வவுனியாவில் கிராமிய வர்த்தக அபிவிருத்தி மையம் அமைப்பது தொடர்பில் சர்ச்சை – இதன் பின்னணியில் நடப்பவை என்ன?

345

அரசியலில் ஆதாயத்தைத்தேட முனையும் ஒருசில அரசியல்வாதிகள் தமது அரசியலைத்தக்கவைத்துக் கொள்வதற்காக இத்திட்டத்தினுள் மூக்கினை நுழைத்து, வளங்கள் அற்ற பிரதேசத்தில் இந்த வர்த்தக மையத்தினை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருசாரார் வளங்கள் அற்ற பிரதேசங்களில் அமைப்பதன் ஊ டாக குறிப்பாக அந்த இடம் இத்திட்டத்தின் மூலம் வளர்ச்சியடையும் என்றும், இன்னுமொரு தரப்பினர் தாண்டிக்குளத்தில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படுவதனால் இதனது கழிவுகளை அகற்றும் பணி என்பது பாரிய சவாலாக அமையும் என்பதைக் கவனத்திற்கொண்டு அங்கு இந்த வர்த்தக மையம் அமைப்பது என்பது சாத்தியமற்றது எனவும் கூறுகின்றனர். ஒரு நாட்டினது பொருளாதார வர்த்தக மையங்களை எடுத்துக்கொண்டால் அங்கே போக்குவரத்து வசதிகள், அதனைச் சூழவுள்ள சனத்தொகையினை அடிப்படையாகவைத்து, வர்த்தக வாணிபத் தொழில்கள் நடைபெறும் பிரதேசங்களை அண்மித்தே ஒரு பொருளாதார அபிவிருத்தி மையம் நிறுவப்படுகின்றது. ஓமந்தையில் உணவுப்பொருட்கள் கொள்வனவு செய்யும் இடமான (Food City) அமைந்தால் அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே காணப்படும். அண்மையில் கிளிநொச்சியில் ஒரு உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் ஒரு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவு. யாழில் மக்கள் சனத்தொகை மற்றும் முதலீட்டாளர்கள், சந்தைப்படுத்தல்களை மேற்கொள்பவர்கள் அதிகம் வாழ்கின்றனர். அதேபோன்று வவுனியாவில் நகரத்தினை அண்டிய பகுதியில் இவ்வாறான முதலீட்டாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். பிற இடங்களிலிருந்து வரக்கூடியவர்களுக்கு தங்குமிட வசதிகள் காணப்படவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்கள் இங்கு தங்கியிருந்து தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பமாட்டார்கள். பொருளாதாரத்தில் தலைசிறந்து விளங்குகின்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் அங்கு இடம்பெறும் நடைமுறை இதுதான். பிரதானமாக போக்குவரத்து, தங்குமிட வசதிகள், சுற்றுப்புறச்சூழல், பாதுகாப்பு, உணவு, மருத்துவ வசதிகள், சுகாதாரம் போன்ற விடயங்கள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றனவா? என பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்கும் அரசு பரிசீலித்துப்பார்க்கும். குறிப்பாக இலங்கையில் மத்தல விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. இறுதியில் மத்தல விமான நிலையத்தில் மிருகங்களும், பறவைகளுமே தங்கியிருந்தன. பின்னர் அது நெற்களஞ்சியத்திற்காகப் பயன்படுத்தப்பட்டமை பரிதாபத்திற்குரிய விடயம்.

