விடுதலைப் புலிகள் கொலைகாரர்கள்!!: ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் விக்னேஸ்வரன்- கே. சஞ்சயன்(கட்டுரை)

388

 

விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ்.

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த ஆவணப் பதிவை வெளியிட்டு வைத்தவர், வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன்.

அதில், தமது கட்சியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால், படுகொலை செய்யப்பட்டதாக மாத்திரம் அந்த வரலாற்று ஆவணக் குறிப்பு வெளிப்படுத்தவில்லை.

‘கந்தன் கருணை’யில் 60 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் டெலோ தலைவர் உள்ளிட்ட அந்த அமைப்பின் போராளிகள், பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் இறுதிச் சடங்கைக் கூட, தமது கட்சி, ஆட்சி நடத்திய வடகிழக்கு மாகாண சபையே நடத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆவணத்தின் மூலம், விடுதலைப் புலிகளைப் படுகொலையாளர்களாக ஈ.பி.ஆர்.எல்.எப் வெளிப்படுத்த முனைவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

அதுமாத்திரமன்றி, அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் துணைபோயிருப்பதாகவும் பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்த ஆவணம், வடக்கு அரசியல் களத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக மாறும் அறிகுறிகள் தென்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் காலத்தில், துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் பலருக்கு இப்போது, வடக்கு, கிழக்கில் தியாகிகளாக மரியாதை அளிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில், இது சாத்தியமாகி இருக்கிறது.

அவ்வாறான ஒன்று தான், ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்டுள்ள வரலாற்று ஆவணம். இதைத் தவறானது என்று யாரும் கூறமுடியாது.

நடந்த சம்பவங்கள் தான் வரலாறு ஆகின்றன. வரலாறு ஒன்றைப் பதிவு செய்யும் போது, தவறுகளும் அதில் சேர்க்கப்படுவது, தவிர்க்க முடியாதது தான்.

ஆனால், இதே ஆவணத்தை, 2009இற்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் இருந்த போது, வெளியிடுகின்ற துணிச்சல் அந்தக் கட்சிக்கு இருந்திருக்கவில்லை.

போர் முடிந்து, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான், அந்தத் துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் தவறுகளைச் செய்யவில்லை என்றோ, சகோதர இயக்கங்களின் உறுப்பினர்கள், தலைவர்களைப் படுகொலை செய்யவில்லை என்றோ எவரும் நியாயப்படுத்த முடியாது.

ஆனால், இப்போதைய சூழ்நிலையில், வரலாறு என்ற பெயரில், விடுதலைப் புலிகளைப் படுகொலையாளர்களாக அடையாளப்படுத்த, ஈ.பி.ஆர்.எல்.எப் ஏன் முற்பட்டுள்ளது என்பது, சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

ஏனென்றால், ஈ.பி.ஆர்.எல்.எப்வின் இந்த ஆவணத்தின் விளைவு, அந்தக் கட்சியுடன் மாத்திரம் தொடர்புடையதொன்றாக இருக்காது. தமிழ் அரசியல் பரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் தலைவர்களை, அதன் போராளிகளைப் புலிகள் படுகொலை செய்தார்கள். ஆனால், அதற்குப் பின்னால், சில காரணங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்திய – இலங்கை உடன்பாட்டை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட ஏனைய இயக்கங்கள் அதை ஏற்றுக்கொண்டன.

புலிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வடகிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றி, ஈ.என்.டி.எல்.எவ்வுடன் இணைந்து அதன் நிர்வாகத்தையும் நடத்தியது ஈ.பி.ஆர்.எல்.எப்.

அந்தக் காலகட்டத்தில், இந்தியப் படையினருடன் இணைந்து புலிவேட்டையிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபட்டது.

தமிழ்த் தேசிய இராணுவம் என்ற பெயரில், இளைஞர்களைப் பிடித்துச் சென்று, கட்டாய ஆயுதப் பயிற்சியிலும் ஈடுபடுத்தியது.

அதற்குப் பின்னர் தான், அந்தக் கட்சியின் தலைவர்கள், புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்கள். புலிகளை அழிப்பதற்காகச் செயற்பட்ட ஒரு தருணத்தில் தான், அந்த இயக்கத்தின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டது,

TELO.sabaratnam-1-1அதேவேளை, டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் புலிகளால், ஆரம்பத்திலேயே கொல்லப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களை, ஆரம்பத்தில், அந்த இயக்கத்தை தடை செய்த போது, புலிகள் கொல்லவில்லை; அவர்கள் தப்பிச் செல்வதற்கு அனுமதித்தனர்.

எனவே, அவர்களைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம், புலிகளுக்கு இருந்தது எனச் சொல்ல முடியாது.

பத்மநாபா உள்ளிட்டவர்களின் படுகொலைகளுக்குப் பின்னரும், ஈ.பி.ஆர்.எல்.எப்வைச் சேர்ந்தவர்கள் அரச படையினருடன் இணைந்து செயற்பட்டதும், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள், அரசாங்கப் பதவிகளை வகித்ததும் யாரும் மறுக்க முடியாது.

indexஎவ்வாறாயினும், பின்னர் ஒரு கட்டத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப்வை மன்னித்து, விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எப் செய்த தவறுகளுக்காக சுரேஷ் பிரேமசந்திரன் மன்னிப்புக் கோரியதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்ட வரலாற்று ஆவணத்தில், புலிகளின் படுகொலைகள் பற்றி, புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றியதைப் பற்றிக் கூறப்பட்டுள்ள போதும், வரலாற்றில் தாம் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளவோ, அவற்றை வெளிப்படுத்தவோ இல்லை.

விடுதலைப் புலிகளின் படுகொலைகளை அடையாளப்படுத்த முற்படும் போது, ஈ.பி.ஆர்.எல்.எப், தமது தவறுகளையும் ஒப்புக்கொண்டு, அவற்றைப் பட்டியலிட்டிருக்க வேண்டும்; அது தான் நியாயமானது; நேர்மையானது. விடுதலைப் புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள், தாம் செய்த தவறுகளையும் வெளிப்படுத்துவது தான் முறையானது.

அந்தவகையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் தனது தவறுகளை ஒப்புக்கொண்டால், அது அவர்களின் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானதாக அமையும். அதனால் அந்தக் கட்சி அத்தகையதொரு முடிவுக்கு ஒருபோதும் வரப் போவதில்லை.

வரலாறு என்று வரும்போது, உண்மையும் நேர்மையும் இருக்கும்போது தான் அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

விடுதலைப் புலிகளைப் படுகொலையாளர்களா,க ஈ.பி.ஆர்.எல்.எப் அடையாளப்படுத்த முனைந்ததைப் போலதான், இலங்கை அரசாங்கமும் அவர்களைப் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்த முனைந்தது.

ஆனால், விடுதலைப் புலிகளை அழித்து 10 ஆண்டுகளாகியும் அவர்களின் தடயங்களையோ, கொள்கைகளையோ அழிக்க முடியவில்லை.

இப்போதும் புலிகளைக் கொண்டாடும் நிலையிலேயே தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கூட, புலிகளைப் புகழ்ந்தும், புலிகளின் பாடல்களை ஒலிபரப்பியும் ஆதரவு தேடும் நிலை தான் இருக்கிறது, ஏன், புலிகளைப் படுகொலையாளர்களாகச் சித்திரித்த ஈ.பி.ஆர்.எல்.எப் கூட, புலிகளின் பெயரைப் பயன்படுத்தியே தனது அரசியல் வெற்றியைப் பெற்றது.

புலிகளைப் படுகொலையாளர்களாகவோ, பயங்கரவாதிகளாகவோ, மக்கள் நினைத்திருந்தால், ஏற்றுக் கொண்டிருந்தால், தாமாகவே புலிகளை நினைவு கூரும் நிலையில் மக்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

இன்று, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பில் இருந்தவர்களை அந்த அமைப்பே நினைவு கூர்கிறது. வேறு யாரும் அதைத் திரும்பியும் பார்ப்பதில்லை.

புலிகள் இயக்கத்தின் போராளிகளை, ஒட்டுமொத்தத் தமிழர்களும் நினைவு கூரும் நிலை தான் இருக்கிறது, வரலாற்றை மறைக்கவோ திரிக்கவோ முற்படும் போது, எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப்வின் இந்த நடவடிக்கை, அரசியல் மட்டத்தில் பலத்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

விக்னேஸ்வரனின் கூட்டணியில் இருந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போது விலகியிருப்பதற்குக் காரணமே, ஈ.பி.ஆர்.எல்.எப் தான். உள்ளூராட்சித் தேர்தலில், ஈ.பி.ஆர்.எல்.எப் நடந்து கொண்ட முறை தான் இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கிறது,

இரண்டு தரப்புகளையும் ஒட்ட வைப்பதற்குக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், வரலாற்று ஆவணம் ஒன்றின் மூலம், அதற்கு மீண்டும் ஆப்பு வைத்திருக்கிறது ஈ.பி.ஆர்.எல்.எப். புலிகளைப் படுகொலையாளர்களாக ஆவணப்படுத்திய ஈ.பி.ஆர்.எல்.எப்வுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டு வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியலைப் பாதிக்கும்.

இந்தக் கட்டத்தில், திரிசங்கு நிலையில் சிக்கியிருப்பவர் விக்னேஸ்வரன் தான். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளை நம்பித் தான் புதிய கட்சியைத் தொடங்கினார்.

அவரது அந்தக் கட்சி இப்போது, சுரேஷ் பிரேமசந்திரனின் வலைக்குள் சிக்கி விட்டது. இதனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியே நிற்கிறது.

அனந்தி சசிதரன் கூட, புலிகளைப் படுகொலையாளர்களாக எழுத்தில் ஆவணப்படுத்தியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்வுடன் கூட்டணி வைத்துக் கொள்வாரா என்பது சந்தேகம் தான். ஏற்கெனவே, ஐங்கரநேசனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்வுக்கும் பகை இருக்கிறது.

இந்த நிலையில், விக்னேஸ்வரனுடன் கூட்டணி சேரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களைத் தனியே விலகி நிற்க வைத்திருக்கிறது ஈ.பி.ஆர்.எல்.எப். இது தான், அந்தக் கட்சியின் இலக்கோ என்ற கேள்வியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் என்பது சூழ்ச்சிகள் நிரம்பிய ஒரு களம். அந்த அரசியல் களத்தின் சூழ்ச்சிகளை அவ்வளவாகப் புரிந்து கொள்ளாத விக்னேஸ்வரனும் கூட, அதில் அகப்பட்டிருக்கிறார் போலவே தெரிகிறது.

-கே. சஞ்சயன்-

SHARE