வளலாய் பகுதிக்கு சுரேஸ் எம்.பி மற்றும் யாழ்.அரச அதிபர் விஜயம்

346
வலி.கிழக்கு வளலாய் பகுதியில் கடந்த 13ம் திகதி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளதுடன், மக்களுடைய தேவைகளையும் கேட்டறிந்துள்ளனர்.

கடந்த 13ம் திகதி வளலாய் பகுதியில் 233 ஏக்கர் நிலத்தில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் தங்களுடைய நிலங்களை தற்போது துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த மக்களுடைய தேவைகளைக் கண்டறிவதற்காகவும், அவர்களுக்குரிய வசதிகளை செய்து கொடுப்பதற்குமாக, இன்றைய தினம் அரசாங்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சென்றிருந்தனர்.

இதன்போது மக்கள் தமக்கு மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக கரையேற்றுவதற்கான வசதியாக கடற்பகுதியில் கற்களை அகற்றி துப்புரவு செய்து கொடுக்குமாறும், தங்கியிருந்து காணிகளை துப்புரவு செய்வதற்காக பொதுவான கொட்டகை ஒன்றை அமைத்துக் கொடுக்குமாறும், குடிதண்ணீர் வசதி மற்றும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் படையினரின் முட்கம்பி வேலிகள் மற்றும் மண் அணைகள் அகற்றப்படாமலிருக்கும் நிலையில் அவற்றை அகற்றிக் கொடுக்குமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் மண் அணைகளையும், முட்கம்பி வேலிகளையும் பிரதேச சபையை கொண்டு அகற்றிக் கொடுக்க முயற்சிப்பதாகவும் முடியாதவிடத்து மத்திய அரசாங்கத்திடம் பேசி அதனை செய்து கொடுப்பதுடன், உடனடியாக குடிநீர் வசதிக்காக பிரதேச சபை ஊடாக நீர் தாங்கிகளை வைக்கவும் இரு குடிநீர் கிணறுகளை துப்புரவு செய்யவும், நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் மீன்பிடி துறைமுகம் மற்றும் பொதுவான கொட்டகை அமைப்பது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் வாக்குறுதியளித்துள்ளார்.

மேலதிகமாக தங்களுடைய வீடுகள் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் வரையில் இடிக்கப்படாமலிருந்ததாகவும், அதன் பின்னதாகவே தமது வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

SHARE