வயதில் இளையவர்களையும், கொரோனா பலி கொள்கிறது – 13 – 19 வயதுடையவர்கள் லண்டனில் மரணம்…

472

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆரோக்கியமான இளைஞர்கள் லண்டனில் பலியாகி உள்ளனர். 13 வயதுடைய இஸ்மாயில் முகமது அப்துல்வாஹாப், மற்றும் 19 வயதுடைய லூகா டி நிக்கோலா,  ஆகிய  இருவரும் கொடிய கொரோனா  வைரஸ் தொற்றினால் பலியாகி உள்ளனர்..

பிரிக்ஸ்டனைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவரான இஸ்மாயில், கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கிய பின் கடந்த வியாழக்கிழமை சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

மறு நாள் அவர் எவ்வாறு தொற்று நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார், பின்னர் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார் என அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் (30.03.20) கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் அவர் இறந்தார். இதனை மருத்துவமனை உறுதி செய்துள்ளது. பாரதூரமான இந்தக் COVID-19  தொற்று நோயினால், அவர் இறந்தபோது அவரது குடும்பத்தினர் அவருடன் அருகில் இருக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் “எங்கள் அறிவுக்கு எட்டியவகையில் அவருக்கு எந்த விதமான  வேறு  அடிப்படை  சுகாதார பிரச்சனைகள் இருக்கவில்லை.” என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மத்திய இத்தாலியின் நெரெட்டோவை பிறப்பிடமாகக் கொண்ட  உதவி சமையல் கலைஞரான 19 வயதுடைய  டி நிக்கோலாவும் “மிகவும் ஆரோக்கியமானவர்” எனவும், அவருக்கு எந்தவிதமான  அடிப்படை சுகாதாரப் பிரச்சனைகள் எதுவும் இருக்கவில்லை  எனவும்  அவரது குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். இதனை  NHSம் உறுதிப்படுத்தியது.

கடந்த செவ்வாயன்று (31.03.20) அவர் வடக்கு லண்டனின் என்ஃபீல்டில் உள்ள வடக்கு மிடில்செக்ஸ் மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அவர் 30 நிமிடங்களுக்குப் பின், நிமோனியாக் காச்சலால் உயிரிழந்தார் என  அறிவிக்கப்பட்டது.

இதேவேளை தனது மகன் வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக,  பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகளிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது என்றும், பிரேத பரிசோதனை மூலம்  அதனை  உறுதிப்படுத்தியதாக அந்த மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும், லூகாவின் தந்தை, மிர்கோ, லா ரிபப்ளிகா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உடல்நலப் பிரச்சினைகள் உள்ள வயதானவர்களுக்கு  COVID-19 ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர், எனினும்  இதன் பொருள் இளைஞர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையில்  “கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 13 வயதுடையவரின் மரணம் குறித்து கேள்விப்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது. என லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவ விரிவுரையாளர் வைத்திய கலாநிதி நத்தலி மெக்டெர்மொட் கூறினார்:

“வயதானவர்களை விட குழந்தைகள் கடுமையான COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு என்பது எங்களுக்குத் தெரியும், இந்த வயது குறைந்த மரணங்கள் பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் தொற்றுப் பரவுவதைக் குறைக்க எங்களால் முடிந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இளையவர்கள் இன்னும் பாதிக்கப்படலாம் என்றும், “நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் பரவாயில்லை – நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், நாங்கள் முன்னிலைப்படுத்திய அனைத்து சமூக தொலைதூர நடவடிக்கைகளையும் அவதானிக்க வேண்டும்” என  பிரித்தானியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ஜென்னி ஹாரிஸ், வெலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், பெல்ஜியத்தில் மரணித்த 12 வயது சிறுமியே,  ஐரோப்பாவில் இறந்த இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE