வாக்சிங் செய்த பின்பு சரியான முறையில் பராமரிக்காவிட்டால் உண்டாகும் சரும பிரச்சினைகள்

367
வாக்சிங் செய்த பின் இத செய்யலைனா இந்த பிரச்சனைகள் வரும்...

வாக்சிங்
பெண்கள் தேவையற்ற முடிகளை நீக்க வாக்சிங் செய்து கொள்கிறார்கள். வாக்சிங் செய்த பின்பு சரியான முறையில் பராமரிக்காவிட்டால், அது பல்வேறு விதமான சரும பிரச்சினைகளை உருவாக்கிவிடும். வாக்ஸ் செய்த 24 முதல் 36 மணி நேரம் வரை சருமத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பாக்டீரியா தொற்று, படை, சொறி, சிவப்பான திட்டுகள் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

வாக்ஸ் செய்த பின்பு அதில் ரோம வளர்ச்சியை தடுக்கும் லோஷனை பூசலாம். இந்த லோஷன் வாக்சிங்குக்கு பின்பு சருமத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கும். அதோடு உள்ளே தோன்றும் முடி வேரின் வளர்ச்சியையும் தடுக்கும். சிவப்பு திட்டுகள் உருவாகுவதை தடுக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. இந்த லோஷன், சருமத்தின் தண்ணீர்த்தன்மையை தக்கவைக்கவும் உதவும்.

வாக்ஸ் செய்த பின்பு ஐஸ் கியூப் பயன்படுத்தி மசாஜ் செய்வது மிகவும் நல்லது. சருமத்தில் நீர்க்கட்டு, வீக்கம் போன்றவை தோன்றுவதை ஐஸ் கியூப் கட்டுப்படுத்தும். ஐஸ் கியூபை சருமத்தில் நேரடியாகவோ, காட்டனில் சுற்றி பொதிந்துவைத்தோ மசாஜ் செய்யலாம்.

வாக்ஸ் செய்த பின்பு கற்றாழை, டீ ட்ரீ ஆயில் போன்ற மூலிகை சேர்த்த ஜெல்களையும் பூசலாம். தொடர்ந்து சில நாட்கள் அவைகளை பூசி வருவது நல்லது.

எண்ணெய்த்தன்மை கொண்ட அழகுசாதன பொருட்களையும், வறட்சியை உருவாக்கும் பொருட்களையும் சருமத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மணம் கொண்ட மற்றும் நிறம்கொண்ட பாடி வாஷ்கள், ஸ்பிரேக்கள், லோஷன்கள், டியோடரன்டுகள், வாஸ்லின், எண்ணெய் வகைகள் போன்றவைகளை வாக்சிங் செய்த பின்பு பயன் படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது சரும துவாரங்களை அடைத்து, சரும திட்டுக்களை உருவாக்கிவிடும். மணமும், நிறமும் வழங்கும் பொருட்களை வாக்சிங் செய்த பின்பு பயன்படுத்தினால் அது சருமத்தை வெகுவாக பாதிக்கும்.

வாக்சிங் செய்த இடத்தில் குறைந்தது 48 மணி நேரமாவது சூரிய ஒளி நேரடியாக படக்கூடாது. சூரிய ஒளிபட்டால் சருமம் பாதிக்கப்படும். வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

குறைந்தது 48 மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. உப்பு கலந்த நீர் வாக்சிங் செய்த சருமத்தில்படுவது நல்லதல்ல. நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் கலக்கப்பட்டிருக்கும். அதுவும் சருமத்திற்கு ஏற்புடையதல்ல. நீச்சல் குளத்தில் உள்ள நீரில் பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கும். அதுவும் சரும ஆரோக்கியத்தை பாதிக்கும்.

வாக்சிங் செய்த இரண்டு நாட்களுக்கு உடற்பயிற்சியை தவிர்க்கவேண்டும். கடுமையான உடல் உழைப்பையும் தவிர்ப்பது சிறந்தது. தவிர்க்காவிட்டால் உடலில் உருவாகும் அதிக வியர்வை, பாக்டீரியாக்களை உருவாக்கி சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

SHARE