வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் கம்பனி மூலம் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் 25 பேரை இடைநிறுத்தியமையால் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் 30 விதவைகள் உட்பட 45 தமிழ், சிங்கள சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த நிலையில் தற்போது புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள எல்ஆர்டீசி என்ற நிறுவனம் அவர்களில் 20 பேரை உள்வாங்குவதாகவும் ஏனையோரை வேலையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் தாம் 45 பேரும் உள்ள வேலைகளை பகிர்ந்து செய்வதாகவும் அதற்கேற்ப தமது சம்பளத்தை தருமாறும் கோரி 45 பேரும் தொடர் போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வவுனியா பொது வைத்தியசாலை கழிவுகள் அகற்றப்படாமையால், வைத்தியசாலையில் கழிவுகள் குவிந்துள்ளதுடன் எங்கும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இதேவேளை, வவுனியா நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களை தற்காலிகமாக கழிவுகளை அகற்றித் தருமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்ட போதும் அவர்கள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.