வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு மற்றும் மலேரியாவைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வவுனியா, பட்டானிச்சூர் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பட்டானிச்சூர், வேப்பங்குளம், பட்டக்காடு ஆகிய பகுதிகளில் டெங்கு மற்றும் மலேரியா நுளம்பு பெருக்கும் இடங்களை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகர சபையின் அனுசரணையுடன் நகர உறுப்பினர்களான எம்.லரீப், அப்துல் பாரி, பொது சுகாதார பரிசோதகர் வாகீசன் அவர்களின் ஏற்பாட்டில் பொது இடங்கள், வீதிகள், வீடுகள் என்பன பார்வையிடப்பட்டதுடன் அப் பகுதிகளில் காணப்பட்ட நுளம்பு பெருகும் இடங்களும் அழிக்கப்பட்டன.
அத்துடன் மலேரியா மற்றும் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வீடுகளின் அயற் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.