வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா நூதன போராட்டம்

642
  • வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான முறுகல் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வடகொரியாவுக்கு எதிராக தென்கொரிய மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஹீலியம் நிரப்பப்பட்ட பெரிய அளவிலான மிதக்கும் பலூன்களின் மூலம், வட கொரியாவுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை அந்நாட்டிற்குள் அனுப்பி தென் கொரிய ஆதரவாளர்கள் நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வட கொரியாவில் இருந்து வெளியேறியவரும், தென் கொரியாவின் தற்போதைய ஆதரவாளருமான பார்க் சாங் ஹக் தலைமையிலான 30 பேர், “மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை வட கொரியா நிறுத்த வேண்டும்’ என்று கூறி எல்லைப்புற நகரமான பாஜுவில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த பலூன்களில், வட கொரியாவுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களோடு அமெரிக்காவின் ஒரு டொலர் மதிப்புடைய 2,000 நோட்டுகளும், வட கொரியாவின் மனித உரிமை மீறல்களை விளக்கும் 400 குறுந்தட்டுக்களும், தென் கொரியாவின் பொருளாதார சாதனைகளை உள்ளடக்கிய 300 சிறு புத்தகங்களும் அனுப்பப்பட்டன.

    “வட கொரியர்களின் சுதந்திரம் மற்றும் உரிமைக்கு, தன்னாலான அனைத்து முயற்சிகளையும் சர்வதேச சமுதாயம் மேற்கொண்டு வருகிறது என்பதை அந்நாட்டினருக்கு உணர்த்தவே இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்று பார்க் சாங் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE