“வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன் கோவில் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தொல்பொருளாராய்ச்சித் திணைக்களம் ஆணை. பௌத்த மத வரலாற்றுப் பிரதேசம் எனவும் அறிவிப்பு”

539

 

அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன்: சிறிலங்கா அரசால் இருட்டடிப்புச் செய்யப்படும் தமிழர் தொன்மை

அம்பாறை   சங்கமன்கண்டி மலை முருகன்: சிறிலங்கா அரசால் இருட்டடிப்புச் செய்யப்படும் தமிழர் தொன்மை/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d

“வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன் கோவில் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தொல்பொருளாராய்ச்சித் திணைக்களம் ஆணை.
பௌத்த மத வரலாற்றுப் பிரதேசம் எனவும் அறிவிப்பு” – ‘சமூக சிற்பிகள்’ அமைப்பின் கள ஆய்வு.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாண்டியடி கிராமசேவை அலுவலக நிர்வாகத்தின் கீழ் உள்ள சங்கமன்கண்டி கிராமத்தில் அமைந்துள்ள ‘சங்கமன்கண்டி மலை முருகன் கோவில்’ கட்டடப்பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அதனை உடனே நிறுத்துமாறு அரசினால் கட்டளையிடப்பட்டுள்ளது.

இத்தகைய தடை உத்தரவினை பிறப்பித்துள்ளவர்கள் இலங்கை தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினர் என்று அறியத்தரப்பட்டுள்ளது. இக்கோவில் அமைந்துள்ள பிரதேசம் பௌத்த மத வரலாற்றுச் சான்றுகளை கொண்டுள்ளதனால் இங்கு இந்துக்களின் ஆலயம் அமைக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பூர்வீக தமிழ் பிரதேசமான திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள இவ்வாலயமானது கி.பி 10ம் நூற்றாண்டு காலப்பகுதியில் சோழ வம்சத்து மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டதென வரலாற்றுச் சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளமையினை ஆலய நிர்வாகத்தினர் நினைவூட்டுகின்றனர்.

மேலும், சங்கமன்கண்டி பிரதேசமானது தமிழர் அதிலுங் குறிப்பாக திராவிடர் வரலாற்றில் குறித்துச் சொல்லக்கூடியதோர் இடமாகும். நாகர்-இயக்கர் வழிவந்த ஆதி திராவிடர் வாழ்ந்த இடங்களில் சங்கமன்கண்டியும் ஒன்றென வரலாறு கூறுகின்றது.

கி.பி-995ம் ஆண்டு தொடங்கி, கி.பி-1070ம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் இலங்கை மீது படையெடுத்த இராஜராஜப் பெருஞ்சோழன் பொலனறுவையில் சிவன் கோவில்களை கட்டுவித்தார் என்றும், இக்காலத்தில், உறுகுணு இராச்சியத்தினை ஆட்சி செய்து கொண்டிருந்த 5ம் மஹிந்த மன்னனின் பேரன் 1ம் கீர்த்தி கேஷதாஸ் என்பவனை வெற்றி கொண்ட சங்கமன் என்ற சோழ வம்சத்தவனான சிற்றரசன் அரண்மனை அமைத்து ஆட்சி புரிந்த இடமே பின்னாளில் ‘சங்கமன்கண்டி’ என்று பெயர் பெற்றதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

அவ்வாறு சங்கமன் என்ற சோழச் சிற்றரசன் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதே “சங்கமன்கண்டி மலை முருகன் ஆலயம்” என்றும், அதுவே தற்போது சிங்கள மக்களால் ‘சங்ஹமகந்த அல்லது சங்ஹமகண்டிய’ என்று குறிப்பிடப்பட்டு வருவதாகவும் இப்பிரதேசத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமக் கந்தன் ஆலயத்திற்கு வருகை தருகின்ற யாத்திரிகர்கள் சங்கமன்கண்டி மலை முருகன் ஆலயத்திற்கு சென்று இளைப்பாறி, இங்குள்ள முருகக்கடவுளின் வேலாயுதத்தினை தரிசித்துச் செல்வது வழமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலையடிவாரத்தில் பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயமொன்றும் காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான சங்கமன்கண்டியில் 450ற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்களில் பெரும்பாலானவை 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது தென்னிலங்கையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு இங்கு குடியேறியவர்களாவர்.

