விலைமாதுக்களாக ஆக்கப்படும் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்

413

downloadwickneswaran467a11bbfad7b1d341b6b5e16438d2b3_XL

விலைமாது ஆகுவது? என்பது யாது? விலைமாது ஆக்கப்படுவது என்பது என்ன? என்ற கேள்விகளுக்கும், காதல் உருவாகுவது என்பது எது? காதல் செய்வது என்பது என்ன? என்னும் வினாக்களுக்கும் முதலில் பொருத்தமான விடைகளைக் கண்டுபிடித்த பின்னரே இன்று தமிழ் மக்களின் வெகுஜன அபிமானத்தைப் பேரளவில் பெற்றுக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பு அரசியல் வாதிகள் விலை மாதுக்களாக ஆக்கப்படுவது தொடர்பில் ஆக்கபூர்வமாக ஆய்வு செய்யமுடியும்.

maadhu

சினிமா தொடக்கம் சகல மட்டங்களிலும் காதலித்துத் திருமணம் முடித்தல் எனச் சாதாரணமான நிலையில் வழமையான பேசுபொருள் அமெரிக்கையாக இருந்துவருவது தெரிந்ததே உண்மையில் காதல் என்பது ஆவதானயொன்றேயொழிய ஆக்குவதான ஒன்றல்ல. காதலிப்பது என்பது ஆகுவது என்னும் கருத்துக்குப் பொருத்தப்பாடான வொன்றல்ல. அது ஆக்கப்படுவதையே குறித்து நிற்கின்றது. எனவே தானே மலரும் காதல் ஆகுபொருளேயொழிய ஆக்கப்படும்மொன்றல்ல. ஆனால் நடைமுறையில் அழகின்பாற்பட்ட ஈர்ப்பு, தசைக்கவர்ச்சி, பொருளியல் சார்ந்த எதிர்பார்க்கை தொடர்பிலான காரணிகளின் பாற்பட்ட உணர்வையே ஆக்கப்படுமொன்றாகக் கருத்தற்றுக்காதல் என விமர்சனம் செய்யப்படுகின்றது. இன்னுந் தெளிவாகக் கூறின் மேற்றரப்பட்ட எதிர்பார்க்கைகள் தான் ஆகும் ஒன்றை ஆக்கப்படுமொன்றாகச் சாதாரணமான சமூகநகர்வில் இழையோடவிட்டு அவ்வுணர்வைக் காதல் எனவும் விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இவ்விளம்பரம் என்பது ஒருபோதும் காதலாக இருக்கமுடியாது. வெறும் காதல் மயமாக இருக்க முடியுமென்பதே நிஜத்திலும் நிஜமாகும்.
இதைப்போன்றதே (சமநிலையற்றதாகவிருந்தபோதுங்கூட) விலைமாது ஆகுவதற்கும், விலைமாது ஆக்கப்படுவதற்குமுள்ள முரண்பாடு நிலையெனலாம்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தேசத்தின் அனைத்து இடதுசாரி அரசியல் தலைவர்களும் தடம்புரண்டு உழைக்கும் வர்க்கத்தினதும், தமிழ் மக்களினதும் முதுகில் ஓங்கிக்குத்தி ஒழித்து விளையாடி அவ்விளையாட்டில் வெற்றி வீரர்களாக வலம் வந்துகொண்டிருந்தபோது முன்னாளில் எட்மண்ட் சமரக்கொடி அவர்கள் வெளிப்படுத்தி நின்ற நேர்மைத்திறனை இந்நாளில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா அவர்கள் ஒருவர் மட்டுந்தான் பிரதிபலித்து நிற்கின்றார் என்னும் கூற்றைத் தெஹிவளை, கல்கிசை மாநகரசபைக்கான இறுதித் தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகளினால் அம் மாநகரசபையின் உறுப்பினராகிவிடவேண்டுமென்னுங் குறுமதியினால் ஐக்கியதேசியக் கட்சியின் விசுவாசியான மனோகணேசன் அவர்களோடு தோழமை கொண்டதன் மூலம் பொய்ப்பித்திருந்தார். அது மட்டுமல்லாமல் இலங்கையில் அண்மைக்காலத்தில் அதிகரித்துக்கொண்டு வரும் பாலியல் தொழிலுக்குப் பச்சைக்கொடி கட்டிப் பரிகசிக்கத்தக்க நிலைக்குத் தன்னையாளாக்கித் தேசத்தின் கலாச்சாரத்தைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் விபச்சாரிகளுக்கு வக்காலத்து வாங்கியும் தன்னை ஓர் அற்ப புழுவாகச் சிறுமைப்படுத்திக்கொண்டுமிருந்தார்.

ஏழ்மையின் கொடுமையினால் லத்தீன் அமெரிக்க நாடுகள் பரிதவித்து நின்றபோது அக்கொடுமை கண்டு வெகுண்டெழுந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையுமே கம்யூனிச மயப்படுத்த வேண்டுமென்னும் தணியாத தாகத்தினால் கியூபாவில் கிளர்ச்சியைத் தொடங்கிய சேகுவேரா அவர்கள் அந்நாட்டில் வெற்றிகரமாகக் கம்யூனிஸ ஆட்சியை நிறுவிய பின் அடுத்த தேசத்துக்குச் சென்று பொலிவியா என்னுமிடத்தில் பாடசாலையொன்றில் தனது தோழர்களோடு தரித்து நின்றபோது அவ்விடத்தைச்சேர்ந்த உருளைக்கிழங்கு விவசாயியொருவரினால் அமெரிக்க அரசின் உளவுப்பிரிவான சி.ஐ.ஏ அமைப்புக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டதனால் அன்னார் கொல்லப்பட்டு இன்னும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள மக்களின் உள்ளங்களில் ஆண்டவராக உலாவந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் விக்கிரமபாகு அவர்களோ ஏழ்மைக்கு விபச்சாரத்தொழில் தகுந்த பரிகாரமாக அமைகின்றது என்னும் அசிங்கமான பாணியில் விபச்சாரிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்த கையோடு பணத்துக்கு மேல் பணம் சேர்க்கும் சொத்துக்கு மேல் சொத்துச் சேர்க்கும் புளிச்சல் ஏவறை விபச்சாரத்துக்கும் தூண்டுதல் அளித்துள்ளார். இரண்டாவது தரப்பினரோடு கம்யூனிஸ்ற் கலாநிதி அவர்களுக்கும் மனோ கணேசன் போன்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ அடிவருடிகளுக்கு இயல்பாகவேயுள்ள உறவுபோல ஏதும் உறவு உள்ளதா? என ஐயுறுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. ஏழ்மையின் மீதுள்ள இரக்கத்தினால் அம்மக்களுக்குள் புகுந்து விபச்சாரம் என்னும் உணர்வே அரும்ப இயலாதளவுக்கு புரட்சிகரமான விதைகளைத்தூவிய செஞ்சட்டைச் செல்வர் சேகுவேரா அவர்களைப்போல கருணாரத்னா அவர்களால் சீர் பெற முடியாது என்பது உண்மையேயெனினும் அசிங்கப்பட முடியாமல் கூடப் போய்விட்டதேயென்னும் ஆதங்கம் அவரின் அனுதாபிகளுக்கு இருக்கவே செய்யும்.

விலைமாது விமர்சனம் நீண்டுவிட்டதே என்னும் குறை களைய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் விலைமாதுக்கள் ஆகின்றார்களா? அல்லது ஆக்கப்படுகின்றார்களா? என்னும் ஐயந்தீர்க்கும் ஆய்வும் இன்றியமையாதவொன்றாகவேயுள்ளது.

ஏழையொருத்தி விலைமாது ஆகின்றாள் என்பது பொருத்தமான ஒன்றே ஆயினும், வசதி படைத்த ஒருத்தி விலைமாது ஆகின்றாள் என்பது பொருத்தமற்றவொன்றே. அவள் விலைமாது ஆக்கப்படுகின்றாள் என்பதே பொருத்தமானதாகும். அவள் விலைமாது ஆக்கப்படுவதற்கு அவளும், அவள் மீது கழுகுக் கண்களை மிகுந்த வெறியோடு படரவிட்டுக்கொண்டிருக்கும் சகல துறைகளையுஞ் சார்ந்த கனவான்களும், பிரபுக்களும் காரணிகளாகவும் விளங்குகின்றார்கள்.
இக்கண்கொண்டு நோக்கும்போது கூட்டமைப்பு அரசியல்வாதிகள் விலை மாதுக்களாக ஆகின்றார்களா? என வினவின் இல்லையென்றே பதிலளிக்கவேண்டும். ஆனால் அவ்வரசியல்வாதிகள் இவ்வாண்டு தைத்திங்கள் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போதும், ஆவணிமாதம் நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான தேர்தலின்போதும், வடக்கில் அன்றுதொட்டு இருந்துவரும் பெருஞ்சாபக்கேடாக விளங்குவதான ஐ.தே.கட்சி இன் ஆட்சி அதிகாரத்தையே நாடி நின்று அது கைகூடியும் விட்டதனால் இவ்வாண்டு தை மாதம் ஐ.தே.கட்சி ஆட்சியதிகாரத்தின் கீழ் மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாகவும், ஆவணி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலின்போது ஐ.தே.கட்சி அதிகாரம் நிறுவப்பட்டு மைத்தி ரணில் அரசானது அரியணையும் ஏறியிருந்தது. இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்றிருந்த மஹிந்த ஆட்சியின்போது அன்றைய காலப்பகுதியில் இலங்கைத்தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்திருந்த மாவை சேனாதிராஜா அவர்கள் திருநெல்வேலி பொதுச்சந்தை திறப்பு விழாவின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களோடு முட்டிக்கொண்டு நின்று மிகவும் தரமான அந்த அரசியல்வாதியினால் மக்கள் சந்தை திறக்கப்பட்டபோது ஆலயத்தில் குருக்கள் பூசை செய்ய உதவியாளர் தொட்டுக்கொடுப்பது போல மாவையாரும் திருநெல்வேலிச் சந்தைத் திறப்பின்போது முதலாந்தர அரசியல்வாதியொருவருக்குத் தொட்டுக்கொடுத்துத் துவண்டும் நின்றார்.

பிரபாகரன் அவர்களுடைய காலப்பகுதியில் குறிஞ்சாத்தீவில் வடக்கின் முதலாந்தர அரசியலின் பெறுபேறான கோரமான தாக்குதலினால் சேனாதிராஜா அவர்கள் படுகாயமடைந்து காயங்களின் கட்டுக்களுடனேயே வன்னியில் மக்களிடம் பிரபாகரனின் வேண்டுதலுக்கு அமைய வாக்குக்கேட்டு நின்றதையும் யாவரும் அறிவர். இவ்வாறான ஓர் அனுபவம் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு அமைந்திருந்த கசப்பான நிலையையும் மறந்து டக்ளஸ் ஐயா அவர்கள் திருநெல்வேலிச் சந்தையைத் திறந்துவைத்து நிமிர்ந்து நின்றபோது அந்த ஐயாவுக்குத் தொட்டுக்கொடுத்துக் குனிந்து நின்றமை தான் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் விலைமாதுக்களாக ஆக்கப்பட்டதன் முதலாவது பிரதிபலிப்பாகும். இம் முதலாவது பிரதிபலிப்பின்பாலான விலைமாதாக மாவையார் தோற்றமளித்தமை மிகவும் துரதிட்டவசமானது. ஆரம்பத்திலேயே தன்னை ஒரு விபச்சாரியாக்கிய சேனாதியார் சாமானியர் அல்லர். சிறையில் வாடிய, தமிழருக்குள்ளும் ஒடுக்கப்பட்ட, புறக்கனிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் இணைத்து அரவணைத்த நிஜமான தமிழ்த் தேசியவாதி. இவ்வாறான ஒர் அரசியல்வாதி ஏழாந்தர அரசியல்வாதி தொடர்பில் விலைமாது ஆனமை மிகவும் வேதனைக்கிடமானது. அன்றிலிருந்து ஆரம்பமான மாவையார் தொடங்கிவைத்த விலை மாதுக்கள் படலம் இவ்வாண்டு தைத்திங்களில ஆரம்பித்து ஆவணி மாதம் இடையிட்டு இன்றுவரை நீடித்துவரும் ஐ.தே.கட்சியின் ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்தும் வெற்றி நடைபோட்டிருக்கின்றதெனவே கூறவேண்டும்.

இவ் விலைமாதுக்கள் ஆக்கப்படும் கூட்டமைப்பு அரசியலாளர் தொடர்பில் இரண்டாவது விபச்சார நடவடிக்கையிலும் மாவை சேனாதிராஜா அவர்களே பரிதாபமாகத் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார் எனலாம். அவருடைய இப்பங்களிப்பு யாதென விளங்கமுதல் டக்ளஸ் ஐயா அவர்களின் ஏழாந்தரத்தினால் மாவையார் விபச்சாரம் செய்யும் நிலைக்கு ஆளாகியமையையும், மனோ ஐயா அவர்களுடைய ஏழாந்தரத்தினால் தோழர் விக்கிரமபாகு கருணாரத்னா அவர்கள் விபச்சாரம் செய்யும் நிலைக்கு ஆளானமையையும் ஒப்புநோக்கிப் பயன்பெறுவது சாலவும் பயனுள்ளவொன்றாகவிருக்கும். இனி மாவையார் அவர்களே கூட்டமைப்பினர் விலைமாதுக்கள் ஆக்கப்படும் படலத்தில் அடுத்த நிலையிலும் எவ்வாறு தோன்றி அனுதாபத்துக்குரியவராக விளங்குகின்றாரென்பதை நோக்குவோம்.

அவ்வடுத்த திரையில் இவ்வாண்டு தைத்திங்கள் 08ஆம் நாள் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பார் தாமும் வெற்றிபெறமுடியாவிட்டாலுங் கூட தேர்தலில் போட்டியிட்டோ அல்லது வாளாவிருந்தோ நேர்மைத்திறன் காத்து நிற்காமல் மைத்திரிக்கு வாக்களிக்கும்படி மக்களை வேண்டி நின்றமையும் அவ்வேண்டுதலையேற்ற தமிழ் மக்கள் அன்னாருக்கே வாக்களித்து வெற்றிவாகை சூடவைத்தமையுந் தெரிந்ததே. இவ்விடத்தில் தான் கூட்டமைப்பாரின் விலைமாதுக்களாக ஆக்கப்படும் திரையோவியத்தில் இரண்டாவது காட்சியிலும் மாவையார் அவர்கள் நாம் தமிழ் மக்களிடம் மைத்திரிக்கு வாக்களிக்கும்படி வேண்டியதனாலேயே அம் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அவர்களுடைய அசாதாரணமான வாக்களிப்பினாலேயே மைத்திரி அவர்களினால் ஜனாதிபதியாக முடிந்தது. ஆகையால் நன்றிக்கடனாக மைத்திரி அவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை நிச்சயமாகத் தீர்த்துவைப்பார். எனக்கருத்து வெளியிட்டதன் மூலம் மாவை சேனாதிராஜா அவர்கள் ஆற்றாமையின்பாற்பட்ட விலைமாதாக மீண்டும் ஆக்கப்படுகின்றார்.

இதன் பின்னர் காணாமல்போனோர் விவகாரம், மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் போன்ற இன்னோரன்ன விடயங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பார் நேர்மைத்திறனற்றவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் விளங்கிவருவதோடு அவ்விவகாரங்கள் தொடர்பிலும் ஆளுங்கட்சிகளின் தெற்கின் தலைவர்களுக்கும், வடக்கின் வால்பிடிகளுக்கும் திரைமறைவில் விலைமாதுக்கள் என்னும் நிலையில் பச்சைக்கொடி காட்டியமையோடு படுக்கைவிரித்தும் பல்லிளித்தும் நின்றார்கள்.

வடபகுதியின் அபிவிருத்திகள் சம்பந்தமான விடயங்களிலும், அப்பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகள் ஆகியோரின் வேலைவாய்ப்புப்போன்ற நடவடிக்கைகளிலும், கூட்டமைப்பார் அரச பிரதிநிதிகள் தம்மைப் புறக்கணித்து வருவதாகக் கூறி ஆதங்கப்படுவதும் நன்கு தெரிந்ததே.
கூட்டமைப்பாரின் இவ்வாதங்கம் அனுதாபத்துக்குரியதேயாயினுங்கூட மேற்படி அவர்களால் கூறப்பட்ட களநிலை இன்று மட்டுமல்ல என்றைக்குமே வடபுலத்தில் அமைந்திருந்த இயல்பு நிலையேயாகும். ‘விடுதலை வேண்டிநின்றார் வேறொன்று கொள்வாரோ?” என்னும் புரட்சிப்புலவர் பாரதியின் கூற்றுக்கு இயைபாகக் கூட்டமைப்பார் மேற்கூறியவாறான சிந்தனையை முற்றுமுழுதாகத் தவிர்த்துக்கொள்வதோடு தமிழ் மக்களின் விமோசனம் தொடர்பிலான சீர்மிகு பாதையில் சிறப்போடு அணிவகுத்துச் செல்வதே மிகு சான்றாண்மையாகும்.

அதைவிடுத்து, இக்கூட்டமைப்பார் அரச அடிவருடிகளின் அனுசரணையையும், அவர்களுடைய தங்கள் மீதான கண்டுகொள்கையையும் பெரிதுபடுத்தித் தங்களைத்தாங்களே கீழிறக்கிக் கொள்வாராகவிருந்தால் தமிழ் மக்களுடைய சுயமரியாதை, தன்னாதிக்கம், இறைமை போன்ற அனைத்தையும் இலங்கையை எப்போதுமே ஆண்டு வருகின்ற தமிழர் விரோத ஆட்சியாளர்களுக்குத் தாரைவார்ப்பதாகவே முடியும். மாவை சேனாதிராஜா அவர்களுடைய ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைப்பாட்டையடுத்து அவருடைய கடந்த 17.08.2015 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலின் போதான வகிபாகமும் கூட்டமைப்பின் சம்பந்தன் உள்ளடங்கலான ஏனைய முக்கியஸ்தர்களின் வகிபாகமும் கருத்துக்குரியது. இது இவ்வாறிருக்க வடமாகாண சபையின் முதலமைச்சர் தேர்தல் தொடர்பிலும் சற்று நோக்குவது சாலவும் பயனளிக்கும். இத் தேர்தலின்போது வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக நிஜமாகவே தமிழ்த்தேசியவாதி எனக்கணிக்கப்பட்ட மாவையார் அவர்கள் நியமிக்கப்படவிருந்தபோது அதற்கெதிராகப் புதுமுகங்கள் பலரும் ஓரணியில் திரண்டமை தெரிந்ததே. இவ்வணி திரள்கைக்குத் தனிப்பட்ட காழ்ப்புணர்வு மட்டுந்தான் காரணியாக இருந்திருக்குமெயொழிய அரசியல் ரீதியாக எக்காரணியும் அமைந்திருக்க மாட்டாதென்பதே இப்பேருண்மையாகும்.
வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் நியமனந்; தொடர்பிலான இப்போட்டியை நன்கு அவதானித்த மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தன் அவர்களோடு குசுகுசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமையோடு இயைந்ததான இராஜதந்திரக் காய்நகர்த்தலே முதலமைச்சர் வேட்பாளராகக் கொழும்புக்கனவானும், இளைப்பாறிய நீதியரசருமான விக்னேஸ்வரன் அவர்கள் நியமிக்கப்பட்டமையாகும். இந்நிலையானது மொத்தத்தில் தமிழர் கூட்டமைப்பானது விலைமாது என்னும் வகிபாகத்தை அதியுச்சக் கட்டத்தில் முன்னெடுத்துள்ளமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இவ்வுச்சக்கட்டத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாரின் விலைமாது என்னும் கதாபாத்திரத்தின் அதியுயர்பீடமே இதே விக்னேஸ்வரன் அவர்களைத் தலைவராகக்கொண்டு உருவாக்கப்பட்ட தமிழர் பேரவை என்னும் அமைப்பாகும். இப்பேரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உப தலைவரும், பேராசிரியருமான சிற்றம்பலம் அவர்களும் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் பேரனாரும், குமார் பொன்னம்பலம் அவர்களுடைய புத்திரருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினரும் புளொட் அமைப்பைச் சேர்ந்தவருமான சிவநேசன் என்போர் இடம்பெற்றுள்ளார்கள். தமிழர் அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக விலைமாது என்னும் துரதிட்டவசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டவர் இராணி அப்புக்காத்தரான ஜி.ஜி.பொன்னம்பலம் ஆவார்.

இத்துரதிட்டவசமான நிலையின் விருத்தியே அருமருந்தன்ன ஆயுதப்போராட்டத்தையும் தோல்வியுறச் செய்தது. அன்று ஆரம்பமான விலைமாதுப்படலம் படிப்படியாக விருத்தியடைந்து இன்று தமிழர் பேரவையென்னும் அதியுயர் மலை மீது ஏறி நிற்கின்றது.

எனவே இம்மலையை முற்றுமுழுதாகத் தகர்த்தெறிவதன் மூலமே தமிழர் தரப்பு விபச்சார அரசியலையும் இல்லாதொழித்து ஆறுதல் பெறவும் முடியும்.
வீரப்பதி விநோதன்

SHARE