விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் என்ற அரசின் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை.

809

 

 

“ஒற்றையாட்சியின் கீழ் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதில் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. அதனால், பலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் இந்திய முறையிலான ஒரு தீர்வை உடன் அமுல்படுத்துமாறு எமது கட்சி அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றது” என்று தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள எட்டு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருந்த 94 பொதுச் சபை உறுப்பினர்கள் பங்குபற்றிய இந்த கூட்டம், கடந்த 5 ஆம் திகதி யாழ்ப்பாணம், காங்சேகன்துறை வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழு விவரம் வருமாறு:

1. தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவரை இந்தியாவில் 16.1.2011 அன்று சந்தித்த பின் தமிழ் மக்களதும் தமிழ்க கட்சிகளதும் ஒற்றுமைக்காக உறுதி பூண்டு அன்றிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டங்கள், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அழைக்கும் போதெல்லாம் காலம், நேரம், தூரம் பாராமல் சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடும் பேச்சுகளுக்கு உள்ளுரிலும் சரி, வெளிநாட்டிலும் சரி இன்றுவரை கூட்டணியை அழைக்கவோ ஆலோசனை கேட்கவோ முன்வராத காரணத்தால் கூட்டமைப்பில் தற்போது கூட்டணியின் நிலை என்ன என்பதை கூட்டமைப்பிடமிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்பார்க்கிறது.

2. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சில அங்கத்தவர்கள் தான்தோன்றித்தனமாக எடுக்கும் முடிவுகள் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருப்பதால் அவ்வாறான விடயங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அங்கம் வகிக்கும் கட்சிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி கோருகிறது.

3. சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்நோக்கும் எத்தகைய பிரச்சனையாயினும் வன்முறையின்றி பேச்சு மூலமும், இணக்கப்பாட்டுடனும், சமாதானமாகவும் தீர்த்துக் கொள்ளுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது.

4. தமிழர் விடுதலைக் கூட்டணி, ஏனைய இன மக்களாகிய சிங்களவர், முஸ்லீம்கள், மலாயர் போன்ற பல்வேறு இன, மத குழுக்களுடன் நல்லுறவை பேணுவதோடு இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் சமமாகவும் அவர்களுடைய ஜனநாயக, மனிதாபிமான அடிப்படை உரிமைகளை அனுபவிக்க உத்தரவாதமளிக்க வேண்டுமென அரசை கேட்டுக்கொள்கிறது.

5. யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்களாகியும் பல இடங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்கள் முறைப்படி மீள்குடியேற்றப்படவில்லை. அநேகர் வாழ்வதற்கு வழியின்றி பட்டினியால் வாடுகின்றனர். இம் மக்களின் தேவைகளை கவனிக்க ஒரு முறையான அமைப்பு உருவாக்கப்படுவதோடு வீடு உட்பட நிவாரணம் வழங்கும் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தலையிடுவதை தடுக்க வேண்டுமென அரசை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது. அத்துடன் போரால் பாதிக்கப்பட்டு வாழ வழியின்றி வறுமையில் வாடி தவிக்கும் பெண்களதும், சிறுவர்களதும் நலன்களை கவனிப்பதற்காகவும் ஒரு தனியான அமைப்பை உருவாக்கி அவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை கேட்டுக்கொள்கிறது.

6. எவரேனும் அடிக்கடி அப்பாவி மக்களைத் தொந்தரவு செய்து தலைமறைவாவதற்கு உரிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்று அரசை தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொள்கிறது. பொறுப்பற்ற சில அரசியல் தலைவர்களின் உளறல்களே இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறும் அரசின் நிலைப்பாட்டுக்கு வலுவூட்டியதன் விளைவே தற்போது 16 புலம் பெயர் அமைப்புக்களின் தடையாகும். இப்பதினாறு அமைப்புக்களில் அநேக அமைப்புக்களின் அங்கத்தவர்கள் புலிகளோடு எதுவித தொடர்பும் அற்றவர்கள். அவர்களே இத்தடை உத்தரவால் பாதிக்கப்படப் போகிறார்கள். இதனால் அந்த அங்கத்தவர்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக் கணக்கான எமது மக்கள் எதுவித உதவியுமின்றி பட்டினிச் சாவை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்பதை அரசுக்கு வலியுறுத்திக் கூறுவதோடு இம்முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறும் வேண்டுகிறோம்.

7. வட கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டும் அமைக்கப்பட்டுக் கொண்டும் இருக்கும் இராணுவ முகாம்கள் அப்பாவி மக்களுக்குப் பயத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதால் அர்த்தமற்ற இந்தச் செயற்பாட்டை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்பற்ற சிலரின் கூற்றுக்கள்தான் இதற்கு காரணமாக அமைகிறது என்பதையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சுட்டிக் காட்டுகிறது.

8. வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கும், 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது இடம்பெயர்ந்து இந்தியா சென்ற தமிழ் மக்களுக்கும் உரிய நஷ்ர ஈட்டை வழங்கி அவரவர் சொந்த இடங்களில் குடியேற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறான பிரச்சினைகள் ஜெனிவாத் தீர்மானத்தில் வலியுறுத்தத் தவறியமை வேதனையளிக்கிறது.

9. இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களையும், பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் இழந்த பின்பும் இனப் பிரச்சினைக்குரிய தீர்வு காணப்படுவதில் தாமதிப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும். பலரால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்த இந்திய முறையிலான தீர்வை உடன் அமுல்படுத்துமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்ட கருத்தும் ஒத்துப் போவதால் இந்திய அடிப்படையிலான ஒரு தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்வரவேண்டும் எனவும் வேண்டுகிறது. ஒற்றையாட்சியின் கீழ் ஒருபோதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதில் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது.

10. இடம்பெயர்ந்த மக்கள் முறையாக குடியேற்றப்படாமையாலும் இறந்த உறவுகளை எண்ணி அவர்களின் வீடுகளில் மரண ஓலம் கேட்பதாலும் அனுதாபத்துடன் அவர்களின் பிரச்சனைகளை அணுகாது, அவர்கள் மத்தியில் புதியவர்களை குடியேற்றுவது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல குடியிருக்கும் மக்களுக்கும் குடியேற்றப்படும் மக்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் அத்தகைய நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை கேட்டுக்கொள்கிறது. அதற்கு மாற்று யோசனையாக நாட்டில் காணியற்றவர்கள் பலர் இருக்கும்போது சிலர் தமது தனிப்பட்ட செல்வாக்கால் பெறுமதியான காணிகளைப் பெறுவதும், உரிமைக்கு மீறிய பிரதேசத்தை ஆட்சிசெய்வதும் தவிர்க்ககூடியதாக, சகல மாவட்டங்களிலும் காணியற்றவர்களுக்கு வழங்கக்கூடிய காணிகளை அடையாளம் கண்டு நாடளாவிய ரீதியில் காணிக் கச்சேரிகளை நடத்தி காணியற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். குடியேற்றப்பட இருக்கும் இடத்தில் வாழும் மக்களுடைய விகிதாசாரத்தைப் பேணுவதோடு உள்ளுரில் வாழும் மக்களின் கலைகலாசாரத்துக்கு முரண்படாத வகையில் அரை ஏக்கர் கால் ஏக்கர் என காணியுள்ளவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்கு குறைந்தது 2 ஏக்கர் காணி வழங்கும்படியும் அரசை தமிழர் விடுதலைக் கூட்டணி கோருகிறது. அத்துடன் திருகோணமலை மாவட்டம் சம்பூர், கூனித்தீவு மக்கள் அகதி முகாமில் துன்பங்களிலும், துயரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை மீளவும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு அவர்களின் எதிர்கால வசந்தமான வாழ்வுக்கு வழிசமைக்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை கேட்டுக்கொள்கிறது

11. விடுதலைப் புலிகள் இருக்கின்ற இடம்தெரியாமல் தீவிரமாகப் போராடியவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டோ அல்லது தப்பி பிற இடங்களுக்கோ குடிபெயர்ந்து சென்றுவிட்டார்கள். ஆகவே அவர்கள் மீது யுத்தக் குற்றம் சாட்டுவதை தவிர்க்க வேண்டும். தற்போது 90 வீதமான அப்பாவிகள்தான் சிறையிலுள்ளார்கள் எனத் தெரிந்திருந்தும் அவர்களையும் விசாரிக்க வேண்டிய நிலையை உருவாக்கிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதோடு சிறைப்பிடித்துள்ள அப்பாவி மக்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அரசை வற்புறுத்துகிறது.

12. ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா அயல்நாடாக இருப்பதால் நம்நாடு எதிர்நோக்கும் அனர்த்தங்கள் மற்றும் கஷ்டங்கள் (சுனாமி போன்றன) ஏற்படும்போது மருத்துவ வசதிகளோடு உணவு, உடை, கூடாரம் போன்ற உதவிகளையும் புரிந்து உதவ முன்வருவதும் இந்திய அரசே! தாய் நாடு – சகோதர நாடு – நட்பு நாடு என்று எப்படிப் பார்த்தாலும் இலங்கையும் இந்தியாவும் எக்காரணம் கொண்டும் பகைக்கவோ உறவை முறிக்கவோ கூடாதென்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தியும் கூறியுள்ளார். இந்த அடிப்படையில் மட்டுமல்ல எந்த அடிப்படையிலும் நட்புறவின் மூலமே எம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்த நிலைப்பாட்டை பலர் விமர்சித்ததுமுண்டு. இம் முறை அதே நிலைப்பாட்டை வலியுறுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமர் மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆகியோரை தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானத்தில் மாற்றம் செய்யுமாறு கேட்டிருந்தது. அந்த அடிப்படையில் எடுத்த இந்தியாவின் முடிவை வரவேற்கும் அதேவேளை எத்தனையோ விடயங்களில் எப்போதும் இந்திய அரசு இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறாது நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. அதற்கு உதாரணமாக இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு கச்சதீவை மீளப் பெறக் கூடிய வாய்ப்பு இருந்தும் இந்திய அரசு திரும்பப் பெற மாட்டோம் என்று கொடுத்த அறிக்கை சான்றாகும். இந்த உதாரணம் ஒன்று மட்டும் போதும் இந்தியாவை மிக உச்ச நிலைமைக்கு கொண்டு போய் வைப்பதற்கு. அதேவேளை இலங்கை அரசும் தன் பெருந்தன்மையைக் காட்டும் வகையில்

13ஆவது திருத்த சட்டத்தை ஏற்கனவே இந்தியாவுக்கு கொடுத்த உறுதிமொழியை அமுல்படுத்தி தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் எனத் தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டுகிறது. 13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிலர் அனுபவப் பற்றாக் குறை காரணமாக அடிக்கடி வெளிநாட்டுக்குச் செல்வதும் அங்கே சில அமைப்புக்களுடன் மகாநாடு நடத்தியதும், அறிக்கை விட்டதும் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமைக்கு காரணமாகலாம். 14. நான்தான் அந்த தீர்மானத்தை வடிவமைத்துக் கொடுத்தேன் என்று ஒரு கூட்டமைப்பின் பிரமுகர் கூறியது அமெரிக்காவையும் நவநீதம்பிள்ளையையும் அவமதிக்கும் செயலாகும். கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இலங்கைப் பிரதிநிதிகளைப் போய் சந்தித்தமைகூட விரும்பத்தக்க நிகழ்வல்ல. சம்பிரதாய சந்திப்பெல்லாம் இந்த விடயங்களுக்கு பொருந்தாது என்பதையும் தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கிறது.- என்றுள்ளது. TUlfTUlf01

 

SHARE