வல்வை நகர சபையில் ஆனந்தராஜ் ஊழல்! சத்தியாக்கிரகத்தை கைவிட்ட TNA

568
வல்வெட்டித்துறை நகரசபை சபா மண்டபத்தில் நேற்றுப் பகல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சபையின் ஆளும் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நான்கு பேரும், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று மாலை 5 மணியுடன் போராட்டத்தைக் கைவிட்டனர். நேற்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் வல்வெட்டித்துறை நகர சபைக் கூட்டம் சபைத் தலைவர் ந.ஆனந்தராஜ் தலைமையில் ஆரம்பமானது.

அவ்வேளை சபையின் உபதலைவர் க.சதீஸ், க.ஜெயராஜா, கோ.கருணானந்தராஜா, எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோர் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர். “வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ந.அனந்தராஜின் நிர்வாகத்தின் கீழ் முறைகேடுகள், ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் என்பன தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. “அண்மையில் வல்வெட்டித்துறை நகர சபையால் வழங்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்கள் தெரிவில் லஞ்சப்பணம் பெறப்பட்டு, நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சும், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் விசாரணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கவேண்டும். “ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகர சபையில் பெரும்பாலான உறுப்பினர்களாகிய நாம் கடும் அதிருப்தி அடைந்துள்ளோம்.

“மேற்கூறிய காரணங்களுக்காக வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் அனந்தராஜ் மீது நம்பிக்கையில்லை என வல்வெட்டித்துறை நகர சபை தீர்மானிக்கிறது.” – எனப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பிரேரணையை சபையில் கொண்டுவருவதற்கு சபைத் தலைவர் மறுத்தலித்தமையை அடுத்து, தாங்கள் சத்தியாக்கிரகம் இருக்கப் போகிறார்கள் எனத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை முதல் சபா மண்டபத்தில் அவர்கள் சத்தியாக்கிரகம் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் சத்தியாக்கிரகம் இருந்த 4 ஆளும் தரப்பு உறுப்பினர்களுடனும் இன்று கலந்துரையாடி, சத்தியாக்கிரகத்தைக் கைவிடுமாறு கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று சத்தியாக்கிரகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த சம்மதம் தெரிவித்த 4 உறுப்பினர்களும் சத்தியாக் கிரககத்தை கைவிட்டனர். இதனையடுத்து அவர்களுக்குக் குளிர்பானம் வழங்கப்பட்டது.

SHARE