சீனாவில் புதிய வகை ஹோவர் பேருந்தை அடுத்த ஆண்டு பரிட்சார்த்த முறையில் செயல்படுத்த உள்ளனர். இனி வாகன நெரிசல் அறவே இருக்காது என இதன் வடிவமைப்பாளர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். காரணம் இந்த ஹோவர் பேருந்தில் ஒரே நேரம் 1200 பயணிகள் வரை பயணிக்கலாம்.
மட்டுமின்றி, இந்த ஹோவர் பேருந்தின் வித்தியாசமான வடிவமைப்பால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் மீதே இது பயணிக்கிறது.
இதனால் சொந்த வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு நெரிசல் ஏற்பட்டு இடையூறு உண்டாகும் என்ற அச்சம் தேவை இல்லை.
சீனாவின் கொடிய வாகன நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அங்குள்ள ஒரு நிறுவனம் இந்த ஹோவர் பேருந்து திட்டத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹோவர் பேருந்துக்கான வழித்தடங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை அடுத்த ஓராண்டுக்குள் முடித்து திட்டத்தை செயல் வடிவம் கொண்டுவர அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்கு முன்பாக சீனாவின் குயின்ஹுவான்ஹடோ நகரில் ஹோவர் பேருந்து சேவையை வெள்ளோட்டம் விடவும் இதன் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.