தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக் கில் இரத்த ஆறு ஓடும் தேரர்கள் கொந்தளிப்பு – அதைப் பார்ப்பதற்கு இவர்கள் உயிருடன் இருப்பாரா? என்பதில் சந்தேகம்

644

 

தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக் கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் கொந்தளிப்பு

சமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே தேரர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

சமஷ்டி என்றால் பிரிவினை. அது தனிநாடு என்றுதான் அர்த்தம். அதாவது இந்தச் சமஷ்டி தீர்வு இலங்கையைப் பிளவுபடுத்தும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையும் தீர்ப்பையும் தூக்கிக் குப்பையில் வீசுங்கள்.

தமிழர்களுக்கு சமஷ்டி வழியில் தீர்வு வழங்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தனிநாடு கோரி மீண்டும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். மீண்டும் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட நாம் விரும்பவில்லை.

அரசு வழங்கும் தீர்வைத்தான் தமிழர்கள் ஏற்கவேண்டும். அதைவிடுத்து மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ராஜபக்சக்களின் இந்த ஆட்சிக்காலத்தில் அரசுடனும் சிங்கள மக்களுடனும் ஒன்றிணைந்து பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும். இது சிங்கள பௌத்த நாடு. எனவே, தமிழர்கள் தனிவழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.

அப்போதுதான் சிங்கள மக்கள் விரும்பும் தீர்வைத் தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் தீர்வு என்பது தமிழர்களுக்கு எட்டக்கனியாகவே இருக்கும். பிரபாகரனின் சிந்தனையில் செயற்படுவதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி சிங்கள அமைப்புக்களால் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சமஷ்டி பிரிவினை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய அரசியல் கால நீரோட்டத்தில் மக்களை உசுப்பேற்றிவிட்டு பௌத்த தர்மத்திற்கு எதிராக இவ்வாறான போலி பௌத்த துறவிகள் செயற்படுவது ஆரோக்கியமற்றதொன்று. காலத்தின் தேவை கருதி இவர்களுடைய நடவடிக்கைகள் எப்போதும் பௌத்த மதத்தை விற்பனை செய்வதாகவே அமைகின்றது. புத்த பெருமானின் போதனைகளில் ஒன்று ‘எறும்பைக் கூடக் கொல்லக்கூடாது’ என்பதாகும். ஆனால் இவர்கள் மாறாக எறும்பைக் கொல்வதைப் போன்று மக்களை உயிருடன் கொல்கின்றார்கள்.

தென்னிலங்கையில் தேர்தல் காலகட்டத்தில் இனவாதத்தைப் பேசிவிட்டால் பௌத்தர்கள் ஒன்றிணைவார்கள் என்பது இவர்களுடைய அல்லது இவரைப் பேசத்தூண்டியர்களின் நிலைப்பாடு. இவ்வாறான கருத்துக்களை இந்த பௌத்த துறவிகள் தெரிவிக்க, வடகிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதம் பேசுகிறார்கள் என்று அவர்களின் அடிவருடிகளாகச் செயற்படுகின்ற ஊடகங்களும் அதனைப் பெரிதுபடுத்திக் காட்டுகின்றது.
தமிழினத்தைக் கொத்துக்கொத்தாக ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கொலை செய்தார்கள்.

அப்போதெல்லாம் பௌத்த தர்மம் எங்கே போனது. தமிழர்களின் விலைமதிக்க முடியாத சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை அழிப்பதாக நினைத்து ஒட்டுமொத்தத் தமிழினத்தையே அழிக்க நினைத்த முதலாவது வரலாறு இலங்கையில் பதிவாகியது. அதற்காக அண்டைய நாடுகளும் சிங்கள அரசுகளுக்கு உடந்தையாகச் செயற்பட்டனர். அவர்கள் தமது இருப்பை இலங்கையில் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் கவனமாக இருந்தனர்.

