விரைவில் இந்தியா மீது போர்: அபுபக்கர் அறிவிப்பு

498

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிரான போர் பிரகடனத்தை, தனி இஸ்லாமிய நாட்டின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி அறிவித்துள்ளார். இதனால், ஈராக்கில் சிக்கியுள்ள நுாற்றுக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், 2002ம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல்களும், உள்நாட்டு கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த, சதாம் உசேனின் ஆதரவாளர்களான, ‘இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா – ஐ.எஸ்.ஐ.எஸ்.,’ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

பல நகரங்கள்:


இந்நிலையில், ஈராக்கில் உள்ள பலுஜா மற்றும் மொகல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களையும், சிரியாவின் சில பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றினர்.உலகம் முழுவதும், சன்னி முஸ்லிம்களின் ஆட்சியை கொண்டு வரும் நோக்கத்தில், தாங்கள் கைப்பற்றிய, ஈராக் மற்றும் சிரிய நகரங்களைக் கொண்டு, தனி இஸ்லாமிய நாட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பினர் அறிவித்தனர். புதிய நாட்டின் தலைவரான, (கலீபா) அபுபக்கர் அல் பாக்தாதி, உலகம் முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

 

ரம்ஜான் அறிவிப்பு:

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு, இணையதளத்தில் வெளியிடப்பட்ட, அபுபக்கர் அல்பாக்தாதியின் ரம்ஜான் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:சீனா, இந்தியா, பாலஸ்தீனம், சோமாலியா, அரேபிய தீபகற்பம், காக்கசஸ், சிரியா, எகிப்து, ஈராக், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஈரான், பாகிஸ்தான், டுனீஷியா, லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில், முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கைதிகள் போன்று வாழும் அவர்களுக்கு உதவ வேண்டும். அனாதைகள் மற்றும் விதவைகள் தங்கள் அவலநிலை குறித்து புகார் கொடுத்துள்ளனர். பெண்கள், தங்கள் குழந்தைகளை இழந்து, கண்ணீருடன் வாழ்கின்றனர். மசூதிகள் அசுத்தப்படுத்தப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஏற்க முடியாது. இந்த இயக்கத்தை, முஸ்லிம்களின் சமூகமாகக் காண வேண்டும். மற்றவர்களால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள், தங்கள் சகோதரர்களை, இந்த இயக்கத்தில் சேர்க்க வேண்டும்.விரைவில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது போர் தொடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 

அரபி மொழி:

அபுபக்கர் அல்பாக்தாதியின் உரையை, ஆங்கிலம், ரஷ்ய, பிரெஞ்ச், அல்பேனிய மற்றும் அரபி மொழிகளில், வெளியிட்டுள்ளதன் மூலம், தன் கருத்துக்களை, உலகம் முழுவதும் பரப்பும் வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு வெளியிட்டுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பெரிய நகரங்களில், நுாற்றுக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர். அபு பக்ர அல்பாக்தாதியின், இந்தியா மீதான போர் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், ஈராக்கில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

SHARE