வடமாகாண சபைத்தேர்தலில் வெற்றிபெற்று தமது ஆசணங்களில் அமைச்சர்கள் அமர்ந்த பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்ததன் படி தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, காணாமற்போனோர் விவகாரம் மற்றும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பில் அக்கறை காட்டுவார்களென எண்ணியிருந்தனர்.
ஆனாலும் வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தற்பொழுது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா போன்றவர்களைப்போன்று அரசுடன் இணைந்த அரசியலையே மேற்கொண்டுவருகின்றனர். இதற்காகவா மக்களாகிய நாம் இவர்களை வடமாகாணசபைக்கு வாக்குகளை அளித்து தெரிவுசெய்தோம். வாக்குகளைக் கேட்கின்றபொழுது தமிழ்த்தேசியம். பின்னர் நீ யாரோ நான் யாரோ என்று கூறுமளவிற்கு இவ்வரசியல்வாதிகளின் செயற்படுவது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வமைச்சர்கள் ஊழல் மோசடிகள் செய்வதாகக் கூட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் ஊர்ஜிதப்படுத்தப்படாததன் காரணமாக அவற்றை எமது இணையத்தளம் வெளியிடவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் எமது தமிழினம் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றது.
முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளைக் காரணங்காட்டி தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை பெற்றுத்தருவதற்கான ஒரேயொரு வழி வடமாகாணசபைத்தேர்தலில் தமிழ் மக்களாகிய நாம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும் என்பதே அவர்களினுடைய பிரதான பிரச்சாரங்களில் ஒன்றாகவிருந்தது.
ஆனால் தற்பொழுது நிலைமைகள் மாற்றப்பட்டு இவ்வமைச்சர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படாது குட்டக்குட்டக் குனிந்து கொண்டேயிருக்கிறார்கள்.
ஆயுத வழிகளில் எதிர்க்கத் தவறினாலும் கூட பாராளுமன்றங்களில் குரல்களை எழுப்பி அஹிம்சை வழிப்போராட்டத்தினை ஆரம்பிப்பதனூடாக தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். இதனைவிடுத்து ஆளுநரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் ஊடகங்களில் செய்திகளை தெரிவித்துவிட்டு திரைமறையில் பணத்திற்காகவும், பதவிக்காகவும் இவ்வமைச்சர்கள் செயற்பட்டுவருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் அது மட்டுமல்லாது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வழியாக வந்த இவர்கள் இப்போது கட்சியை புறந்தள்ளுவதாகவும், அவர்களுக்கான மரியாதைகளை வழங்காமல் செயற்படுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரபாகரன் இருந்த காலத்திலிருந்து எதிர்ப்பு அரசியலைச் செய்து வந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவ்வாறானதொரு அரசியலையே தற்பொழுது உள்ள வடமாகாண அமைச்சர்கள் செய்துவருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
வடமாகாணசபையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்கள் தமிழ்த்தேசியத்திற்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துவருவது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் வடமாகாணசபை அமைச்சர்கள் தமிழ் மக்களின் விடயத்தில் இனியாவது அக்கறைகொண்டு செயற்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் காலப்போக்கில் தமிழ் மக்கள் உங்களையும் துரோகிகள் என்கின்ற பட்டியலில் இணைக்கவேண்டிய நிலை தோன்றும்.
TPN NEWS