வவுனியா மதுவரித் திணைக்களத்தின் திடீர் சுற்றி வளைப்பில் 31 பேர் கைது

373

 

வெசாக் வாரத்தை முன்னிட்டு வவுனியா மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் 31 பேர் சட்டவிரோத மதுவிற்பனை, வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி பி.இரகுநாதன் தெரிவித்துள்ளார்.

mathuvari

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெசாக் வாரத்தை முன்னிட்டு கடந்த 30 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிதியில் எமது வவுனியா மதுவரித் திணைக்களத்தினால் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 31 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

அந்த வகையில் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தமை தொடர்பில் வவுனியா சிதம்பரபுரம், ஆசிகுளம், மகாரம்பைக்குளம், பெரியகோமரசன்குளம், சமனங்குளம், சின்னப்புதுக்குளம், வெளிக்குளம், மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் 10 வியாபார நிலையங்களைச் சேர்ந்தவர்கள் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு 4,000 ரூபாய் வீதம் தண்டம் அறவிடப்பட்டது.

அரசாங்க சாரயம் பதுக்கி வைத்திருந்த நிலையில் நாகர் இலுப்பைக்குளம், மாளிகை, பெரியதம்பனை, ஸ்ரேசன் றோட், தாலிக்குளம், நெடுங்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 10,000 ரூபாய் வீதம் நீதிமன்றத்தால் தண்டம் அறவிடப்பட்டது.

கிளிநொச்சி, பரந்தன், சிவபுரம் பகுதியில் 10 கிராம் மற்றும் 20 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அவர்களிடம் இருந்து 10,000 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்ட அதேவேளை 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கசிப்பு விற்பனை தொடர்பில் விஸ்வமடுவில் 2,000 மில்லி லீற்றா, 1150 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவரும், சாராயம் மற்றும் கள்ளு விற்பனை தொடர்பில் நால்வரும், சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்தமை தொடர்பில் அறுவரும், சட்டவிரோதமாக பியர் விற்றமை தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE