வண்ணச் சிலந்திகள் கண்டுபிடிப்பு!

394


ஆஸ்திரேலியாவின் தெற்கு குவீன்ஸ்லாந்து பகுதியில் உள்ள வோண்டுல் தேசிய பூங்காவில் இரண்டு புதிய சிலந்தி இனங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. உயிரியல் விஞ்ஞானிகளான டாக்டர் ஜுர்கன் ஒட்டோ மற்றும் டாக்டர் டேவிட் ஹில் ஆகிய இருவரும் கண்டுபிடித்த இந்த சிலந்திகள் மயிலை போலவே பல வண்ணங்களைக் கொண்டவை. வெறும் 4-6 மில்லி மீட்டர் நீளமே உள்ள இந்த சிலந்திகளில் ஆண் சிலந்தியின் வயிற்று பகுதியில் உள்ள வண்ணங்கள் சூரிய ஒளியை மட்டுமல்ல புறஊதா கதிர்களையும் பிரதிபலிக்கும். மராடஸ் ஜேக்டாடஸ் மற்றும் மராடஸ் ஸ்கெலடஸ் ஆகிய இந்த இரு சிலந்திகளைப் போல உலகில் 30 விதமான சிலந்தி இனங்கள் இருக்கின்றன. ஜாக்டாடஸ் என்றால் லத்தீன் மொழியில் ஆடுதல் என்று அர்த்தம். மராடஸ் ஜாக்டாடஸ் ஆண் சிலந்தி, பெண் சிலந்தியை கவர துடிதுடித்தபடி நடனம் ஆடும். இதனால்தான் இந்தப் பெயர். இந்த இனத்தில் ஆண் சிலந்திகள், 4.5 மி.மீ., நீளம் இருக்க, பெண் சிலந்திகள் 5.3 மி.மீ., நீளத்தில் இருக்கின்றன. “ஆண் மராடஸ் ஜாக்டாடஸ் சிலந்திகள் மயில் தோகையை விரிப்பது போல தங்கள் முதுகு பகுதியில் விசிறி போன்ற அமைப்பை விரித்து பெண்சிலந்தியை கவர நடனமாடும்” என்று இரு விஞ்ஞானிகளும் “பெகாமியா” என்ற இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில் தெரிவிக்கின்றனர்.
மராடஸ் ஸ்கெலடஸ் சிலந்தி இனத்தில் ஆண் சிலந்திகள் கறுப்பாகவும், எலும்புக்கூட்டை வரைந்தது போன்ற வெள்ளை நிற வடிவத்தையும் உடலில் கொண்டிருக்கும். இதன் ஆண் சிலந்திகள் 3.7 மி.மீ., முதல் 4.2 மி.மீ., வரை இருக்கும். பெண் சிலந்திகள் 5 மி.மீ., முதல் 5.3 மி.மீ., வரை இருக்கும்.

SHARE