maxresdefault sivasakthi

ஒரு முதலீட்டினைச் செய்யும் வர்த்தகர் ஒருவர் தனக்கான நலன்கள் அதில் காணப்படுகின்றதா என்பதைத்தான் முதலில் கவனத்திற்கொள்வார். இதில் ஒரு விடயம் என்னவென்றால் வவுனியா பிரதேசத்தைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள விவசாயிகள் இந்தப் பொருளாதார மத்திய மையத்திற்கு வந்து தமது வியாபாரங்களை மேற்கொள்வதற்கு அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்பதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனது கருத்தாகும். அத்தோடு 10வருடங்களின் பின்னர் இப்பிரதேசம் பாரியதொரு அபிவிருத்தியடையும். இந்த இடைவெளியில் என்ன வகையான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பதும் கேள்விக்குறியே. தூரநோக்குடனான சிவசக்தி ஆனந்தனது பார்வை என்பது வரவேற்கத்தக்கதாகவிருந்தாலும் இதனை த.தே.கூட்டமைப்பிலுள்ள பல அரசியல்வாதிகளும், வடமாகாணசபையின் ஒருசில அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. இத்திட்டத்திற்கு வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினது அரசியல்வாதிகளும் ஆதரவாகச் செயற்படுகின்றனரே தவிர, ஏனையோர் மறைமுகமாக தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றனர். வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் கருத்தின்படி, தாண்டிக்குளத்தில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படுவது சிறந்தது என்கிறார். ஆனாலும் ஏனையவர்களது கருத்துக்களையும் நாம் செவிமடுத்து அனைவருக்கும் ஏற்புடையதாக இதனை அமைக்கவேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கின்றார். அதைவிட ஓமந்தை, புளியங்குளம் போன்ற பிரதேசங்களில் அதாவது தமிழ் மக்களது பிரதேசங்களில் இவ்வர்த்தக மையம் அமையப்பெற்றால் அதுவே போதும் என்ற மனநிலையில் அமைச்சர் சத்தியலிங்கம் இருக்கின்றார். இதற்கிடையில் இந்த வர்த்தக மையத்தை அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஊடாக அமைக்கப்படுவதை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்;தி ஆனந்தன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் தனது தலையீட்டில் ஓமந்தையில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படுவதே சிறந்தது என்ற ரீதியில் இவ்விருவர்களுக்கும் இடையில் போட்டித்தன்மையும் நிலவிவருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வர்த்தக சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினரிடம் நாம் நேரடியாகச்சென்று வினவியபோது, த.தே.கூட்டமைப்பு மற்றும் வடமாகாண சபையின் அரசியல்வாதிகள் என யாராகவிருந்தாலும் தமிழ் மக்களின் நலனில் பொறுப்புடன் செயற்படவேண்டும். எமது பிரதேசத்தில் இந்த வர்த்தக மையம் அமைப்பது தொடர்பில் தமது மனப்பூர்வமான விருப்பத்தினைத் தெரிவித்துக்கொள்ளும் இவர்கள், அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலை நகர்த்திச்செல்வதற்காக மக்களின் வயிற்றில் கை வைக்கக்கூடாது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும். பின்தங்கிய பிரதேசங்கள் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதில் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் முனைப்புடன் செயற்படும் அதேநேரம், அனைத்து பிரதேசங்களும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பொருத்தமானதாகக் காணப்படாது. வடக்கு முதல்வர் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஆகிய இருவரின் கருத்தின்படி, தமிழரசுக்கட்சியில் இருக்கக்கூடியவர்கள் மேற்கொள்கின்ற தீர்வின்படி இந்த வர்த்தக மையம் அமைக்கப்படலாகாது என்பதில் இருவரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுகின்றனர். இது அவர்களிடையே இருக்கக்கூடிய அரசியல்போட்டித்தன்மையை வெளிப்படுத்துகிறது. இது தொடர்பாக கடந்த 04ஆம் மாதம் 28ம் திகதியன்று வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக கொழும்பு சென்றிருந்தார். எனினும் இச்சந்திப்பு தோல்வியில் நிறைவடைந்தது. இதற்கிடையில் இவ்விடயத்தில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் அவர்களும் தனது தலையீட்டினை ஏற்படுத்தியுள்ளார். தாண்டிக்குளத்தில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படாது விடின் இதனைப் பிறிதொரு பிரதேசத்திற்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். இவ்விடயம் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லீம் வியாபாரிகளைப் பொறுத்தவரை தாண்டிக்குளத்தில் இந்த மையம் அமைக்கப்படுவது சிறந்தது என்றே கூறுகின்றனர். இவ்வாறான இழுபறிநிலையில் இதற்காக ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்காக ஒருசில வர்த்தகர்கள் தயாராகிவரும் அதேவேளை, இவ்வாறானதொரு குழப்பநிலைகளை உருவாக்கி பூனாவ பிரதேசத்திற்கு இந்த வர்த்தக மையத்தினை கொண்டுசெல்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஒரு ஒற்றுமை பேணப்படவேண்டும். த.தே.கூட்டமைப்பு, வடமாகாணசபை வேறுவேறு என்கின்ற ரீதியில் எமக்கிடையில் உள்ள பிரச்சினைகளை வெளிச்சமிட்டுக்காட்டுவதன் ஊடாக இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சிங்கள மற்றும் முஸ்லீம் அரசியல்வாதிகள் தமது பிரதேசத்திற்கு இந்த வர்த்தக மையத்தினை கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கான சூழ்ச்சிகளும் திறைமறைவில் இடம்பெற்றது. இதில் பிழை யார்பக்கம் உள்ளது.

