வாழைப்பழம் மிகச்சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள். இதில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இது சிறந்த அழகுப் பொருளாக பயன்படுகின்றது. வாழைப்பழத்தைக் கொண்டு போடப்படும் பேஸ்மாஸ்க் இயற்கையான முறையில் பெண்களின் சரும அழகை அதிகரிக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். அவர்கள் கூறியுள்ள சில முறைகளை பின்பற்றிப்பாருங்களேன்.
நன்கு கனிந்த வாழைப்பழம் மாஸ்க் போடுவதற்கு ஏற்றது. நன்கு கூழ் போல மசித்த வாழைப்பழத்தை எடுத்து முகத்தை அப்ளை செய்யவும். பத்து முதல் 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் முகத்தை கழுவவும். பின்னர் ஐஸ் க்யூப்பால் ஜில்லென்று ஒற்றி எடுக்கவும். சருமம் அழகாக புத்துணர்ச்சியாக மாறும்.
வாழைப்பழம், தேன்
மசித்த வாழைப்பழத்துடன் ஒரு டீ ஸ்பூன் தேன் மிக்ஸ் செய்யவும். இதை நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து ஊறவைக்கவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். பின்னர் முகத்தை மென்மையாக ஒற்றி எடுக்க சருமம் மென்மையாய் பளபளப்பாக மாறும். பனிக்காலத்தில் சிறந்த மாய்ஸ்சரைசராக இது செயல்படும்.
வாழைப்பழம், ஓட்ஸ்
வாழைப்பழத்துடன் ஊறவைத்த ஓட்ஸ் கலந்து கலக்கவும் செய்யவும். இதனை முகத்தில் மாஸ்க் போல போட்டு ஊறவைக்கவும். நன்கு காய்ந்த உடன் தேய்த்து கழுவவும். சருமத்தின் துளைகளில் ஒட்டியுள்ள அழுக்குகளும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் நீங்கும். இறந்த செல்கள் உதிர்ந்து சருமம் புத்துணர்ச்சியோடு காட்சி தரும்.
வாழைப்பழம் ஆலிவ் ஆயில்
வாழைப்பழத்துடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ சருமம் வழுவழுப்பாய் மென்மையாக மாறும்.
வாழைப்பழம், பால்
வாழைப்பழத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் பால் கலந்து நன்கு கூழ் போல மாற்றவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ சருமம், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
வாழைப்பழத்தின் விலை மிகவும் குறைவானதே. இந்த பேஸ் மாஸ்க்கை அனைவரும் எளிதாக உபயோகிக்கலாம். குறைந்த விலையில் இயற்கையான பேஸ்மாஸ்க் போட்டு வழுவழு சருமத்தை பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள். நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.