வடக்கு கிழக்கு இணைப்பே தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதிசெய்யும்! கரணவாய் மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்!

368

 

வடக்கு கிழக்கு இணைப்பே தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதிசெய்யும்! கரணவாய் மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்!

வடக்கு கிழக்கு இணைப்பே தமிழ் மொழிபேசும் அனைவரும் தமது இருப்புக்களை உறுதிசெய்து கொள்ள அத்தியாவசியமாகிறது என, கரணவாய் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் உறுதிபடக் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் வடமராட்சி அமைப்பாளர் இரா.மயூதரன் மற்றும் இளைஞர் அணி இணைப்பாளர் கே.கிருஸ்ணமீனன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பானது கரணவாய் மேற்கு அந்திரான் பகுதியில் உள்ள சந்திரோதயம் சனசமூக நிலைய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 தொடக்கம் 6.30 மணிவரை நடைபெற்றிருந்தத.

இம்மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மேலும் அது குறித்து பேசுகையில்,

அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வடகிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சம~;டி ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதற்குக் காரணம் உண்டு. பலர் கிழக்கைப் பற்றிப்பேசி அங்கு சிங்கள, முஸ்லீம் பெரும்பான்மையினர் மத்தியில் எவ்வாறு வடகிழக்கு இணைப்பை உறுதிப்படுத்தப் போகின்றீர்கள் என்று கேட்கின்றார்கள்.

அதனால் வடகிழக்கு இணைப்பை விட்டுவிடக் கோருகின்றார்கள். முஸ்லிம் மக்கள் தமிழ் பேசுகின்றவர்கள். வடகிழக்கு தமிழ் பேசும் பிராந்தியங்கள் கிழக்கிலும் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மையினர். ஆகவே தமிழ் பேசும் பிராந்தியங்களை இணைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு இஸ்லாமிய அலகொன்றை வடகிழக்கினுள் உறுதிசெய்வதில் தவறுஏதும் இருக்கமுடியாது.

1987ம் ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் வடகிழக்கு இணைப்பு இடம்பெற்றது. 18 வருட காலமாக வடக்கும் கிழக்கு இணைந்தே செயற்பட்டன. ஆகவே வடகிழக்கு இணைப்பு நடைமுறைச் சாத்தியமாகாது என்று கூறுவது தவறு.

வடக்கும் கிழக்கும் இணையாவிட்டால் பெரும்பான்மை அரசாங்கங்கள் வடக்கையும் கிழக்கையும் பிரித்து சிங்களக் குடியேற்றங்களை அங்கு உறுதிசெய்துவிடுவார்கள். பின்னர் தமிழ்பேசும் மக்களை வடகிழக்கில் சிறுபான்மையினர் ஆக்கி சுமார் கால் நூற்றாண்டு காலத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் குடியிருப்புக்களைக் கபளீகரம் செய்துவிடுவார்கள்.

தற்பொழுதும் எம் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லவே குறிக்கோளாக இருக்கின்றார்கள். எமக்கு உபத்திரவந்தந்தால் நாங்கள் வெளிநாடுகளுக்கு ஓடிப்போய்விடுவோம் என்றதொரு கருத்து சிங்கள அரசியல்வாதிகளிடம் உண்டு. இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சகோதரர்கள் மொழிக்காகப் போராடுவார்களா அல்லது தமது மதத்திற்காகப் போராடுவார்களா என்பது கேள்விக்குறியாகிவிடும்.

ஆகவே வடகிழக்கு இணைப்பானது தமிழ் மொழி பேசும் அனைவரும் தமது இருப்புக்களை உறுதிசெய்ய அத்தியாசியமாகிவிடுகிறது. எம்மை நாமே ஆளவேண்டிய ஒருகடப்பாடும் எமக்குண்டு. எம்மை நாம் ஆள நடவடிக்கை எடுக்காவிட்டால் எமது வளங்கள் யாவும் வெளிமாகாண மக்களின் கைவசம் அகப்பட்டுக் கொண்டுவிடுவன என்று மேலும் தெரிவித்திருந்தார் வட மகாண முன்னாள் முதலமைச்சரம் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்.

முன்னதாக தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி இணைப்பாளர் கே.கிருஸ்ணமீனன் தலைமையில் நடைபெற்ற இம்மக்கள் சந்திப்பானது உயிர்நீத்த உறவுகளை நினைவிலேந்திய அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

தமிழ் மக்களின் ஏகபிரதிநித்துவம் மறுவாசிப்பிற்குள்ளாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்! – வடமராட்சி அமைப்பாளர் இரா.மயூதரன்!

மாற்று தலைமையின் அவசியம் குறித்தும், ஏற்கனவே தமிழ் மக்கள் தரப்பில் ஏகபிரதிநிதிகளாக அனுப்பப்பட்டவர்கள் தமிழ் மக்களின் இருப்பினையும் அவர்களது உரித்துக்களையும் அடமானம் வைத்து தத்தமது இருப்பையும் நலன்களையும் உறுதிசெய்து கொண்டமை குறித்து தெளிவாக எடுத்துக் கூறி, தமிழ் மக்களின் ஏகபிரதிநித்துவம் மறுவாசிப்பிற்குட்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் தமிழ் மக்கள் கூட்டணியின் வடமராட்சி அமைப்பாளர் இரா.மயூதரன் தனது கருத்துரையில் எடுத்துக் கூறியிருந்தார்.

விலைபோகாத தலைமையாக தன்னை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்துள்ள க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் கரங்களை பலப்படுத்துவது இன்றியமையாதது! இளைஞர் அணி இணைப்பாளர் கே.கிருஸ்ணமீனன்!

நாம் அரசியலை தவிர்ப்போமாக இருந்தால் எம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் எம்மை ஆளும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதை தடுக்க முடியாது போய்விடும். தன்னை நோக்கி வந்த சலுகைகள், விலைபேசல்கள் உள்ளிட்ட யாவற்றையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்திற்காக அரசியல் பயணத்தை உறுதியுடன் தொடர்ந்து வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அவர்களது கரங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி இணைப்பாளர் கே.கிருஸ்ணமீனன் தனது தலைமையுரையில் விளக்கிக் கூறியிருந்தார்.

இந்நிகழ்வில் கரணவாய் மேற்கு, அந்திரான் குடியிருப்பு சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்களென பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE