வித்யாவின் பிரிவு காமுகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விழிப்பினை ஏற்படுத்தட்டும்! – ந.சிவசக்தி ஆனந்தன்

341

 

மானுடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக அமைந்துவிட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலையைக் கண்டித்து, கடந்த 21.05.2015 அன்று மல்லாவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

 unnamed (6)

வித்யாவிற்கு நேர்ந்தகதி இனி எந்தவொரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது. மானுடமே வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இந்த ஈனச்செயல் அமைந்துள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி, சட்டத்தின்முன் நிறுத்துவதும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிப்பதுமே இத்தகைய செயலை ஓரளவிற்காவது தடுப்பதற்கு வழிவகுக்கும்.

வடக்கு-கிழக்கில் இராணுவ நடவடிக்கையின்போதும் அதன் பின்னரும் போதைப்பொருட்களின் பாவனையும், கலாசாரச் சீர்கேடுகளும் எமது கலாசாரத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. அவற்றின் வெளிப்பாடே வித்யா போன்றவர்களின் மீதான காமவெறித் தாக்குதல். இப்பிரதேசங்கள் போராட்ட காலங்களில் ஒழுக்கவிழுமியங்களைப் பேணிவந்தன. ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாட்டுடன் வாழ்ந்துவந்தனர். இன்று நிலை மாறியுள்ளது. நாம் சுயகட்டுப்பாட்டுடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், போதைப் பொருட்கள் பாவனைக்கு எதிராகவும் கல்விச் சமூகம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, நாம் அனைவரும் மிருகங்களல்ல மனிதர்கள் என்ற உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். எம்முடைய கலாசார விழுமியங்கள் பேணப்பட்டால் இத்தகைய அறுவெறுக்கத்தக்க சம்பவங்கள் நடைபெற்றிருக்காது.

வகுப்புரீதியாக ஒவ்வொரு மாணவரதும் பெற்றோரின் தொலைபேசி, முகவரி என்பவை வகுப்பாசிரியரிடமும் பாடசாலை அதிபரிடமும் கைவசம் இருக்க வேண்டும். யாராவது பிள்ளைகள் பாடசாலைக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் வரவில்லை? என்பதை பாடசாலை வகுப்பாசிரியர் அல்லது அதிபர் பெற்றோருடன் தொடர்புகொண்டு கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் பெற்றோரும் பிள்ளை இன்று பாடசாலைக்கு வர இயலாது என்பதை வகுப்பாசிரியரூடாகப் பாடசாலைக்குத் தெரியப்படுத்தினால் தொடர்பாடல் இடைவெளி குறையும். இது பல விரும்பத்தகாத செயல்களைத் தடுத்து நிறுத்தும்.

முன்பு தென்னாசியாவிலேயே கல்வியிலும், ஒழுக்கத்திலும், கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதிலும் முன்னணியில் இருந்த எமது சமூகம் இன்று சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, எம்மை வளரவிடாமல் பின்னோக்கி இழுக்கின்றது. இவற்றிலிருந்து நாம் கண்டிப்பாக விடுபட்டாக வேண்டும். அரசாங்கம் இத்தகைய சமூக விரோதிகளைச் சரியாக இனங்கண்டு, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். இந்நாட்டின் சகல மக்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. எனவே, இனியும் இத்தகைய கொடூரமான வன்செயல்கள் நடைபெறாத வண்ணம் உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வித்யாவின் கொடூர அகால மரணம் எமது கலாசார சீர்கேடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும். இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் உரியமுறையில் தண்டிக்கப்படவேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாகும். அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று கூறினார்.

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6)

unnamed (7)

unnamed (8) unnamed

SHARE