வடக்கு மாகாண முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்தில் நிருபர்கள் குவிந்திருந்தனர்.- சந்திக்க மறுத்த சி.வி. விக்னேஸ்வரன்

397
இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார் விக்னேஸ்வரன்! சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு.
சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிரான். இவரது நினைவு சொற்பொழிவு சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, ‘பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்’ என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவாற்றுகிறார்.

இது தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் வரும் 9 ஆம் திகதியன்றே சி.வி. விக்னேஸ்வரன் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தனது பயணத்திட்டத்தை மாற்றினார் விஸ்னேஸ்வரன். அதன்படி சென்னையை இன்று வந்தார்.

வடக்கு மாகாண முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்தில் நிருபர்கள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் எதுவும் பேசாமல் விக்னேஸ்வரன் சென்றுவிட்டார். இன்னும் இரு நாட்களுக்கு அவர் சென்னையில்தான் தங்கியிருக்க உள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுக்கு மட்டுமே இம்முறை பயணம் செய்வார் என்றும், டெல்லிக்கு செல்லமாட்டார் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் பயணத்தின் போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையோ, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையோ விக்னேஸ்வரன் அதிகாரபூர்வமாகச் சந்திக்கமாட்டார் என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஆனால், இரு நாட்களுக்கு முன்பே விக்னேஸ்வரன் சென்னை வந்துள்ளதால், அவர் தமிழக அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தக்கூடும் என்றே தெரிகிறது.

ஐந்து தமிழ் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து விக்னேஸ்வரன் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வடமாகாண முதலமைச்சர் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார்!

வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இன்று காலை இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்தியாவின் அரச சார்ப்பற்ற அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ள சொற்பொழிவு நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

விக்னேஸ்வரன் பங்கேற்கும் சொற்பொழிவு சென்னையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதேவேளை இந்த பயணத்தில் இணைந்துக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றே இந்தியாவுக்கு சென்றுள்ளார்,எம்.ஏ. சுமந்திரன் நாளை இந்தியாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்தப்பயணத்தின்போது விக்னேஸ்வரன் குழுவினர் இந்திய பிரதமரை சந்திப்பார்களா? என்பது குறித்து தெளிவான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszBTbKXfq7.html#sthash.eWo1oGQ3.dpuf

SHARE