வெளியாகவிருக்கும் மன்னார் மனிதப் புதைகுழி மர்மம்

430


மன்னாரில் புதைகுழி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் (14ஆம் திகதிக்கு பின்னர்) வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த எலும்புக் கூடு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை பொதுமக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். குறிப்பாக, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன் முடிவை அச்சம் கலந்த உணர்வுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மன்னார் மனிதப் புதைகுழியில் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது 266 எலும்புக்கூடுகளுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ இதனை உறுதி செய்துள்ளார். மேலும் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் பல எலும்புக்கூடுகள் வெளிவரலாம் என்கின்ற சந்தேகத்தில் தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

ஆண்கள், பெண்கள், சிறுவர்களுடையவை என எலும்புக் கூடுகள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆடைகளற்ற நிலையில் புதைக்கப்பட்ட மனிதர்களும், இரும்புக் கம்பியில் கால்கள் பிணைக்கப்பட்டு புதைக்கபட்ட மனிதர்களும், பன்னிரண்டு வயதிற்கும் குறைந்த வயதுடைய சிறுவர்களும் எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனையின் முடிவுகளிலிருந்து இந்த எலும்புக் கூடுகளின் காலத்தை அறிந்துகொள்ள முடியும். இதிலிருந்து எந்தக் காலகட்டத்தில் இவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது கண்டறியப்படும். தொடர்ந்து, கொல்லப்பட்டவர்கள் யாராக இருக்கலாம் என்பதையும் அறிய முடியும். இறுதிப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் கொல்லப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம்.

மன்னாரிலுள்ள இந்தப் புதைகுழி விவகாரம் மிகவும் பாதூரமானதாக இருந்த போதிலும் தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. அரசியல் விடயங்கள் குறித்து அடிக்கடி- அதிகம் வாதிடும் இந்த அரசியல்வாதிகள் ஏன் இவ்வாறான, பாரதூரமான ஒரு விடயம் குறித்து அதிகம் பேசுவதில்லை என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.

மீட்கப்படும் எலும்புக்கூடுகள் தமிழர்களுடையவையாக இருப்பதற்கான சாத்தியம் வெளிப்படையாகவே தோன்றுகின்ற போதும் அதனை வேறு விதத்தில் திசைதிருப்பும் வகையில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மன்னார் புதைகுழியிலிருந்து மீட்கப்படும் எலும்புக்கூடுகள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையவையாக இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். தமிழ் ஆயதக் குழுக்களின் மோதல்களின் போது கொல்லப்பட்டவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், இவை காணாமலாக்கப்பட்ட தமிழர்களுடையவையாக இருக்கலாம் என்பது குறித்து அழுத்தமான குரல்கள் தமிழர் தரப்பிலிருந்து பெரிதாக ஒலிக்கவில்லை.

புளோரிடா ஆய்வறிக்கையின் பின்னரே இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான உண்மை விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வாதாடும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வெளிநாட்டு வானொலி ஒன்றிடம் “முடிவுகள் தமிழர் தரப்பிற்கு அதிர்ச்சியளிப்பதாகவிருக்கும்” எனக் கருத்து வெளியிட்டுள்ளார். இதுவொரு குழப்பமான கருத்தாகவே அமைந்துள்ளது.

காபன் பரிசோதனை மூலம் எச்சங்களின் காலத்தை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கின்றன. அதன்மூலம் அக் கொடூரங்கள் நடந்தேறிய காலம் உறுதிப்படுத்தப்படுகின்ற போது அது தமிழர் தரப்புகளுக்கும் அதிர்ச்சிகளைக் கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

“மன்னார் புதைகுழி விடயத்தில் நாம் மௌனம் காக்கவில்லை. பல இடங்களில் அது குறித்துப் பேசியிருக்கின்றோம். நாடாளுமன்றத்திலும் பல முறை உரையாற்றியிருக்கின்றோம். இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாம் கேட்டிருக்கின்றோம்.

இதில், பிரதானமானது அந்தப் புதைகுழிச் சம்பவங்கள் எந்தக் காலப் பகுதியில் இடம்பெற்றவை என்பதைத் திகதியிடுவதாகும். அதை நாம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
இப்போது அந்த எலும்புகள், எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளொரிடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. காபன் பரிசோதனை மூலம் அவை எந்தக் காலத்திற்கு உரியவை என்பதை நாம் உறுதிப்படுத்திக் கூடியதாக இருக்கும். அது எந்தக் காலப் பகுதிக்குரியது என்ற முடிவுகள் வெளிவருகின்ற போது அது, தமிழ்த் தரப்புகளுக்கும் சில அதிர்ச்சிகளைக் கொடுக்கும் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என அவர் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை அரசின் இராணுவமாக இருந்தாலும் அல்லது தமிழ் தரப்பிலே ஏதேனும் ஓர் ஆயுதக் குழு இதற்குக் காரணமாக இருந்தாலும் அவர்களும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய தேவைப்பாடு இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் கூறிய இக் கருத்திலிருந்து தமிழ் ஆயுதக் குழுக்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

தமிழ் ஆயதக் குழுக்கள் மத்தியில் மோதல்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றன. அதனை மறுப்பதற்கில்லை. மன்னாரில் இந்தளவு மனிதர்கள் கொல்லப்பட்டு அவர்களை புதைத்திருக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டதாக அறிய முடியவில்லை. அதுமட்டுமன்றி பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களும், தாய்மாரான பெண்களும் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுத இயக்கங்கள் அவர்களைப் போன்றவர்களை கொன்று புதைக்க வேண்டிய தேவை இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், இறுதிப் போரில் உறவினர்களால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டுமன்றி பெண்கள், சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், காபன் பரிசோதனை அறிக்கையின் மூலம் கொல்லப்பட்டவர்களின் காலம் கண்டறியப்பட்டு, எச்சந்தர்ப்பத்தில் இந்த படுகொலைகள் நடைபெற்று மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது வெளிவரும். அப்போது உண்மைகள் தெரியவரும். ஆனாலும், காபன் பரிசோதனை முடிவடைந்து அதன் அறிக்கை வெளிவருகின்ற நிலையில், தொடர்ச்சியாக நடைபெற வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வளவிற்கு வேகம் கொள்ளும் என்பது சந்தேகத்திற்கிடமானதாகவே உள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தப் புதைகுழி விவகாரமும் அங்கு சூடுபிடிக்கக் கூடும். அதனால், காபன் பரிசோதனை அறிக்கையின் பின்னான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆறவிடலாம் என்றே சந்தேகப்பட வேண்டியுள்ளது.

ஆனாலும், விரைவில் உண்மைகள் வெளிவந்தே தீர வேண்டும். புதைகுழி விவகாரத்தை இலங்கை அரசு புதைத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

SHARE