அமெரிக்கா வடகொரிய சரக்குக் கப்பலை மூர்க்கத்தனமான முறையில் கைப்பற்றி வைத்துள்ளமை அமெரிக்க மற்றும் வட கொரிய உறவுகளின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என ஐக்கிய நாடுகள் சபைக்கான வட கொரிய தூதுவர் கிம் சோங் எச்சரித்துள்ளார்.
அந்த சரக்குக் கப்பலை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர் நேற்று ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் வலியுறுத்தினார்.
வட கொரியாவின் இரண்டாவது மிகப் பெரிய சரக்குக் கப்பலான வைஸ் ஹொன ஸ்ட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெருமளவு நிலக்கரியை ஏற்றிச் சென்றவேளை இந்தோனேசியாவால் முதலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்தக் கப்பல் ஐக்கிய நாடுகள் தடையை மீறி நிலக்கரியை ஏற்றிச் சென்றதால் அதனை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கா கடந்த 9 ஆம் திகதி அறிவித்திருந்தது.
வட கொரியாவுடனான உறவுகள் தொடர்பில் மென்மையான போக்கு கடைபிடிக்கப்படும் தருணத்தில் இத்தகைய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
சரக்குக் கப்பல் கைப்பற்றப்பட்டது முதற்கொண்டு அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வையும் வடகொரியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக கிம் சோங் தெரிவித்தார்.
அந்தக் கப்பலை கைப்பற்றும் நடவடிக்கை வடகொரியா மீது ஆகக் கூடிய அழுத்தத்தைப் பிரயோகித்து அந்த நாட்டை மண்டியிடச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்கா தனது மூர்க்கத்தனமான செயற்பாடுகள் எதிர்கால முன்னேற்றத்தில் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கிம் சோங் மேலும் தெரிவித்தார். அந்த சரக்குக் கப்பலை கைப்பற்றியுள்ளமை வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் தீவிர விரோத மனப்பான்மையின் வெளிப்பாடொன்றாக உள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்கா சர்வதேச சட்டத்தையும் நாடுகளுக்கும் அவற்றின் உடைமைகளுக்கும் எதிராக பிற நாடுகள் சட்ட நடவடிக்கை எடுப்பதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையையும் மீறி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ கட்டரெஸ், கொரிய தீபகற்பத்திலான ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்புச் செய்யக் கூடிய அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்நடவடிக்கைகள் எவை என்பது தொடர்பில் வினவப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்க அவர் மறுத்துள்ளார்.