வடகிழக்கு இணைந்ததே தமிழர் தாயகம் – தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையவேண்டியது காலத்தின் கட்டாயம்

565

இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இந்நாட்டில் மீண்டும் தமது குடும்ப ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியைப் போன்றதான ஆட்சியைக் கொண்டுவருவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்தி, இந்த நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினையே நீண்டகாலமாக இருந்தது என்று கூறி, தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினையை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்வதை விரும்பாத அரசாங்கம், இவ் விடயம் என்பது உள்நாட்டுப் பிரச்சினை என முடிவுக்குக் கொண்டுவர தற்போதைய அரசும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

1983 – 2009 வரை இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் இன, மத, மொழி ரீதியாக தமது இனவாதத்தை விதைத்துக்கொண்டே வந்தனர். பின்னாட்களில் இவையே தமிழினமும், சிங்கள இனமும் மோதிக்கொள்ளக் காரணங்களாக அமைந்தது.

தற்போது ஐந்து மாகாணங்களாக மட்டும் இலங்கையைப் பிரித்து ஆட்சிக் கொண்டுசெல்லும் நடவடிக்கையை இலங்கையரசு மேற்கொண்டு வருகிறது. ஒருபுறத்தில் மௌனமானப் போராக தொல்பொருள் ஆராய்ச்சிகள், புராதன இடங்களை அடையாளப்படுத்துகின்றோம் என்கிற பெயரில் தமிழர் பிரதேசங்கள் சுரண்டப்படுகிறது. இன்றைய சூழலில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் இணைந்து பயணிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. எமது விடுதலைக்கானப் போர் தொடர்ந்தும் இந்த நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றபோது சிங்களப் பேரினவாத அரசுகள் எல்லாம் எம்மினத்தை பயங்கரவாதிகள் என்றே பார்த்துவந்தனர் / பார்த்து வருகின்றனர். தற்போது நாட்டில் யுத்தமற்ற ஒரு சூழ்நிலையில் சமாதான அமைப்புக்கள் ஊடாக நல்லிணக்கச் செயற்பாடுகளை பேணுவதன் ஊடாகவே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் சமத்துவமாக வாழக்கூடிய சூழல் இந்நாட்டில் உருவாகும்.

ஆகவே வடகிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு 20ஆவது திருத்தச்சட்டம் என்பது பாரிய அழிவையே தரப்போகின்றது என்று கூறலாம். இந்த நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலே மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் அந்தந்த மாகாண சபைகளுக்குக் கிடைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகவே வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான அரசியல்த் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மீண்டுமொரு யுத்தம் இந்நாட்டில் இடம்பெறாத வகையில், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடராத வகையில், அரச ஒட்டுக்குழுக்களாகச் செயற்படுகின்ற தமிழ் அரசியல்க் கட்சிகள் அரசாங்கம் கூறுகின்ற ஒவ்வொரு விடயங்களுக்கும் தலைசாய்க்காது தமிழினத்தின் நன்மை கருதி செயற்படவேண்டும்.

இத்தகையதொரு சூழலில் வடகிழக்கு பிரிந்து இருப்பது என்பது அல்லது இணைந்த வடகிழக்கு தொடர்ந்தும் பிரிந்து இருப்பது என்பது அரசியல் ரீதியாகவும், மாகாணத் தேர்தல் முறைமையிலும் பாரிய சிக்கல்களை உருவாக்கும். ஆகவே தமிழ் அரசியல்வாதிகள் இதனை நன்கு சிந்தித்து ஒரு கூட்டுமுயற்சியாக இனிவரும் காலங்களில் செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே தொடர்ந்தும் வடகிழக்கில் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழலாம்.

சுழியோடி

SHARE