இப்படி கையறு நிலைக்கு தள்ளப்பட்ட பொது பல சேனா 50க்கும் மேற்பட்ட வழக்குகளை தற்போது எதிர்கொண்டபடி இருக்கிறது. வழக்குகளை எதிர்கொள்வதிலும் அதற்கான நியாயங்களை ஊடகங்களுக்கு எடுத்துரைப்பதிலும் அதன் சக்தியை செலவிட வேண்டிய நிலை இப்போது. பொதுபல சேனாவின் வீரியம் இப்படி குறைக்கப்பட்ட நிலையில் தோன்றியது தான் “சிங்களே ஜாதிக பெரமுன” என்கிற அமைப்பு. “சிங்கள ராவய”, “ராவணா பலய” போன்ற அமைப்புகளும் மகிந்த ஆதரவு அணியில் இருந்துகொண்டு இனவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் பொது பல சேனாவின் முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் போனது. சமீபத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பகிரங்கமாக கூறிய ஒரு தகவலும் முக்கியமானது. தன்னை பல கோடிகளுக்கும், பதவிகளுக்கும் விலைபேசுவதற்காக “ராவணா பலய” அமைப்பையே மகிந்த தரப்பு அனுப்பியிருந்ததாக கூறியிருந்தார். ஆக நேரடியாகவே மகிந்த சார் பேரினவாத போடுதடிகளாக செயற்பட்ட சக்திகள் இவை.
இன்றைய பேரினவாத தலைமை?
ஆனால் இன்றைய இனவாத போக்குக்கு தலைமை தாங்கத் தொடங்கியிருப்பது யார். அது சிங்களே ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி).
இந்த அமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி தம்மை ஒரு சிங்கள பௌத்த அரசியல் அமைப்பாக ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி பிரகடனப்படுத்திக்கொண்டது. இது ஒரு வெறும் சிவில் அமைப்பல்ல. தம்மை அரசியல் கட்சியாக பிரகடனம் செய்திருக்கிறது. அமைப்பின் இலக்கு குறித்து மூன்று பக்கங்களில் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூட “தனிச்சிங்க” தேசியக் கொடியை முகப்பின் தலைப்பில் இட்டிருந்தனர்.
சிங்கள ஜாதிக பெரமுன என்கிற இன்னொரு அமைப்பு இதற்கு முன்னர் இயங்கி வந்தது. தமிழ் அரசியல் கட்சிகள் இனிமேல் “தமிழ்”, தமிழ் தேசியம்”, “ஈழம்” போன்ற பெயர்களை வைக்கக்கூடாது என்று 2012இல் வழக்கு தொடர்ந்திருந்தது இது. அதுபோல 2013இல் வடக்கில் சிங்களவர்கள் மீள குடியேற்றப்படும்வரை மாகாணசபை நடத்தக்கூடாது என்று போராடிய அமைப்பு. ஆனால் அந்த அமைப்பு அல்ல இந்த புதிய அமைப்பு. இரண்டுக்கும் வித்தியாசம் பழையது “சிங்கள”, புதியது “சிங்களே” என்று தொடங்குகிறது.
“நமது நாட்டில் 60 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட சிங்கள பௌத்த கட்சி இல்லை. தமிழர்களும் மரக்கலகாரர்களும் தேசிய அளவில் எந்த நலன்களுக்காகவும் இருக்க மாட்டார்கள் ஆனால் தமது தேசிய இன நலன்களுக்காக முண்டியடித்துவந்து விடுகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் குறித்தோ அல்லது மாணவர்களின் போராட்டங்களுக்கு கூட அவர்கள் பங்குபற்றுவதில்லை. இப்போது எங்களுக்கு என்று சிங்கள பௌத்த கட்சியை உருவாக்கியிருக்கிறோம்” என்று அதன் பொருளாளர் திஸ்ஸ பியகுன அறிவித்திருந்தார். “இனி வரும் நாட்களில் எங்களால் பல அரசியல் கதிரைகள் சூடு பிடிக்கும்.” என்று அதன் அமைப்பாளர் ஜினானந்த தேரர் அங்கு அறிவித்திருந்தார்.
இந்த அமைப்பின் ஆரம்பமே தேசியக் கொடி சர்ச்சையிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. 200ஆண்டுகளுக்கு முன்னர் 1815 மார்ச் 2 அன்று ஏற்றப்பட்ட ஆங்கிலேயர்களின் கொடியை அன்றே இறக்கியவர் வாரியபொல ஸ்ரீ சுமங்கலதேரர். அதன் நினைவாக கடந்த மார்ச் 2ஆம் திகதி அதே இடத்தில் சிங்களக் கொடியை ஏற்றியே தீருவோம் என்று சிங்களே ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி) பெரிய ஊர்வலமாக கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்றது. பொலிசாரின் எதிர்ப்பையும் மீறி பிக்குகளின் தலைமையில் அடாவடித்தனமாக ஆவேசத்துடன் நுழைந்து அங்கிருந்த தேசியக்கொடியை இறக்கி விட்டு தமிழ்-முஸ்லிம் இனங்களை பிரநிதித்த்துவப்படுத்தும் பச்சை செம்மஞ்சள் நிறங்கள் அகற்றப்பட்ட சிங்கம் மட்டும் இருக்கின்ற “சிங்கக்கொடியை” ஏற்றினார்கள். தம்மை தீவிர சிங்கள பௌத்த வீரர்களாக சித்திரித்து சர்சைக்குள்ளாக்கிக்கொள்வதன் மூலம் அனைவரதும் கவனிப்பைப் பெறும் கைங்கரியத்தையே அவர்களும் கையாண்டார்கள். அங்கு அவர்களுக்கு கிடைத்த புகழும், கவன ஈர்ப்பும் அவர்களின் அடுத்த நடடிக்கைகளுக்கு மனத்திடத்தை கொடுத்திருந்தது. தொடர்ந்தும் அந்த கொடியையே தேசிய கொடியாக ஆக்கவேண்டும் என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
இவர்களே தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்களையும், பிரசாரங்களையும் சமீபத்தில் முன்னெடுத்தவர்கள். மார்ச் 23 அன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் இவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் சிங்களத்தில் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தார்கள். அங்கும் பகிரங்கமாக தனிச் சிங்கள சிங்கக் கொடியை பலரும் ஏந்தியபடி இருந்தார்கள்.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மருதானை சமூக சமய நிலையத்தில் (CSR) மனித உரிமையாளர்களால் நடத்தப்படவிருந்த காணாமல் போனோரின் பெற்றோர்களின் கூட்டத்தை நடத்தவிடாமல் கைகலப்பில் ஈடுபட்டு அதனை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தியதும் இந்த அமைப்பே.
குருகல முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றும் போராட்டத்தில் தீவிரமாக இருந்த சிங்கள ராவய அமைப்புடன் சேர்ந்து இயங்கியது இந்த சிங்களே ஜாதிக பெரமுன. இறுதியில் அந்த பள்ளிவாசலை அகற்றிவிட அரசாங்கம் தீர்மானம் எடுத்தது. ஆக இந்த வெற்றியில் இந்த அமைப்புக்கு முக்கிய பாத்திரமுண்டு.
மகிந்த மட்டுமே சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலுக்கு வாய்ப்பானவர் என்கிற நம்பிக்கை இவர்களுக்கும் உண்டு. கடந்த மாதம் 23ஆம் திகதி கோத்தபாயவை லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரிப்பதற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் “தனிச் சிங்கள தேசியக் கொடியை ஏந்தி வந்திருந்தார்கள். அன்றைய தினம் பொது பல சேனா இந்த கொடி விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் சிங்களே ஜாதிக பெரமுன, “ஸ்வர்ண ஹங்ச பதனம” (இந்த அமைப்பு மாகாணசபை முறைக்கு எதிராக போராடிவரும் ஒரு அமைப்பு) மற்றும் “ராவணா பலய” ஆகிய அமைப்புகளே நூற்றுக்கணக்கான தனிச் சிங்கள கொடிகளை விநியோகித்திருக்கிறார்கள். சிங்கள பௌத்தத்தை உறுதி செய்வதற்காக கோத்தபாய உருவாக்கிய அணிகளே இவை.
