விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொழுது கருணா குழுவினர் வெறும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மாத்திரம் தான் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று கருணா என்று அழைக்கப்படும் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளில் கருணா குழவினர் நேரடியாக இராணுவ ரீதியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்காக இந்த காணொளியை இங்கு இணைத்திருக்கிறோம்.
பயங்கரவாதத்தை முறியடித்ததில் தாம் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் என்ற தலைப்பில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய சர்வதேச கருத்தரங்கில், யுத்தத்தில் கருணா குழுவின் பங்கு பற்றி ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிறிலங்கா இராணுவத்தின் 57வது விசேட படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சகி கலகே, இராணுவ நடவடிக்கைகளின் பொழுது கருணா குழு நேரடியாகப் பங்குபற்றவில்லை என்றும் அவர்கள் விடுதலைப் புலிகள் தப்பிச் செல்லக் கூடிய இடங்கள், விமான நிலையங்கள் மற்றும் கேந்திர நிலையங்களில் மாத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கருணா குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கேணல் கருணா என்று அழைக்கப்படும் சிறிலங்காவின் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான
உதவிகளை வழங்குவதற்காக மாத்திரமே தமது உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால் யுத்த காலங்களில் கருணா குழுவினர் நேரடியாகவே இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தின் ஒரு படைப்பிரிவாகவே கருணா குழுவினர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை கருணா குழுவினர் நேரடியாகவே திட்டமிட்டு மேற்கொண்டனர். இதற்கான ஆதாரங்களை இந்த காணொளியில் காணலாம்.
கருணாவும் பிள்ளையானும் பிரிவதற்கு முன்னர் கருணா குழுவினர் என்றும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) என்றும் அழைக்கப்பட்ட தரப்பினரால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட இறுவட்டில் இதற்கான ஆதாரங்களை அவர்களே வெளியிட்டுள்ளார்கள். ஒரு மணிநேர இந்த இறுவெட்டு கருணாகுழு ஆயுதக்குழுவாக செயற்பட்டது என்பதற்கும் விடுதலைப்புலிகள் மீதான போரில் தாக்குதல்களை நடத்தினார்கள் என்பதற்கும் ஒரு ஆதாரமாகும்.
2006ம் ஆண்டின் இறுதியிலும், 2007ம் ஆண்டிலும் ஐரோப்பாலில் கருணா குழுவினருக்கான ஆதரவினையும் பெருமளவு நிதியினையும் வசூலிக்கும் நோக்கில் கருணா குழுவினரால் குறிப்பிட்ட சிலருக்கு இந்த இறுவெட்டு விநியோகிக்கப்பட்டது.
கருணா குழுவின் மிக நெருங்கிய ஆதரவாளர்களிடையே மிகவும் இரகசியமாக விநியோகிக்கப்பட்ட இந்த இறுவெட்டில் கருணா குழுவினர் இராணுவச் சீருடை தரித்து பயங்கர ஆயுதங்களைச் சுமந்தபடி காட்சி தருவது, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசுவது, ஆயுதப் பயிற்சி எடுப்பது, விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடாத்துவது, கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்களை வீசி எறிவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் ஜனநாயக முகமூடி அணிந்து அரசியல் நடாத்திவரும் ரீ.எம்வி.பி. என்ற ஆயுதக் குழு ரீ.எம்வீ.பி என்ற தனது கட்சியின்
சின்னத்தை சீருடையாகத் தரித்து இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், இராணுவ பதவிநிலைகளைக் கொண்டிருப்பதும், தமிழ் மக்கள் நன்கறிந்த அந்த குழுவின் உறுப்பினர்கள் ஆயுதங்களைத் தாங்கியபடி கொலை வசனங்கள் பேசுவதும், ரீ.எம்வீ.பீ இனது சின்னத்தில் இந்த ஆதாரங்களை அவர்கள் ஒரு இறுவட்டில் பதிவுசெய்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.
அந்த நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட ( பனிச்சங்கேணி விடுதலைப்புலிகள் முகாம் தாக்குதல்) சில தாக்குதல்களில் கருணா குழுவினர் நேரடியாகப் பங்குபற்றியிருந்த உண்மை ஆதாரங்களுடன் இங்கு நிரூபிக்கப்படுகின்றது.
கருணாவின் தலைமையில், பிள்ளையானின் வழிநடாத்தலிலேயே தாம் செயற்படுவதாக இந்த ஆயுததாரிகள் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அந்த நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட சில தாக்குதல்களில் கருணா குழுவினர் நேரடியாகப் பங்குபற்றியிருந்த உண்மை ஆதாரங்களுடன் இங்கு நிரூபிக்கப்படுகின்றது.
2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் திகதி மட்டக்களப்பில் உள்ள பனிச்சங்கேணி, கட்டுமுறிவு பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முகாம்கள் ரீ.எம்.வீ.பி. என்ற கருணா குழுவினரால் தாக்கப்பட்டதையும்,, அதற்கான திட்டங்களை கருணா குழு உறுப்பினர்களான மதி, ஜெயா போன்றவர்களே நேரடியாகத் தீட்டியிருந்ததையும்;, ஆதாரங்களுடன் இங்கு நிரூபிக்கப்படுகிறது.
கருணா குழு சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டனர் என்பதையும், சரணடைந்தவர்களையும் அப்பாவி பொதுமக்களையும் கருணா குழுவும் இணைந்தே படுகொலை செய்திருந்தது என்பதற்கு ஆதாரங்களும் சாட்சிகளும் உள்ளன.
சிறிலங்கா அரசு மட்டுமல்ல சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும் முரளீதரன், கிழக்கு மாகாண முதலமைச்சராக இருக்கும் பிள்ளையான் ஆகியோரும் இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கருணாகுழு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவத்தாக்குதலில் ஈடுபடவில்லை என சிறிலங்கா அமைச்சர் முரளீதரனும், 57ஆவது கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சகி கலகேயும் கூறிய விடயங்கள் முற்றிலும் பொய்யான விடயம் என்பதையும், கருணாகுழு பிள்ளையான்குழுக்கள் சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதற்கும் இந்த காணொளி காட்சி ஒரு ஆதாரமாகும்.
இன்னொரு முக்கியமான விடயத்தையும் சுட்டிக்காட்டவிரும்புகிறோம். கருணாகுழு இராணுவ தாக்குதல்களில் ஈடுபடுத்தப்படவில்லை என சர்வதேச மகாநாடு ஒன்றில் சர்வதேச பிரதிநிதிகளுக்கு பொய்யை கூறிய சிறிலங்கா இராணுவத்தினர் சர்வதேசத்தை பிழையாக வழிநடத்த முற்பட்டிருக்கின்றனர்.
சர்வதேச மகாநாடு ஒன்றில் பொறுப்பு வாய்ந்த அதிகாரியான சிறிலங்கா இராணுவத்தின் 57வது விசேட படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சகி கலகே, பொய் ஒன்றை கூறி சர்வதேச மகாநாட்டில் கலந்து கொண்ட சர்வதேச நாடுகளை தவறாக வழிநடத்த முற்பட்டிருக்கிறார்.
சிறிலங்கா காலம் காலமாக இவ்வாறுதான் பொய்யான தகவல்களை கூறி சர்வதேசத்தை பிழையாக வழிநடத்தி வருகிறது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை.