அண்மைக்காலமாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் பல இழுபறிகளுக்கு மத்தியில் மாதக்கணக்கில் இயங்காத நிலையில் இருந்தது. இந்நிலையில் தனியார் பஸ்சேவைகள், அரச போக்குவரத்து பஸ் சேவைகள் அனைத்தும் ஒரு இடத்தில் இருந்து செயற்படவேண்டும் என்பது வடமாகாண போக்குவரத்து அமைச்சரான முதலமைச்சரது கட்டளையாகும்.
இதனை நடைமுறைப்படுத்துவதில் தற்போது எழுந்துள்ள அரசியல் சிக்கல்கள் என்ன என்பது பற்றியும் அதற்கானத் தீர்வு என்ன என்பது பற்றியும் ஆராய்ந்து செயற்படவேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. மிகவும் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் தாண்டிக்குளத்தில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் அல்லது ஓமந்தையில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் மதகுவைத்தகுளத்திற்கு மாற்றப்பட்டது. இதில் குறிப்பாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களும் அவர்; சார்ந்த இனத்தவரும் பெரும்பான்மை இனத்தவருமே பயனடையக்கூடியவர்களாவர். இதில் தமிழ் அரசியல்வாதிகளது தலையீடு என்பது எந்தவொரு பயனையும் பெற்றுத்தரவில்லை மாறாக இவர்கள் தமது அரசியல் நோக்கக்திற்காகவே உண்ணாவிரத, மறியல் போராட்டங்களையும் இந்தப் பொருளாதார மத்திய நிலையத்திற்காக மேற்கொண்டதுடன், இதற்கான வாக்கெடுப்பும் நடாத்தப்பட்டு மத்திய அரசாங்கம் தலையிடும் அளவிற்கு நிலைமைகள் கொண்டுசெல்லப்பட்டதே தவிர நன்மைகள் எதுவும் தமிழ் மக்களைச் சென்றடையவில்லை என்பதேயாகும். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், சார்ள்ஸ், சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, காதர் மஸ்தான் போன்றவர்களும்; மாகாண சபையினைப் பொறுத்தவரை மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா, நடராசா, தர்மபாலா, முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் போன்றவர்களுடைய போட்டி அரசியலின் காரணமாகவே இந்த கிராமிய பொருளாதார மத்திய நிலையம் தமிழ் மக்களின் பிரதேசத்தில் இருந்து இல்லாமல்போனது.
மேற்குறிப்பிடப்பட்ட அரசியல்வாதிகளுடைய பேச்சை ஏற்றுக்கொள்ளாத வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் இவர்கள் கூறி நான் கேட்கவேண்டிய தேவை இல்லை என்பதே அவரது நிலைப்பாடாகவிருந்தது. மேற்குறிப்பிடப்பட்ட அரசியல்வாதிகள் தங்களது இலாபம் கருதி மக்கள் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக பூனைக்கு மணி கட்டப்போவது யார் என்ற போட்டியில் தோல்வியடைந்துவிட்டார்கள் என்றே கூறவேண்டும். இவர்கள் மக்கள் பிரதிநிதிகளா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டுள்ளது. வடக்கு அல்லது தென் இலங்கை தலையீடு இன்றி எந்தவொரு பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களும் வடக்கில் செயற்படுத்தப்படுவதில்லை. ஆனால் வடக்கிலும் தென்னிலங்கையிலும் குறித்த அரசியல்வாதிகளது தலையீட்டுடன் அபிவிருத்திகள் அனைத்தும் நடைபெற்றிருக்கிறது. வன்னித் தலைமை கூறி யாழ் தலைமை செய்வதாக இல்லை.
இதற்கு பிரதான சூத்திரதாரியாக விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களே காரணமாக இருந்தார். இன்று வவுனியாவில் கட்டப்பட்டிருக்கும் புதிய பஸ்தரிப்பு நிலையத்தில் அதற்கருகாமையில் ஒரு பொருளாதார மத்திய நிலையம் வருகின்றபோது போக்குவரத்து வசதிகளுடன் நிச்சயமாக வர்த்தகர்கள் பாரிய நன்மைகளை பெற்றிருக்கக்கூடிய நிலை உருவாகியிருக்கும். இறுதியில் தாண்டிக்குளத்தில், ஓமந்தையில் அமைப்போம் என சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மலைப்பாம்பின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் செயற்பட்டதை யாவரும் அறிவர். இதன் ஊடாக தமிழ் மக்களின் தீர்வுத்திட்டத்திலும், பொருளாதாரத்திலும் குறித்த அரசியல்வாதகிள் தமது வயிற்றை நிரப்புவதற்கும், கதிரைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலும் செயற்பட்டிருக்கிறார்களே தவிர, வன்னி பிராந்தியத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற அனைத்து அபிவிருத்திகளிலும் தமது மூக்கை நுழைத்து அது தவறு, இது தவறு எனக் கூறி எனக்குக் கிடைக்காதது உனக்கும் கிடைக்கக்கூடாது என்கிற செயற்பாட்டின் மூலம் இதன் இலாபத்தை முஸ்லீம் தலைமைகளே அடைந்துகொள்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.
புதிய பஸ்தரிப்பு நிலையம் தொடர்பாக வர்த்தக சங்கம், வன்னி பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தொலைபேசியின் ஊடாக இதற்கான உரிய தீர்வினைப் பெற்றுத்தாருங்கள் எனக் கேட்டபோது அதற்கு அவர்கள் தொலைபேசியில் கூட தகுந்த பதில் வழங்க மறுத்துவிட்டனர். இதற்குக்காரணம் மஸ்தானை நாடிச்சென்றமையே எனவும் கூறப்படுகின்றது. போக்குவரத்து அமைச்சராக டெனீஸ்வரன் அவர்கள் இருந்தபோது, வவுனியா அரச போக்குவரத்து பேரூந்து சபைக்கு முன்பாக டெனீஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த நிகழ்வை அவரது இணைப்பாளர் மயூரன் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது இவர் அரச போக்குவரத்து பேரூந்து சபைக்கு ஆதரவாகவே தனது கருத்துக்களைத் தெரிவித்தார். இதேவேளை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயூரன் தற்போது நகர அபிவிருத்திக்காக பஸ் நிலையம் இடம்மாற்றம் பெறுவதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் இவர் தற்போது இரட்டைவேடம் போடுவதாக ஒருசில வர்த்தகர்களும், அரசியல்வாதிகளும் குறிப்பிடுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபக்கத்தில் அரச போக்குவரத்துப் பிரிவினர் இது 90வருடம் குத்தகைக்கு எடுக்கப்பட்ட இடம் என்பதால் நாம் மத்திய அரசுக்கு உட்பட்டவர்கள் என்ற ரீதியில் விதண்டாவாத பேச்சுக்களை நடாத்தி வருகின்றனர்.
தனியார் பஸ்சேவையினைப் பொறுத்தவரை புதிய பஸ்தரிப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு பூரண சம்மதத்துடன் இருக்கின்றனர். ஆனாலும் அரச போக்குவரத்து பேரூந்துகளும் அங்கு அனுப்பப்படவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். அவ்வாறு புதிய பஸ்தரிப்பு நிலையத்தில் இரண்டு பஸ்சேவைகளும் இடம்பெறவேண்டுமாயின் அரச மற்றும் தனியாருக்கு என வேலி ஒன்றினையும் அமைத்துத்தருமாறு கோருகின்றனர். வவுனியாவில் சுமார் 450 கடைகளுக்கு மேல் இருக்கிறது. பஸ்தரிப்பு நிலையத்தை அண்மித்து 25 தேனீர் கடைகள் இருக்கிறது. இதைவிட பஸ்தரிப்பு நிலையத்தில் மாத்திரம் 150 கடைகள் இருக்கிறது. இவர்களுடைய அன்றாட வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் ஒருசில வர்த்தகக் கடைகள் அவ்விடத்தை விட்டு அரச போக்குவரத்து பேரூந்து சபை வெளியேறக்கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதைவைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் அரசியல்வாதிகள் அதில் குளிர்காய்ந்துகொண்டு தமது அரசியலை நடாத்திவருகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதற்கான தீர்வு கிடைக்கவேண்டும் என்று முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களும், ஒருசில அரசியல்வாதிகளும் மும்முரமாக செயற்படுகின்றனர். அவர்கள் தமது அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டனர் என்பதே தற்போதும் இப்பிரச்சினை இழுபறி நிலையில் தொடர்வதற்கான காரணம் என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது.
இதற்கான தீர்வு என்ன எனப் பார்க்கும்போது மூன்று தரப்பினரும் மூன்று விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். தனியார் போக்குரவத்தினைப் பொறுத்தவரை வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. அரச போக்குவரத்தைப் பொறுத்தவரை வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது பிரச்சினை இல்லை. ஆனால் இந்த 450 கடைகளிலும் பணிபுரியும் 2000 தொழிலாளர்களும் அதன் முதலாளிகளுமே இதனால் பாதிக்கப்படப்போகிறார்கள். இதில் அரச போக்குவரத்தினை ஒரு பகுதியில் வைத்துக்கொண்டாலும் தனியார் மற்றும் தொழிலாளர்களும் முதலாளிகளும் கருத்திற்கொள்ளப்படவேண்டியவர்கள்.
முதல்வருக்கு இப்பிரச்சினையில் தெளிவான புரிதல் இல்லாமையின் காரணமாகவே தவறான முடிவுகளுக்குச் செல்கிறார். உதாரணமாக வவுனியா பொருளாதா மத்திய நிலையத்தைப் பொறுத்தவரை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினது அறிவுரைகளைக் கேட்டு செயற்பட்டதன் விளைவே இந்த நிலையம் தமிழ் மக்களின் பிரதேசத்தில் இருந்து இல்லாமல் போகச் செய்யப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களே. இதற்காக ஓமந்தையில் உண்ணாவிரதம் இருந்தபோது அதை முடித்துவைத்தவர்கள் சிவசக்தி ஆனந்தனும், முன்னாள அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களும் தான். இதற்கெல்லாம் உண்ணாவிரதம். மக்களாகிய நாம் தான் சிந்திக்கவேண்டும்.
நகர அபிவிருத்திகள் என்று வருகின்றபோது அந்த அபிவிருத்திகள் செய்யப்படத்தான் வேண்டும். அதற்காக இருக்கக்கூடிய தொழிலாளிகளை பாதிக்கும் வகையில் அபிவிருத்திகள் செயற்படுத்தப்படக்கூடாது. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இவ்வாறான பொதுவான அபிவிருத்திகளுக்குள் தங்களது அரசியலை திணிப்பதன் காரணமாகவே இதற்கான சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாத நிலை தோன்றியுள்ளது. சரியான தலைமைகளை நாம் தெரிவுசெய்யவேண்டிய நிலை தோன்றியுள்ளது. மக்களது நலன் தொடர்பில் சிந்திக்கக்கூடியவர்களே தேவை.
பா.உ சிவசக்தி ஆனந்தனைப் பொறுத்தவரை வவுனியாவில் அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனால் அவர் யாழ் தலைமைக்கு கட்டுப்பட்டவராக இருப்பதால் தனது பணிகளை திறம்படச் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் அவர் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படவேண்டிய தேவையும் இருக்கிறது. ரெலோ, புளொட் கட்சிகள் முதுகெலும்பு அற்றவர்கள் என்பது உண்மை. இவர்களது கடந்த கால அரசியல் வரலாறு வவுனியா நகரத்தையே தலைகீழாக மாற்றியது. கொலை, கொள்ளை, கப்பம் போன்ற விடயங்களில் ஈடுபட்டவர்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எப் சற்று விதிவிலக்காகச் செயற்பட்டது.
வவுனியா இவ்வாறான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள ஆயுதக் கலாசாரமற்ற சூழலில் நகர அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக செயற்படும் இவர்களுக்கு மக்கள் தான் தீர்ப்புக்கூறவேண்டும். உள்ளுராட்சி தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமது அரசியலை முன்கொண்டுசெல்வதற்கு வவுனியா புதிய பஸ்தரிப்பு நிலையம் ஒரு எடுகோளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரீ மொபைல் பணிப்பாளர் செந்தில்நாதன் அவர்களும், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மயூரன் அவர்களும், வர்த்தக சங்கத் தலைவரும், தனியார் போக்குவரத்து ரஞ்சன் அவர்களும் இப்பிரச்சினைக்குத் தீர்வினைப் பெறும் நோக்கில் முன்னின்று செயற்பட்டு வருகின்ற நிலையில் இவர்கள் மீதும் சேறுபூசப்படுகின்றது. பா.உ மஸ்தானது தலைமையில் தான் வர்த்தக சங்கம் இயக்கப்படுகின்றது என்பது பரவலான குற்றச்சாட்;டு. ரீ மொமைல் செந்தில்நாதன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் இயக்கப்படுகிறார் என்பதும் குற்றச்சாட்டு. செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மயூரன் அவர்களும், டெனீஸ்வரனின் தலைமையில் ரஞ்சன் இயக்கப்படுவதாகவே மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இத்தகைய செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும். முதலமைச்சர் என்பவர் வன்னி மண் வாசனை தெரியாத ஒருவர். இந்த வன்னி மண் வாசனையைத் தெரியப்படுத்தும் நோக்கில் அரசியல்வாதிகள் செயற்படவேண்டும். காரணம் வன்னி பிராந்தியம் தொடர்பான பூரண அறிவு அவரிடம் இல்லை.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை முதல்வரை எதிர்த்து அரசியல் செய்ய பயப்படுகிறார்கள். இவரை எதிர்த்தால் தமது பதவி பறிபோய்விடுமோ என்கிற பயம் இவர்களுக்கு இருக்கிறது. இறுதியில் இந்த அரசியல்வாதிகள் மக்களுக்கு பிரதேச சபைத் தேர்தல் காலத்தின் போது இப்பிரச்சினையையும் சர்வதேசம் பாரத்துக்கொண்டிருக்கிறது என பொய்யினைக் கூறப்போகிறார்கள். பொது மக்களுக்காக ஒரு நகர அபிவிருத்தியில் செயற்படுத்தக்கூடிய விடயங்கள் எவை? உண்மையில் இவ் விடயங்கள் அனைத்தும் நடைமுறையில் திறமையாகச் செயற்படுத்தப்படுகிறதா? என்பதை நாம் உற்றுநோக்கவேண்டும்.
அந்த அடிப்படையில் உள்ளுராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள் இவைகள் தான்
01. பொதுச் சுகாதாரம்
02. திண்மக் கழிவகற்றல்
03. கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும்
04. வடிகானமைத்தல் பராமரித்தல்
05. தெருக்களுக்கு வெளிச்சம் தருதல்
06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்
07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
08. இடுகாடுகள், சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும்
09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
10. பொது மலசல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும்.
11. கிராமிய நீர் வினியோகம்
12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல்
13. தீயணைப்பு சேவைகள்
14. முன் பள்ளிகளை உருவாக்குதலும் பராமரித்தலும்
15. தாய் சேய் நலப்பணி
16. பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்
17. தொற்று நோய் தடுத்தல்
18. திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும்
19. தொல்லைகளைத் தவிர்த்தல்
20. பெண்கள் அபிவிருத்தி
21. கிராமிய மின்சாரம் வழங்கல்
22. வீடமைப்புத் திட்டம்
23. கல்வித் தளபாடங்கள்
24.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல்
25. கால்நடை பன்ணைகளை நடாத்துதல்
26. அறநெறிப் பாடசாலைகளை ஏற்பாடு செய்தல்.
27. சமய விழாக்களை ஏற்பாடு செய்தல்
28. கிராம அபிவிருத்திச் சங்கங்களை ஸ்தாபித்தலும வழிநடத்தலும்
29. வறியோருக்கு நிவாரணம் வழங்கல் போன்ற விடயங்களை உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தினால் பாரிய அபிவிருத்திகளை நாம் காணமுடியும்.
அரசியல்வாதிகளது வாய் பேச்சில் மாத்திரம் எதனையும் சாதித்துவிடமுடியாது. அரசியல்வாதிகள் என்பவர்கள் கொள்கைகளற்றவர்கள். காலத்திற்குக்காலம் தமது கொள்கைகளை மாற்றக்கூடியவர்கள். இவர்களைத் தெரிவுசெய்து பாராளுமன்ற, மாகாணசபைக்கு அனுப்பினால் அரசிற்குப் பயந்து இவர்களது அரசியல் நகர்த்தப்படுகின்ற காரணத்தினால் மக்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலை தோன்றியுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமே. முடிவுகள் எடுக்கப்படும்போது பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சரியான தீர்வுகள் எட்டப்படவேண்டும். அதைவிடுத்து இதனைவைத்து அரசியல் செய்பவர்கள் இனங்காணப்பட்டு மக்களால் ஓரங்கட்டப்படவேண்டும். இனிவரும் காலங்களிலும் இந்நிலை தொடருமாகவிருந்தால் மிக மோசமான விளைவுகளை குறித்த பிராந்திய அரசியல்வாதிகள் சந்திக்கநேரிடும். வடக்கு முதலமைச்சரின் முடிவுகள் என்பதும் பிரதேச வாழ் மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு செயற்படும் நிலைக்கு வந்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் வரும் நிலை ஏற்பட்டிருக்காது. இப்பிரச்சினையை அடிப்படையாக வைத்து முஸ்லீம், சிங்கள அரசியல் தலைமைகளும் சாதிக்கப்போகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இரணியன்