தேசியக் கொடியின் பயன்பாடு குறித்து சட்டமியற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே சட்டத்தை மீறும் வகையில் (அதுவும் அரசியலமைப்பில் உறுதிபடுத்தப்பட்ட தேசியக்கொடியை திரித்து) திரிபுபடுத்தப்பட்ட தேசியக்கொடியை பயன்படுத்தியது பாரதூரமானது. டலஸ் அலஹப் பெருமா மாத்திரமே பகிரங்க மன்னிப்பை கோரினார். ஏனையோர் நியாயப்படுத்தினர். சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பாளர் ஜினானந்த தேரர் 28 நடத்திய ஊடக மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கையில் “இதுவே எங்கள் தேசியக் கொடி 1951இல் தேசிய கொடியை உருவாக்குவதற்கான குழுவிடம் சாட்சியமளித்த 160 பேரில் 97 பேர், அதாவது பெரும்பாலானோர் இந்த தனிச் சிங்கக் கொடியே தேசியக் கொடியாக அமைய வேண்டும் என்றார்கள். ஆனால் அதனை உதாசீனப்படுத்திவிட்டு சிறுபான்மை இனங்களின் பேச்சைக் கேட்டு கொடியை இப்படி ஆக்கிவிட்டார்கள்” என்றார்.
ஜினானந்த தேரர் திடீரென்று தொன்றியவரல்லர். அவர் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் (Patriotic National Movement) எனும் அமைப்பின் தலைவர். ஜெனிவா போர்க் குற்றச்சாட்டுக்கு எதிராக பெருமளவு போராட்டங்களை முன்னெடுத்து வரும் அமைப்பு அது. கடந்த வருடம் செப்டம்பர் 29 அன்று ஜெயக்குமாரியை விடுவிக்கக் கோரி சிவில் அமைப்புகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக அவர்களுக்கு அருகிலேயே அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததும் இந்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தான். குருகல பள்ளிவாசலை அகற்றுவதற்காக 03.05.2011இல் உருவாக்கப்பட்ட “பொதுஜய இயக்கத்தின்” (Bodujaya Organisation) தலைவரும் இவர் தான். 2008ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று தலாஹேன பகுதியில் கல்வாரி தேவாலயத்தின் மீது தாக்குதல் தொடுத்த வழக்கின் 13 சந்தேக நபர்களில் ஜினானந்த தேரரும், ஞானசார தேரரும் அடங்குவர். அந்த சம்பவத்தின் போது அங்கிருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட குற்றச்சாட்டும் இவர்களின் மீது சுமத்தப்பட்டிருந்தது.
சிங்கள பௌத்த கொடி
தமிழர்களைப் பொறுத்தளவில் இது பற்றி 1951இல் நடந்த பாராளுமன்ற விவாதத்தில் பேசிய தந்தை செல்வநாயகம், இலங்கையின் தேசியக் கொடி, சிங்களவர்களின் சிங்கம், தமிழரின் நந்தி, முஸ்லீம்களின் பிறை
என்பவற்றைக் கொண்டதாக அமைய வேண்டும் என்று பிரேரித்திருந்தார் அதனை வட்டுக்கோட்டை எம்.பீ திரு ஜே.கணகரத்தினம் ஆமோதித்திருந்தார். சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது நாட்டின் எப்பகுதியிலாவது நந்திக்கொடியை ஏற்றக்கூடாது எனவும் சிங்கக்கொடியை ஏற்றுவது பொருத்தமற்றது எனக் கருதினால் ஆங்கிலக் கொடியை ஏற்றலாம் எனவும் அன்றைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழரசு கட்சி நடத்திய பல நிகழ்வுகளில் நந்திக் கொடியை ஏற்றியதாக பதிவுகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தை இறுதியாக ஆண்ட சங்கிலியன் மன்னனின் கொடியே நந்தி கொடி என்பது தெரிந்ததே.
தென்னிலங்கையில் சிங்கக் கொடி ஏற்றும் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது தன்னாட்சியை வெளிப்படுத்த நந்திக் கொடி ஏற்றுவர் எனத் தமிழ்த் தலைவர்கள் அறிவித்தனர். அதனால் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கக் கொடியோ நந்திக் கொடியோ பறக்கவிடக் கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் தமிழர் பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளே பறக்கவிடப்பட்டிருந்தன.
கொடியில் இரண்டு சிறுபான்மை இனங்களும் சிங்கள தேசத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், அந்த இனங்களைத் தடுத்து நிறுத்தவதற்காக, சிங்கம் தன் கையில் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது என தேசியக்கொடி உருவாக்கக் குழுவில் இருந்து அன்று வெளியேறிய செனட்டர் நடேசன் அதனை எதிர்த்திருந்தார். 1951இல் அது ஒரு சிங்களக் கொடியாக ஆனது போல 1972ஆம் ஆண்டில் அது சிங்கள பௌத்த கொடியாக ஆக்கப்பட்டது. 1972ஆண்டு அரசியலமைப்பில் முதன் முறையாக பௌத்த மதம் அரச மதமாக ஆனது மட்டுமல்ல தேசியக் கொடியில் சிங்கம் இருக்கும் கட்டத்தினுள் நான்கு மூலையிலும் பௌத்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரச இலை வைக்கப்பட்டது. அன்றிலிருந்து தேசியக்கொடி சிங்கள பௌத்த தேசியக் கொடியாகவே ஆகிவிட்டது. கண்துடைப்புக்காக இருக்கும் பச்சை, செம்மஞ்சள் கோடுகளையும் கூட நீக்கிவிடும்படி மிரட்டிவருகின்ற பேரினவாதத்தின் தொடர் போராட்டம் இன்னும் பல தசாப்தங்களுக்கு தொடரும் என்றே கணிக்க முடிகிறது.
சிங்கள பேரினவாத சக்திகள் சமீப காலமாக சமூக ஊடகங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான சமூக வலைத்தளங்களை தமது பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருவதுடன் அவர்களின் அரசியல் எதிரிகளின் வாதங்களை முறியடிக்க அவற்றை பாரிய அளவு பயன்படுத்திவருவதை காணக்கூடியதாக இருக்கிறது. தேசியக் கொடி விடயத்திலும் கூட இனவாத தரப்பை நியாயபடுத்தும் பிரச்சாரங்களே இணையங்களில் அதிகம் தேடிப் பெறக்கூடியதாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிங்கக் கொடியின் ஆணுறுப்பிலுள்ள இரண்டு பந்துகளையும் செம்மஞ்சள், பச்சை நிறமூட்டி அதையே தேசியக் கொடியாக பரிந்துரைப்பதாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது.
நிறுவனமயப்பட்ட பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு காலத்துக்கு காலம் வெவ்வேறு நபர்களும், அமைப்புகளும் மாறி மாறி தோன்றி தலைமை தாங்கி வந்திருக்கின்றன. பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலில் மாற்றங்கள் இருக்காது, அதன் மூலோபாயத்தில் மாற்றமிருக்காது. அதன் வீரியத்தின் அலைவரிசை சற்று மேலும் கீழும் ஏறி இறங்கியிருக்கிறது. அதன் பாய்ச்சலின் வடிவம் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் அதன் பண்பில் அதன் உறுதியில் மாற்றம் கண்டதில்லை என்பதை வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.