இத்தகைய குடும்பங்களின் வழிபாட்டுத் தலமாகவும், யாத்திரிகர்களின் தலமாகவும் பிரசித்தி பெற்றிருந்த இம்மலை முருகன் ஆலயத்தின் கட்டடம் மிகவும் சிறியதாகவும், பழமையானதாகவும் இருந்ததன் காரணத்தினால், ஆலய நிர்வாகத்தினர் பிரதேச மக்கள் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதி அனுசரணையோடு ஆலயத்தினை புதுப்பிக்க எண்ணி, திருக்கோவில் பிரதேச செயலரிடம் எழுத்துமூல ஒப்புதலைப் பெற்று 04.06.2012 அன்று கட்டட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்திருந்தது.

எனினும், ஏற்கனவே இருந்த ஆலய கட்டடத்தினை புதுப்பிப்பதன் காரணமாக ஆலய நிர்வாகம், திருக்கோவில் பிரதேச சபையினரிடம் கட்டடம் அமைப்பதற்கான அனுமதியினை பெற்றிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

31.08.2012ம் திகதியன்று, ஆலயத்தின் கோபுரம் அமைக்கும் பணிகள் யாவும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், 24’ நீளமும் 20’ அகலமும் கொண்ட ஆலய முன் மண்டபம் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இவ்வேளையில், இவ்வாலயத்திற்கு வருகை தந்த காஞ்சிரங்குடா பிரதேச இராணுவத்தினர் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கட்டட நிர்மாணத்தினை உடனே நிறுத்துமாறு பணித்துள்ளனர்.

நிறுத்துவதற்கு கட்டளையிடப்பட்டமைக்கான காரணத்தினை பணியாளர்கள் வினவியபோது, இவ்வாலய கட்டடம் அமைக்கப்படுவதற்கான அனுமதி தொடர்பிலான ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு பணிகளை தொடருங்கள் என்று பதிலளித்துச் சென்றிருந்தனர்.

இச்சம்பவத்தினையடுத்து, 2012.09.01ம் திகதி ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் காஞ்சிரங்குடா இராணுவ தலைமை அதிகாரியிடம் சென்று இவ்விடயம் தொடர்பில் தெரிவித்ததோடு, ஆலயத்தின் தொன்மை பற்றியும் எடுத்துக் கூறியிருந்ததனையடுத்து, இராணுவ அதிகாரி இலங்கை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களே இத்தடையுத்தரவினை பிறப்பித்துள்ளனர் என்று கூறி அவர்களால் அனுப்பப்பட்டிருந்த உத்தரவுக் கடிதத்தினை அவர்களிடம் காண்பித்துள்ளார்.

ஆலய நிர்வாகத்தினர், கட்டடம் முடிவுறும் நிலையிலுள்ளதனை இராணுவ அதிகாரியிடம் தெரிவித்ததனையடுத்து, அவர் தான் இவ்விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தார்.

இச்சந்திப்பினையடுத்து, கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்ந்து முன்னெடு:க்கப்பட்டு வந்த நிலையில், 03.09.2012 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு அக்கரைப்பற்று உதவி காவல்துறை அத்தியட்சகர் சகிதமாக கோவில் நிர்வாக சபையின் தலைவர் வீட்டிற்கு வருகை தந்திருந்த திருக்கோவில் காவல்துறையினர் நிர்வாகத்திலிருந்த ஏனைய உறுப்பினர்களையும் அங்கு அழைத்து ஆலய கட்டட நிர்மாணப் பணிகளை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பின் போது, காவல்துறையினரும் ஏற்கனவே காஞ்சிரங்குடா இராணுவ அதிகாரியினால் இவர்களிற்கு காட்டப்பட்ட நிறுத்தல் உத்தரவுக் கடிதத்தை காண்பித்துள்ளனர். இவர்களோடு, காவலதுறை புலனாய்வுப் பிரிவினரும் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் முடிவில், சிங்கள மொழியில் காவல்துறையினரால் எழுதப்பட்டடிருந்த ஆவணமொன்றில் ஆலய நிர்வாகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் ஒப்பமிடுமாறு காவல்துறையினரினால் கோரப்பட்டதற்கிணங்க குறிப்பிட்ட மூவரும் அவ்வாவணத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.

“ஆலய கட்டட நிர்மாணப் பணிகளை நிறுத்துவது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினருடன் நாம் சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம் என்பதனையும், மீதமுள்ள கட்டடப் பொருட்கள் எல்லாவற்றையும் குறிப்பிட்ட தினத்திற்குள் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவோம் என்பதனையும் உறுதிப்படுத்தியே இவ்வொப்பம் பெறப்படுகின்றது” என காவல்துறையினர்விளக்கமளித்திருந்தனர். எவ்வாறெனினும், அவ்வாவணத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தொடர்பில் நிர்வாகத்தினர் வாசித்தறியவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும், காவல்துறையினருடனான சந்திப்பின் போதும், ஆலய நிர்வாகத்தினர் கட்டட அமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், 185 அடிக்கு மேற்பட்ட உயரமுடைய மலையில் ஏற்றிய 50 பை சீமெந்து, மணல் யாவும் மழை பெய்ததால் வீணாக போகும் என்ற பரிதாப நிலையினை காவல்துறை உதவி அத்தியட்சகரிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.

இதற்கு வந்திருந்த அவ்வதிகாரி ஒரு நாளைக்குள்; கோவில் அமைப்புப் பணிகளை செய்து முடிக்குமாறும் மீதியான கட்டட நிர்மாணப் பொருட்கள் அனைத்தையும் வெளியேற்றி விடுமாறும் பணிப்புரை விடுத்ததோடு, தாம் நிர்வாகத்தினரை சந்திக்கும் முன்னரே கட்டட அமைப்புப் பணிகள் யாவும் நிறைவு பெற்று விட்டிருந்ததாக இது தொடர்பில் விசாரிப்பவர்களிடம் கூறுமாறும் நிர்வாகத்தினரிடம் கூறிச் சென்றுள்ளார்.

எவ்வாறெனினும், தற்போது ஆலயத்தின் அமைப்புப் பணிகள் யாவும் நிறைவு பெற்றுள்ள நிலையில், சிறுசிறு பூச்சு வேலைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்நிலையில், அங்கு சீமெந்தினாலான கூரையிடுவதற்காக நிறுத்தப்பட்ட துணைக்கம்பங்களும், பலகைகளும் தவிர ஏனைய பொருட்கள் யாவும் அடிவாரத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் சிங்கள மன்னர்கள் ஆட்சி செய்த இடமே சங்கமன்கண்டி எனவும், இங்கு பௌத்த விகாரைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளது எனவும் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, பௌத்த பிக்குகள் சிலரும், இராணுவத்தினரும், காவல்துறையினரில் சிலரும், சிங்கள பொது மக்கள் சிலரும் சங்கமன்கண்டிக்குச் சென்று அங்கு சுற்றித் திரிந்ததாக இப்பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், அவ்விஜயத்தின் போது அவர்கள் இப்பிரதேசவாசிகள் யாரையும் சந்தித்து கலந்துரையாடியிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிலையில், ஆலய கட்டடம் அமைக்கப்படுவதனை தடை செய்யும் இலங்கை தொல்பொருளாராச்சி திணைக்களத்தின் நடவடிக்கை குறித்து, ஆலய நிர்வாகத்தினர் அகில இலங்கை ரீதியிலான இந்து அமைப்புக்களிடமும் முறையிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில், இந்து அமைப்பொன்றிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, சிலாபம் முன்னேஸ்வரத்தில் கோபுரம் அமைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டமை போன்றே, இங்கும் திட்டமிட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதெனவும், இலங்கை வரலாற்றினை, இங்கு வாழும் தமிழர்களின் தொன்மையினை மூடிமறைக்கும் செயற்பாடுகளில் அதிக சிரத்தையுடன் செயற்பட்டு வரும் அரசாங்கம் திட்டமிட்டு இத்தகைய செயற்பாடுகளை துறை சார்ந்த திணைக்களங்கள் மூலமாக முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சங்கமன்கண்டி மலை முருகன் ஆலய புனருத்தாபன பணிகளில் தாம் அதிக அக்கறையோடு இருந்ததாகவும், இலங்கை தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்தினர் தமது அனுமதியினைப் பெற்றதன் பின்னதாகவே இவ்வாலய கட்டடப் பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்து ஆலய நிர்மாணப் பணிகளை முடக்கியுள்ளமை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இப்பிரதேச பொதுமக்கள் மற்றும் அகில இலங்கை ரீதியிலுள்ள தமிழ் மக்களின் ஆதரவோடு, காலக்கிரமத்தில் இவ்வாலயத்தின் குடமுழுக்கு நிகழ்வினை நடாத்தவிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், தமிழ் மக்களின் வரலாற்றுத் தொன்மை மிக்க பிரதேசங்களை, சின்னங்களை, வழிபாட்டுத் தலங்களை கைப்பற்ற, இருட்டடிப்புச் செய்ய அல்லது மூடிமறைக்க திட்டமிட்டு செயற்பட்டு வருகின்ற அரசாங்கத்தின் இத்தகைய இழிவான செயற்பாடுகள் காரணமாக நீண்ட கால வரலாற்றுச் சிறப்புடைய தமிழர்களின் சின்னங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவது நிறுத்தங்களற்று நீளுமென்பது மறுப்பதற்குரியதன்று.

SHARE