இலங்கையின் வடபகுதிக்கு பயணிக்கும் வெளிநாட்டு பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன் அனுமதியைப்பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் பணிப்பாளரும், இராணுவ பேச்சாளருமாகிய பிரிகேடியர் ருவன் வணிகசூரிய 15.10.2014 அன்று விடுத்துள்ள அறிவிப்புக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை உடையவர்கள் வடக்குக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற வேண்டும் என்று அமுல்படுத்தப்பட்டிருந்த நடைமுறையை இறுதி யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களில் அதாவது 2011ம் வருடம் ஜீலை மாத தொடக்கத்தில் நீக்கியிருந்த சிறீலங்கா அரசு, கடந்த 15.10.2014 அன்று அதாவது இறுதி யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களில் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் இந்த அறிவிப்பை வெளிநாடுகளிலிருந்து வட பகுதிக்கு செல்பவர்களை கட்டுப்படுத்தும், அல்லது அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். இதை விடவும் இலங்கையின் வேறு எந்த ஒரு பகுதிக்கும் பயணிப்பதற்கு விதிக்கப்படாத நடைமுறையானது வடக்கு மாகாணத்துக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ளமையானது சிறீலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க மனோநிலையின் வெளிப்பாடாகும்.
வடபகுதி மண்ணும் அந்த மண்ணுக்குரிய தமிழ் பேசும் மக்களும் தொடர்ந்தும் இராணுவ முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கும், வடபகுதிக்கு யார் யார் வருகிறார்கள்? யார் யார் வடபகுதி மக்களை சந்தித்து பேசுகின்றார்கள்? என்று சிறீலங்கா அரச இயந்திரம் வடபகுதி மக்களை மிகத்தீவிரமாக கண்காணிக்கின்ற அதேவேளை அம்மக்களை சந்தித்து பேச வருபவர்களை பின்தொடர்ந்து செல்கின்றது என்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் குறித்த அறிவிப்பு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். அத்துடன் சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் இருப்பை, இயல்பு வாழ்க்கையை குலைக்கின்றன என்பதற்கும் குறித்த அறிவிப்பு கட்டியம் கூறுகின்றது.
கூடவே இலங்கையின் வேறு எந்த பகுதிக்கும் பின்பற்றப்படாத நடைமுறையை வடக்குக்கு மட்டும் அமுல்படுத்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்திருப்பதானது, தமிழ் மக்களை அடக்கி ஆள நினைக்கும் அரச பயங்கரவாதத்தின் இராணுவ மயப்படுத்தும் சிந்தனையின் ஓர் அங்கமே ஆகும். மேலும் வடமாகாணம் இலங்கையின் ஒரு பகுதியா? இல்லை தனி ஒரு நாடா? என்றும் இயல்பாகவே கேள்வி எழுகின்றது.
தமிழ் பேசும் மக்களை மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய அடக்குமுறை, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், வஞ்சிப்பு மற்றும் குரோத நோக்கங்களில் அமைந்த செயல்களையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழ் மக்களை காரணம் காட்டி சர்வதேச நாடுகளின் உதவியை பெற்று தாக்குதல்களை செய்த சிறீலங்கா அரசு, இன்று அதே தமிழ் மக்களை வைத்து மறுவாழ்வு என்றும், அபிவிருத்தி என்றும் சர்வதேச நாடுகளிடம் கையேந்தியும் கடன் பெற்றுமே பிழைப்பு நடத்தி வருகின்றது. ஆனால் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா அரசால் பெறப்பட்ட உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை. மாறாக எமது மக்களின் மறுவாழ்வு, வாழ்க்கைத்தர மேம்பாடு, சுயபொருளாதார ஊக்குவிப்புகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது தாயக உறவுகளே தமது பங்களிப்புகள் ஊடாக கணிசமான அளவில் செல்வாக்கும் அக்கறையும் செலுத்தி வருகின்றனர்.
எனவே சமுக பொருளாதார மேம்பாட்டுக்கும் பங்களிப்புக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அறிவிப்பு உள்ளது என்றும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கடிந்துள்ளா