த.தே.கூட்டமைப்பு, வடமாகாணசபை தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து செயற்படுவதே சிறந்தது. ஏனென்றால் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களைச் சந்திக்கின்றார்கள். அதன் பின்னர் மக்களை சந்திப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. அவ்வாறாகவிருக்கின்றபோது மக்களின் கருத்துக்களை எவ்வாறு செவிமடுத்து உங்களால் செயற்படமுடியும். கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்பட்டு இறுதியில் இரண்டும் அற்ற நிலைக்குள்ளாவதையே இவ்வரசியல்வாதிகள் தமிழ் இனத்திற்குச் செய்யச் திட்டமிட்டுள்ளனர் எனத் தமிழ் மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படவேண்டும். எத்திட்டங்கள் தமிழ் மக்களுக்கு வருகின்றதோ உடனே அதற்கு எதிர்ப்பினைக்காட்டுவதை விடுத்து, அதனைப்பற்றி ஆராய்வதற்குப் பதிலாக, அனைவரும் தங்களது கருத்துக்களைக்கூறி அந்தத் திட்டத்தைக் குழப்பும் ஒரு செயல் வடிவத்திலேயே த.தே.கூட்டமைப்பும், வடமாகாணசபையும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. பொது விடயங்களில் இவ்வாறு செயற்படுவது தமிழ் மக்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும். இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படவேண்டும். தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை எனக்கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தக்கூடாது. வவுனியா மாவட்டத்தில் ஒரு தமிழ் மொழியினைப் பேசக்கூடிய மாவட்ட அரச அதிகாரியை நியமிக்கக்கூட முடியாத உங்களின் செயற்பாடுகள் மிகவும் வருத்தத்திற்குரியது. இராணுவத்திடமிருந்து மீட்கப்படாத தமிழ் மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினை இன்னமும் தொடர்கிறது. வன்னி மண்ணிலிருந்து இவர்களை வெளியேற்றுவதற்காக நீங்கள் செய்துகொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் செயற்பாடுகள் என்ன? இராணுவம் தானாகவே காணிகளை விட்டுச்செல்லும் வரை தமிழ் அரசியல்வாதிகள் பலர் மௌனமாகவிருக்கின்றீர்கள். அவர்கள் விட்டுச்சென்ற பின்னர் உரத்துப்பேச பலர் முன்வருகிறார்கள். இவ்வாறான அரசியலே தற்போது வன்னிப் பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழர் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இந்த பொருளாதார அபிவிருத்தி மையத்தை போட்டி பொறாமையோடு கையாளக்கூடாது. தமிழ் மக்களை அடிமையாக்கும் நோக்குடனே இலங்கை அரசின் செயற்பாடுகள் அமைந்திருந்தன:அமைந்துள்ளன. இவற்றைக்கருத்திற்கொண்டு தமிழ் மக்களுக்கென அபிவிருத்தித் திட்டங்கள் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப்படும்போது அதனைப் பரிசீலித்து, தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் பிரிவினைகள் உள்ளது என்பதை அரசாங்கத்திற்கு வெளிக்காட்ட முற்படாது இனிவரும் காலங்களிலாவது தமிழ் மக்களின் நலனில் உண்மையான கரிசணை மிக்கவர்களாக, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் முனைப்புடன் செயற்படுபவர்களாக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

-மறவன்-

SHARE