
திட்டமிட்டபடி தை திங்கள் நாளில் அகிம்சை வழி போராட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாவட்ட க் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக் கின்றார்.
நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றுகையில்,
வடமாகாணத்தில் அரசாங்கம் மற்றும் படையினரினால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் மக்களின் கலை, கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை சிதைக்கும் நடவடிக்கைகளும் நன்று திட்டமிட்டே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் நாங்கள் கூறியிருந்தோம்.
தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளங்களையும் சிதைக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று. அல்லாதுபோனால் நாம் 2015ம் ஆண்டின் தை திங்கள் நாள் தொடக்கம் அகிம்சை போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும். ஆனால் எவ்விதமான மாறுதலும் உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் நாங்கள் திட்டமிட்டவாறே தை திங்கள் நாள் தொடக்கம் அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இதற்கு முன்னரும் நாங்கள் பல அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்தோம். ஆனாலும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவையும் கடமையும் எழுந்துள்ளது.
எனவே எதிர்வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர் கூடி அகிம்சை வழிப் போராட்டங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.
அதன் பின்னர் வடகிழக்கில் கிராமங்கள் தோறும் சென்று எமக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளைக் கூறி முன்னரே திட்டமிட்டவாறு மாபெரும் அகிம்சை போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
இதேபோன்று இந்தப் போராட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்றக் கூடிய மற்றய தரப்புக்களையும், சிவில் சமூக அமைப்புக்களையும், தென்னிலங்கை முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைக்க அவர்களுடனும் பேசவுள்ளோம்.
எனவே ஒட்டுமொத்ததில் நாங்கள் தீர்மானித்தவாறு அகிம்சை வழி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதுவே இப்போதுள்ள ஒரே வழி என்றார்.