கிளிநொச்சி குமாரசாமிபுரம் கிராமத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி கனடா மொன்றியல் மாநிலம் விக்ரோறியா றோட் மொன்றியல் வர்த்தகர்களின் அனுசரணையுடன் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் அப்பியாசக்கொப்பிகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு அக்கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், மாதர் சங்க பிரதிநிதிகள்ஈ கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என திரண்டு வந்திருந்தனர்.
இங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் புஸ்பராசா, பா.உறுப்பினரின் செயலரும் கரைச்சி கிழக்கு பிரதேச அமைப்பாளருமான பொன்.காந்தன், மாவட்ட இளைஞர் அணி செயலர் சர்வானந்தா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அப்பியாசக்கொப்பிகளை மாணவர்களுக்கு வழங்கிவைத்தனர்.
இங்கு கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரை நிகழ்த்துகையில்,
மிகவும் அச்சம் சூழ்ந்த காலம் இப்போது எங்களுக்கு திணிக்கப்படுகின்றது.
போர் முடிந்ததாகவும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் வடக்கில் வசந்தம் வீசுவதாகவும் சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் பிரசாரம் செய்த அரசாங்கம் இப்போது தான் சர்வதேசத்தில் போக்குற்ற விசாரணை மானுடத்திற்கு இழைத்த கொடுரம் போன்றவை காரணமாக நீதிமுன் நின்று பதிலளிகக் வேண்டிய காலம் விரிந்த நிலையில், அதிலிருந்து தான் தப்பித்துக் கொள்ளவும், சிங்கள மக்களை ஏமாற்றவும் மிகவும் போரால் உயிரையும் சொத்துக்களையும் இழந்து தம் வாழ்வை மேம்படுத்த முனையும் அப்பாவி தமிழ் மக்களிடம் பயங்கரவாதம் இருப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அதன்மூலம் தமிழ் இளைஞர்களை வன்முறைக் கலார்சாரத்துக்குள் தள்ளி ஒரு புறத்தின் தமிழர்களை வாய் திறவாது மௌனிகள் ஆக்கி அடிமைகள் ஆக்கவும் சர்வதேசத்தில் இன்னும் பயங்கரவாதம் ஒழியவில்லையென காலத்தை இழுத்தடிக்கவும் வலிந்து பல சம்பவங்களை தமிழர் பிரதேசங்களில் அரசாங்கம் அரங்கேற்றி வருகின்றது.
தமிழ் மக்கள் போரின் பின் இந்த நாட்டின் யாப்பில் சொல்லப்பட்டதற்கு இணங்க ஜனநாயக தேர்தல்களில் பங்கு பற்றி அதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களின் அபிலாசைகள் என்ன என்பதை இந்த நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் சொன்ன போதும் இந்த அரசாங்கம் அதை எதையுமே ஒரு பொருட்டாக கருதவில்லை.
மாறாக சர்வதேசத்தை அவமதித்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பெரும் புதைகுழியுள் தள்ள நினைக்கின்றது. அதற்கு தமிழர்களையும் தமிழ் இளைஞர்களையும் பகடைக்காய்கள் ஆக்க திட்டமிடுகின்றது.
இப்போது எமது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.எமது இளைய சமுதாயம் கவனமாக இருக்க வேண்டும். கல்வி அறிவியல் நோக்கி எமது பாதையை திருப்புவோம். விளையாட்டு, கலை, இலக்கியம் நோக்கி நமது ஈடுபாட்டை வலுப்படுத்துவோம்.
எமது பண்டைய வரலாறுகளை படிப்போம். வாசிப்போம். நல்ல இராஜதந்திர நூல்களை கற்போம். வெற்றிக்கான அறிவார்ந்த வழிகள் பற்றி சிந்திப்போம். இதன் மூலம் இந்த அரசாங்கத்தை நாம் தோற்கடிப்போம்.
இன்று சர்வதேசம் இந்த இலங்கை அரசாங்கம் என்ன செய்கின்றது என்பதை நன்கறியும். அது அதற்கான தீர்ப்பை எழுதும்.
சர்வாதிகாரம் என்றைக்கும் வென்றதாகவோ நிலைத்ததாகவோ வரலாறு இல்லை. இது காலம் சொல்லும் பாடம்.
எனவே அறிவை பயன்படுத்தி இந்த நெருக்கடியான காலத்தை நாம் கடப்போம் என்றார்.