வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் ஏற்கனவே வடகிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தமிழினத்திற்கு தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத வடமாகாண ஆளுநர், வவுனியாவில் உள்ள போதிதக்ஷணராமய விகாரையில் அடுத்த மாதம் 22ம் திகதி மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளப்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளர்.
வடக்கில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் வடக்கு ஆளுநரின் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் பாரிய சிக்கல்களை தோற்றுவித்துள்ளன. மும்மொழிப் பயன்பாட்டின் அவசியத்தை வெளிப்படுத்திய சுரேன் ராகவன் பௌத்த மாநாடு குறித்த அறிவிப்பை சிங்களமொழி மூலமான அறிக்கையில் மாத்திரம் வெளியிட்டுள்ளார். பௌத்த மதமானது இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மதமாகும். பௌத்தர்களின் மகாவம்சம் புனையப்பட்ட கட்டுக் கதைகளாகவே வெளிவந்திருக்கின்றது. மகாவம்சம் தொடர்பான தெளிவான விளக்கம் தினப்புயல் பத்திரிகையிலும் வெளியாகியிருந்தது.
மூன்று பௌத்த விகாரைகள் மாத்திரம் தான் வடபகுதியில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது வடபகுதியில் மாத்திரம் முப்பதுக்கும் மேற்பட்ட விகாரைகள் புதிதாக முளைத்து மதப்பரம்பல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு இனத்தின் கலை கலாச்சார விழுமியங்கள் பாதுகாக்கப்படுகின்ற பொழுது தான் அந்த இனத்தின் இருப்பு தக்கவைத்துக் கொள்ளப்படும். இவ்வாறான நிலையில் எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றுகின்ற சம்பவங்களே திட்டமிட்டு தொடர்ந்தும் வடபகுதியில் இடம்பெற்று வருகின்றது.
சுரேன் ராகவனைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் பின்னணியோடு ஆளுநராக நியமனம் பெற்றவர். தனக்கு அரசியலில் அக்கறை இல்லை என்றதொரு கருத்தையும் அவர் தெரிவித்திருந்தார். வட பகுதியில் மாத்திரம் போதைப் பொருள் இருப்பதாகவும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தது. தமிழினத்தின் குரலாக செயற்படுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டபோதிலும் வடக்கு ஆளுநருடைய மத ரீதியான நிலைப்பாடு பௌத்த மதத்தை பரப்புகின்ற ஒரு செயற்படாடாகவே அமையப்பெறுகின்றது. இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும். இல்லையேல் வடக்கு முழுமையாக சிங்களவர்களின் வசமாகும். ஏற்கனவே ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போவதாக இலங்கை அரசு அறிவித்திருந்த நிலையில் அது வடபகுதியில் ஆளுநர் சுரேஸ் ராகவனின் மூலம் தான் நடைமுறைப்படுத்தப்படும் என்பது உறுதியாகின்றது. இவ்வாறான இவர்களுடைய செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் வடபகுதியில் வாழுகின்ற தமிழ் மக்களினால் ஆளுநர் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். ஆளுநர் ராகவனின் கருத்துத் தொடர்பில் கொதித்தெழுந்துள்ள தமிழ் மக்கள் இங்கிருக்கக் கூடிய ஆயுதக் கட்சிகளுடைய செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போவது என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே வவுனியாவிற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் வருகை தந்து முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனது கருத்துக் எதிராக சிங்களவர்களின் ஆதிக்கம் வடபகுதியிலும் தொடரும் என்று மிக கீழ்த்தனமான வார்த்தைகளினால் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திவிட்டுச் சென்றிருந்தார். அப்பொழுது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவ் ஆயுதக்கட்சிகள் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், தற்போது வடக்கின் ஆளுநர் ராகவனுக்கு எதிராக அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான வழிகளை முன்னெடுக்கவேண்டும்.
ஏற்கனவே முஸ்லீம் மக்களின் இனப்பரம்பலினால் அவர்கள் தற்பொழுது தனி அலகு ஒன்றைக் கோரியிருக்கின்றார்கள். இவ்வாறான நிலைமைகள் தொடருமாக இருந்தால் தமிழ் இளைஞர்களை மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இட்டுச்செல்லுகின்றார். இவரே இதற்கு முழுப்பொறுப்பும் கூறவேண்டும்.
மறவன்