நீண்ட வரலாற்றைக் கொண்ட வடமாகாண முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் விடுதலைப் புலிகளினால் தமது பிறந்தகத்தைவிட்டு . இவர்கள் சுமார் 20 வருடங்களுக்கு மேல் இலங்கையின் பலபாகங்களிலும் அகதி முகாம்களில் பல்வேறு
கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் அரசாங்கத்தினால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் இவர்கள் தமது தாய் மண்ணிற்கு (தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இடத்திற்கு) மீள்குடியேறினர். இவ்வாறு மீள்குடியேறியவர்களில் ஒரு பிரிவினரே மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி முஸ்லிம்கள்.மறிச்சுக்கட்டி மற்றும் வில்பத்துப் பிரதேசத்தின் புவியியல் பின்னணி
வில்பத்து சரணாலயம்
வில்பத்து இலங்கையின் இரண்டாவது பெரிய இயற்கை சரணாலயமாகும். இது வடமேல் மாகாணத்தின் வடமேற்கேயும் வடமத்திய மாகாணத்தின் கிழக்கேயுமாக சுமார் 130000 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்டு அமைந்துள்ளது. வில்பத்து சரணாலயத்தின் எப்பகுதியும் வடமாகாணத்தில் உள்ளடக்கப்படவில்லை. வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள இச்சரணாலயத்தையும் வடமாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் முசலிப் பிரதேசத்தையும் பிரிக்கும் எல்லையாக மோதரகம ஆறு (உப்பாறு) காணப்படுகிறது.
மறிச்சுக்கட்டி
வடமாகாணத்தில் மன்னார் மாவடத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள முசலிப் பிரதேசத்திலுள்ள 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, முள்ளிக்குளம் ஆகியன முசலிப் பிரதேசத்தின் தெற்கே அமைந்துள்ளது. இப்பகுதியின் வடக்கே கொண்டச்சி என்ற கிராம சேவையாளர் பிரிவும், கிழக்கு மற்றும் தெற்காக மோதரகம ஆறும் (இவ்வாறே வில்பத்து சரணாலயத்தின் வடக்கு எல்லையாக காணப்படுகிறது), மேற்கே இந்து சமுத்திரமும் காணப்படுகிறது.
நீண்ட வரலாற்றைக் கொண்ட இப்பிரதேச மக்கள், பரம்பரை பரம்பரையாக இப்பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயம், மீன்பிடி, காட்டுத் தொழிலையே தங்களது பிரதான ஜீவனோபாயத் தொழிலாக செய்து வந்துள்ளனர். இவர்களின் விவசாயத் தொழிலை மேம்படுத்துவதற்காக 1940 களுக்கு முன்னரே வியாயடி நீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வியாயடி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் மறிச்சுக்கட்டிக் குளம், முள்ளிக்குளம், பாலைக்குளிக் குளம் என பல குளங்கள் கட்டப்பட்டுள்ளன.
1970 ஆம் ஆண்டுக்கு முன்னர் இவர்கள் யானையைப் பிடித்து வியாபாரம் செய்துள்ளனர். இப்பிரதேச மக்கள் கண்டி தளதா மாளிகைக்கும் அன்பளிப்பாக யானை வழங்கியுள்ளதாக வரலாறு கூறுகிறது.
இலங்கையின் மிகவும் வறண்ட பகுதியான மறிச்சுக்கட்டிப் பகுதியில் சுமார் 8ஆம் 9ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு தொழில்களைச் செய்து வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது பெரும் புயல் ஒன்று வீச ஆரம்பித்தது. அதாவது, 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதி வாரத்தில் வடமாகாணத்திலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டமையே இவர்களின் வாழ்விலும் ஏற்பட்ட பெரும் புயலாகும்.
அன்று புலிகளின் வெளியேற்றத்தால் ஏற்பட்ட சாபக்கேடும், வடுக்களும், காயங்களும் இன்றும் ஆறாக்காயங்களாக இருக்கின்றன. அன்றைய வெளியேற்றத்தால்தான் இன்று மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, முள்ளிக்குள மக்கள் தனது இருப்புக் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறார்கள். அன்றைய வெளியேற்றத்தினால் இன்று இவர்களின் சொந்த தாயகமும் கேள்விக்குறியாகியுள்ளது.
அவ்வெளியேற்றத்தால் இப்பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் பறிக்கப்பட்டதுடன், அன்று இரு ஆயுதக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட போராட்டத்தின்போது இப்பிரதேசத்தைச் சேர்ந்த சில முஸ்லிம்கள் இடையில் சிக்கி உயிரிழந்தனர்.
இக்கொடூர நிகழ்வுகளின் பின்னர் இம்மக்கள் அங்கிருந்து உடுத்திய உடையுடன் வெளியேற்றப்பட்டனர். இவ்வெளியேற்றத்தால் சுமார் 22 வருடங்களுக்கு மேல் அகதி முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும், இன்னும் சிலர் சுயமாக காணிகள் வாங்கி வீடுகளைக் கட்டியும் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில்தான் 30 வருட கொடூர யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் அரசாங்கத்தினால் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தங்களது சொந்த பூமியில் (பிறந்த பூமியில்) மீண்டும் குடியேறுவதற்காக திரும்பினர். சுமார் 22 வருடங்களின் பின்னர் தமது பிறந்த பூமியை பூமியை சென்று பார்த்தபோது, தாம் குடியிருந்த இடங்களைக் கண்டுகொள்ள முடியாமல் தவித்தனர். அனைத்து குடியிருப்பு இடங்களும் அடித்தளமின்றி, இனம்காண முடியாமல் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் இவர்கள் துடித்தனர். அத்தோடு, அவைகள் அடர்ந்த பெரும் மரங்களைக் கொண்ட காடுகாளாகியுள்ளதை நினைத்து பரிதவித்தனர்.
