வடகொரியாவிற்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை.

419

அணுவாயுத பாவனை முற்றாக ஒழிக்கப்பட்ட வடகொரியாவை பார்க்க விரும்பும் அதேவேளை, அதற்காக வடகொரியாவிற்கு அழுத்தம் கொடுத்து அவசரப்படுத்த போவதில்லை என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அணுவாயுத பாவனை முற்றாக ஒழிக்கப்பட்ட ஒரு வடகொரியாவை நாம் காண்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதனால், இவ்விடயத்தில் குறித்த கால எல்லையை நிர்ணயித்து வடகொரியாவிற்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை.

இந்த நெருக்கடியை தீர்க்கும் பட்சத்தில் வடகொரியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என நாம் நம்புகிறோம்.

வடகொரியாவில் தற்போது எவ்வித அணுவாயுத சோதனைகளும் இடம்பெறுவதில்லை. எனவே, இவ்விவகாரத்தில் அவசரப்பட போவதில்லை.

எதிர்காலத்தில் மிகவும் சாதகமான விடயங்கள் இடம்பெறும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-இற்கும் இடையிலான இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு எதிர்வரும் 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களில் வியட்நாமில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE