விராட் கோலி உலகக்கோப்பைக்கு வேண்டாமா? ஒன்றும் பண்ண முடியாது- குரல் கொடுத்த பாகிஸ்தான் வீரர்

93

 

2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவலுக்கு பாகிஸ்தான் வீரர் ஒருவர் இந்திய தேர்வுக்குழுவை எச்சரித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29-ம் திகதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும்.

இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருப்பதால் அங்கே டி20 கிரிக்கெட்டில் மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்று தேர்வு குழுவினர் கருதுகின்றனர்.

விராட் கோலியை நீக்குவது இந்திய அணிக்குத்தான் பாதிப்பை கொடுக்கும் என்று இந்த செய்திகளுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவலுக்கு பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் இந்திய தேர்வுக்குழுவை எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது..,
“உங்களால் விராட் கோலி இன்றி அணியை உருவாக்க முடியாது. ஏனெனில் அவர் பெரிய பேட்ஸ்மேன். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் அவர் இந்தியாவுக்காக 3 – 4 போட்டிகளை தனியாக வென்று கொடுத்தார்.

ஒருவேளை அந்தப் போட்டிகளில் விராட் கோலி இறங்கி நிற்காமல் போயிருந்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்த இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும்.

எனவே சமீப காலங்களில் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவது நியாயமற்றது.

டி20 உலகக்கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புபவர்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை சேர்ந்தவர்கள்” என்று கூறினார்.

SHARE