எனவே, தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதாக இருந்தால் தமது பிறந்த இடங்களில் வளர்ந்துள்ள மரங்களை அழித்துத்தான் மீள்குடியேற வேண்டும் என்ற நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே, குடியிருப்புப் பிரதேசங்களிலும், விவசாய நிலங்களிலும் வளர்ந்துள்ள மரங்களை அழிப்பதற்காக அரசாங்கத்தின் உதவியைப் பெறுவதற்காக, அப்பிரதேசத்தின் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களையும், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோரின் உதவியுடன் (அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன்) அம்மரங்களை அழித்து அதிலே குடியேறினர்.
அதிகரித்த சனத்தொகை
1990 ஆம் ஆண்டு மன்னார் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி பிரதேசங்களிலிருந்து சுமார் 500 இற்கும் அதிகமான குடும்பங்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 23 வருடங்களின் பின்னர் தற்போது அவர்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்த மக்கள் தாம் குடியிருப்பதற்கு சரியான குடியிருப்பு நிலமின்றி தவித்தனர்.
அதேநேரம், இவர்களின் மூதாதையர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மறிச்சுக்கட்டி மக்களின் 700 ஏக்கர் காணியும், மையவாடியும், முள்ளிக்குளக் கிராமமும் கடற்படை முகாம் அமைப்பதற்காக அரசாங்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட அப்பாவி மக்களின் அவல வாழ்க்கை 24 வருடங்களாகவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அன்று புலிகள் வெளியேற்றினார்கள் இன்று ஏனைய சக்திகள் இவர்களை வெளியேற்ற வெவ்வேறு இல்லாத கதைகளை சோடிக்கிறார்கள்.
பொது பல சேனாவின் குற்றச்சாட்டு
ஏற்கனவே வில்பத்து சரணாலயத்தின் வடக்குப் பகுதியிலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் மன்னார் எல்லையை சுத்தம்செய்து அங்கு 300 குடும்பங்கள் கூடாரங்களை அமைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல் தெரிவித்துள்ளன.
இதேவேளை நாட்டுக்குள் தனியான முஸ்லிம் வலயங்களை நிர்மாணிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என பொதுபல சேனா குற்றஞ்சாட்டியது.
வில்பத்து சரணாலயம் தற்போது அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வில்பத்து முதல் மன்னார் வரையில் எஸ்.எச் ஜாஸ்மின் சிட்டி என்ற பெயரில் பாரியதொரு வீடமைப்புத் திட்டத்தை அமைச்சர் ரிஷாட் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், வீடமைப்புத் திட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் பொது பல சேனாவின் பொதுச் செயலர் வண. குலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஜாஸிம் சிட்டியின் அமைவிடம்
ஆனால், அமைச்சர் ரிசாத்தினால் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் மன்னார் மாவட்டத்திற்குட்பட்டது. அதற்கும் வில்பத்து சரணாலயத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. மேலும், அமைச்சரினால் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டம் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. அவ்வீட்டுத் திட்டத்திற்கும் வில்பத்து சரணாயத்திற்கும் புவியியல் ரீதியாக எவ்விதத் தொடர்புமில்லை.
மேலும், தற்போது அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளும் முசலிப் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அமைக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக அனைத்து அறிக்கைகளும் அம்மக்களிடம் காணப்படுகின்றன.
வில்பத்து சரணாலயத்தின் எல்லையில் அமைந்துள்ள பூக்குளக் கிராமம்
மறிச்சுக்கட்டி கிராமத்தின் எல்லையிலிருந்து அதாவது மோதரகம ஆற்றின் தெற்காக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வில்பத்து சரணாலயத்திற்குள் கடற்கரை ஓரமாக சிங்கள மக்களைக் கொண்ட பூக்குளம் என்ற ஒரு கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 150 இற்கும் அதிகமான குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
அதேநேரம் வில்பத்து சரணாலயத்திற்கு வெளியே மக்கள் குடியிருந்த பிரதேசத்தில் மக்கள் குடியேறும்போது அப்பகுதி வில்பத்து சரணாலயத்திற்குச் சொந்தமான பகுதி என்றும், அது வன ஜீவராசிகள் நடமாடும் பகுதி எனத் தெரிவிக்கின்றனர். இது எவ்விதத்தில் நியாயமாகும் என அம்மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் கடமை
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பறிக்கப்பட்ட உரிமைகள் ஏராளம். இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமை தொடர்பிலும், மீட்சி தொடர்பிலும் எவர் செயற்பட்டாலும் அவர்களை இனவாதியாக அடையாளப்படுத்தும் செயற்பாடுகளும் ஏராளம்.
குறி்ப்பாக இலங்கை முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு அனுபவித்த வேதனையும், வலிகளும் மறந்துவிட கூடியதொன்றல்ல. அது வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் உச்ச கட்டமே பலவந்தமான வெளியேற்றம். இந்த வெளியேற்றத்துடன் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தனர்.
அந்த வகையிலேயே பொய்யான கதைகளைக் கூறி சமூகங்களுக்கு மத்தியில் இன விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் சக்திகளுடன் கலந்துரையாடல்களைச் செய்து உண்மை நிலையை நாட்டுக்கும் சமூகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
ஏற்றுக்கொள்ளும் சிங்கள சகோதரர்களுக்கு உண்மையினை விளங்கப்படுத்த எமது சமூகத்தின் துறைசார் நிபுணர்கள், மற்றும் நலன் விரும்பிகள், இதனை சமூகப் பணியாக எண்ணி முன்வர வேண்டும்.