ஞானசார தேரருடைய கருத்துக்களுக்கு தமிழ்க் கட்சித் தலைவர்கள் அல்லது அரச கைக்கூலிகளாக செயற்படுபவர்கள் ஏன் இதுவரை மௌனம் காத்து வருகிறார்கள். பௌத்த துறவிகள் இந்நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மமதையில் அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். தமிழினத்தின் மீது வெறி பிடித்தவர்களாக அவர்;களை சர்வதேச, உள்ளுரில் புலிப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க கலகொட அத்தே ஞானசார தேரர் போன்ற பல பௌத்த துறவிகள் முயற்சித்து வருகிறார்கள். இவர்களுக்குச் சமாதி கட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை. யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் இவர்கள் தொடர்ந்தும் இனவாதக் கருத்துக்களையே பேசி வருகின்றனர். இராஜதந்திரம் என்ற போர்வையில் தமிழ் அரசியல் தலைமைகளையும் தமிழினத்தையும் இல்லாமலாக்கி அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்ளத் துடிக்கிறார்கள். ஏற்கனவே வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறியவர் ஹிஸ்புல்லா. இவருக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகளை போர் முனையில் போராடி ஒரு போதும் வெல்ல முடியாது என்பது இலங்கை இராணுவத்திற்குத் தெரியும். அதற்காகவே அமெரிக்கா உட்பட்ட சர்வதேச நாடுகளின் உதவி இலங்கையரசினால் பெறப்பட்டது.

சிங்கள இனவாதிகளுடைய கருத்துக்களை உலகமெல்லாம் எடுத்துரைத்த தமிழ் ஊடகவியலாளர்களும் ஊடகப்போராளிகளாகவே தம்முயிரை தமிழினத்திற்காகக் கொடுத்துள்ளனர். இன்றுவரை அதற்கானத் தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை. பௌத்த இனவாதத் துறவிகள் அனைவருமே தமது மதம் சார்ந்த விழுமியங்களைக் காப்பாற்றுவதற்கும் தமிழ் மக்களுடைய பிரதேசங்களை தொல்பொருள் ஆராய்ச்சி என்கிற போர்வையில் அபகரிப்பதற்கும் நோக்கிலுமே தீவிரமாகச் செயற்படுகின்றார்கள். உலக நாடுகளுடன் இணைந்து தமிழினத்தை அழிப்பதற்கான ஒரு முயற்சியை இவர்கள் மேற்கொண்டார்கள். அது கைகூடவில்லை. மாறாக ஏதொவொரு வகையில் தமிழினத்தை அடக்கியாளவேண்டும் என்று பௌத்த துறவிகளும் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். 30 ஆண்டுகள் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை ஆண்ட ஒரு தமிழன் தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். 30 ஆண்டுகளும் சிம்மசொப்பனமாகவே அவர் இலங்கையரசிற்கு விளங்கினார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை சிங்கள அரசியல்வாதிகளும், உலக நாடுகளும் ஏற்றுக்கொள்கின்றன.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஞானசார தேரர் போன்று இன்னும் பலரும் இனவாதக் கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனாலும் இவர்களால் தமிழினத்தை வெற்றி கொள்ள முடியாது. இன்று பரந்துபட்ட அளவில் தமிழ் மக்களுடைய அரசியல் செயற்பாடுகள் மற்றும் கல்வி வளர்ச்சி, தொழில்நுட்பம் சார்ந்த பல துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கலகொட அத்தே ஞானசார தேரர் மட்டுமல்ல ஏனைய பல பௌத்த துறவிகளும் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்க்கவேண்டும். புத்த பெருமான் போதித்த அஹிம்சை ரீதியானப் போதனைகளைத் தான் நீங்கள் மக்கள் மத்தியில் விதைக்கவேண்டும். அதாவது நீங்கள் ஒரு ஆன்மீகப் பாதையில் மக்களை அழைத்துச்செல்வதுதான் சிறந்தது. அதனைவிடுத்து ‘எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றுகின்ற’ செயற்பாடுகளை மேற்கொள்வது என்பது மீண்டும் இலங்கையில் கலவரங்களை நோக்கியே மக்களை இழுத்துச் செல்லும்.

‘விதைத்துக்கொண்டேயிரு, முளைத்தால் மரம் இல்லையேல் உரம்’ என்று சேகுவேரா கூறியதைப்போன்று தமிழினம் விதைத்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினத்தின் விடிவைநோக்கி. அந்த விதை முளைத்தால் மரமாக இல்லையேல் உரமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்பதை கலகொட அத்தே ஞானசார தேரர் அறிந்துவைத்திருப்பது நல்லது. இல்லை இல்லை இரத்த ஆறு ஓடும் என்ற விடயத்தை அவர் தனது கண்களால் பார்க்கவேண்டும் என்று அவர் துடியாய்த் துடிப்பாராகவிருந்தால், அவர் அதனைப் பார்ப்பதற்கு உயிருடன் இருப்பாரா என்பது சந்கேத்தை வலுப்படுத்தித் தான் நிற்கும்.

(நெற்றிப்பொறியன்)

SHARE