மக்களுக்காக செய்ய வேண்டிய அபிவிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் மறந்து விட்டு வடக்கு மாகாண சபை தனியான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் அதிகாரம் இல்லாத காலத்திலும் அரசாங்கம் அங்குள்ள மக்களுக்காக பெரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தியது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், அந்த மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் முடங்கியுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில், முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு இருக்கும் பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு ஆளுநர் பிரச்சினை என்றால், அதனை மாகாண மக்களின் பிரச்சினைகளுடன் சம்பந்தப்படுத்துவது பாரதூரமான தவறு எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.