வெள்ளையர் ஆட்சியில் இருந்து 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது. தமிழர் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், “தமிழ் ஈழம்” கிடைத்திருக்கும்.

1085

 

வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை அடைந்தது.

அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது.
சுதந்திரப் போராட்டம்
இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில் பெரிய வித்தியாசம் உண்டு.
இந்தியாவிற்கு சுதந்திரம் பெறுவதற்காக, மகாத்மா காந்தி 30 ஆண்டுகளுக்கு மேலாக அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களை நடத்தினார். வேறு வழி இல்லாமல், சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து முடிவு செய்தது.
இங்கையில் அத்தகைய போராட்டம் எதுவும் நடக்கவில்லை. வெள்ளையர்கள் தாங்களாகவே முன்வந்து சுதந்திரம் கொடுத்தனர்.
இன்னொரு முக்கிய வித்தியாசம், “முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும்” என்று ஜின்னா போராடி வெற்றியும் பெற்றார். அதனால் இந்தியா துண்டாடப்பட்டு, “பாகிஸ்தான்” அமைக்கப்பட்டது.
ஆனால், “தமிழீழம்” வேண்டும் என்று போராடுவதற்கு அந்த நேரத்தில் இலங்கையில் யாரும் இல்லை. அதன் காரணமாக, முழு இலங்கையையும் சிங்களர்களின் கையில் வெள்ளையர்கள் ஒப்படைத்து விட்டனர். அப்போது தமிழர் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், “தமிழ் ஈழம்” கிடைத்திருக்கும்.
சிங்கக்கொடி

1948 பிப்ரவரி 4-ந்தேதி, இலங்கையில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டுக் கொடியான “யூனியன் ஜாக்” இறக்கப்பட்டது. இலங்கையின் தேசியக் கொடி (சிங்கக்கொடி) ஏற்றப்பட்டது.
இக்கொடியை வடிவமைக்கும்போது, “இலங்கை, சிங்களர் தேசம் என்று குறிக்கும் விதத்தில் சிங்கத்தை இடம் பெறச் செய்திருக்கிறீர்கள். இலங்கையின் மற்றொரு தேசிய இனமான தமிழர்களைக் குறிக்கும் வகையில், கொடியில் மாறுதல் செய்யவேண்டும்” என்று தமிழர்களால் வற்புறுத்தப்பட்டது. இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.
தமிழர்களின் உரிமை பறிப்பு
சுதந்திரத்துக்கு முன்னதாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயகா, தொடர்ந்து பிரதமராக நீடித்தார்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததால், தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளையர் ஆட்சியின் போது ஓரளவுக்கு இருந்த உரிமைகளும் பறிபோயின.
தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் ஓயாது உழைத்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 10 லட்சம் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை இழந்து, “நாடற்றவர்கள்” என்று அறிவிக்கப்பட்டனர்.
அதாவது 1931, 1936, 1941, 1947 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்களித்த 10 லட்சம் தமிழர்கள், அந்த உரிமையை இழந்தனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்து ஒரு ஆண்டு ஆவதற்குள் இந்த அநியாயம் நடந்தது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததால், இலங்கையில் தமிழர்களால் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்போ, இங்கிலாந்து அரசின் எதிர்ப்போ வந்தால் அதை சமாளிக்கவும் பிரதமர் சேனநாயகா ஒரு ராஜதந்திர யுத்தியைக் கையாண்டார். அப்போது “அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்” தலைவராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலத்தை அரசாங்கத்துக்கு ஆதரவாக இழுக்கத் தீர்மானித்தார். பொன்னம்பலத்தை சந்தித்துப்பேச தன் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆலிவர் குனதிலகாவை தூது அனுப்பினார்.
அவர், பொன்னம்பலத்தை சந்தித்தார். “எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு என்ன சாதிக்கப்போகிறீர்கள்? அரசாங்கத்தில் இடம் பெற்று, தமிழ் மக்களுக்கு நன்மை செய்யலாமே!” என்று ஆசை காட்டினார்.
இதுபற்றி, கட்சியின் செயற்குழுவில் கலந்துபேசி, அதன்பின் தன் முடிவைத் தெரிவிப்பதாக பொன்னம்பலம் கூறினார்.
அதன்படி செயற்குழு கூடியது. மந்திரிசபையில் சேரலாமா, வேண்டாமா என்று காரசாரமாக விவாதம் நடந்தது.
“மந்திரிசபையில் சேருவது நல்லது” என்று பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் குமாரசாமி கூறினார்.
கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாகநாதன் அதை கடுமையாக எதிர்த்தார். “டி.எஸ்.சேனனாயகாவை வகுப்புவாதி என்று சில நாட்களுக்கு முன் ஏசினீர்களே! எந்த முகத்தோடு அவருடைய மந்திரிசபையில் போய் சேருவீர்கள்?” என்று பொன்னம்பலத்தை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டார்.
“எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு உணர்ச்சிகரமாகப் பேசலாமே தவிர, தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது” என்று பொன்னம்பலம் பதில் அளித்தார்.
செல்வநாயகம் எச்சரிக்கை

பிற்காலத்தில் “இலங்கை தமிழர்களின் தந்தை” என்று புகழ் பெற்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அப்போது “இலங்கை தமிழ்க் காங்கிரஸ்” கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
“தமிழ் மக்களை பலவீனப்படுத்தவே, சேனநாயகா உங்கள் ஆதரவைக் கோரியுள்ளார். அவருடைய வலையில் சிக்க வேண்டாம்” என்று அவர் பொன்னம்பலத்தை எச்சரித்தார். அவருடைய கருத்தை இன்னொரு முக்கிய தலைவரான வன்னிய சிங்கம் ஆதரித்தார்.
முடிவில், இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் நோக்கத்துடன் ஒரு தீர்மானத்தை செயற்குழு நிறைவேற்றியது. “மலையகத் தமிழர்களுக்கு பிரஜா உரிமை கிடைப்பதற்கு, பிரஜா உரிமைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய சேனநாயகா சம்மதித்தால், மந்திரிசபையில் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சேரலாம்” என்பதே அந்த தீர்மானத்தின் சாரமாகும்.
இந்த தீர்மானத்தை குணதிலகாவிடம் பொன்னம்பலம் தெரிவித்தார். “பிரஜா உரிமை சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வருவதில் சிரமம் ஏதும் இல்லை. நீங்கள் முதலில் மந்திரியாகி விடுங்கள். அதன் மூலமாக, சட்டம் திருத்தம் செய்வது எளிதாகி விடும்” என்று பசப்பு வார்த்தைகள் கூறினார், குணதிலகா.
அவர் கூறியதை அப்படியே நம்பினார். பொன்னம்பலம். மந்திரி பதவி ஏற்க சம்மதம் தெரிவித்தார். 1948 டிசம்பர் மாதத்தில், அவரை மந்திரியாக சேனநாயகா நியமித்தார். பொன்னம்பலம் விரும்பியபடியே கைத்தொழில், கடல் சார்ந்த தொழில் ஆகிய இலாகாக்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. அவருடைய ஆதரவாளரான கனகரத்தினத்துக்கு துணை மந்திரி பதவி கொடுக்கப்பட்டது.

கட்சி உடைந்தது
இதைத் தொடர்ந்து “இலங்கை தமிழ்க் காங்கிரஸ்” இரண்டாக உடைந்தது.
பொன்னம்பலத்தை எதிர்த்தவர்கள் செல்வநாயகம் தலைமையில் ஒன்று திரண்டனர்.
பொன்னம்பலம் கோஷ்டியும், செல்வநாயகம் கோஷ்டியும் தனித்தனியாக செயற்குழு கூட்டங்களை கூட்டி, ஒருவரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.
செல்வநாயகம், தமிழர் வாழும் பகுதிகளை ஒன்று சேர்த்து தனி மாகணம் ஆக்கி, “சுயாட்சி” வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“தமிழர் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரே மாகாணமாக அமைக்க வேண்டும். இதுபோல், சிங்களப் பகுதிகளை ஒன்று சேர்ந்து மற்றொரு மாகாணம். இரண்டுக்கும் பொதுவான ஒரு மத்திய அரசு. மாநிலங்களில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி. இதன் மூலமாகத் தான் தமிழர்களின் நலனை காப்பாற்றமுடியும்” என்று அவர் கூறினார்.
இதற்காக புதிய கட்சி தொடங்க தீர்மானிக்கப்பட்டது.

“தமிழரசு கட்சி” உதயம்
செல்வநாயகம் தொடங்கினார்
*****************************
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுத்தரும் நோக்கத்துடன் “தமிழரசு கட்சி” யை செல்வநாயகம் தொடங்கினார்.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம், பிரதமர் சேனநாயகாவின் அழைப்பை ஏற்று மந்திரியாகி விட்டதால், கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து புதிய கட்சி தொடங்க முடிவு செய்தார்.
வழக்கறிஞர்
செல்வநாயகத்தின் முழுப்பெயர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம். இவர் 1898 மார்ச் 31 -ந்தேதி, மலாயாவில் உள்ள ஈப்போ நகரில் பிறந்தார். பிராடஸ்டன்ட் கிறிஸ்துவர்.
இளம் வயதிலேயே இலங்கையில் குடியேறி, தெல்லிப்பளை என்ற கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் யாழ்ப்பாணம் செயின்ட் ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
பிற்காலத்தில் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கேயின் தந்தை ஈஸ்மன்ட் விக்கிரமசிங்கே, பிரதம நீதிபதியான நெவில் சமரக்கோன் உள்பட பல முக்கிய புள்ளிகள் இவரிடம் ஜூனியர்களாகப் பணியாற்றினார்கள். பிரிட்டிஷ் ராணியின் வழக்கறிஞர் என்றும் புகழ் பெற்றவர், செல்வநாயகம்.
நீதி நேர்மை, தூய வாழ்க்கை முதலான உயர் பண்புகளைக் கொண்டிருந்த இவரை, அரசியலுக்கு வருமாறு பொன்னம்பலம் அழைத்தார்.
1945 -ம் ஆண்டிலேயே வழக்கறிஞர் தொழிலில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார் செல்வா.
அரசியலில் நுழைந்து பணம் சம்பாதித்தவர்களுக்கு மத்தியில், கட்சிக்காக தன் பணத்தை செலவிட்டவர் இவர். இதனால், இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டார்.
தமிழரசு கட்சி
செல்வநாயகத்தின் “தமிழரசு கட்சி”யின் (ஆங்கிலத்தில் “பெடரல் கட்சி) தொடக்கக் கூட்டம், 1949 -ம் ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்தில் கொள்ளுப்பட்டியில் உள்ள அவர் வீட்டில் நடந்தது. தமிழர்களுக்கு மாநில சுயாட்சி பெற்றுத்தருவதற்கு தமிழரசு கட்சி போராடும் என்று அவர் அறிவித்தார்.
தன் கட்சியின் நோக்கங்களை விளக்க, பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் செல்வநாயகம் பேசினார். இந்தக் கூட்டங்களில் நட்சத்திர பேச்சாளராக அமிர்தலிங்கம் (செல்வநாயகம் மறைவுக்கு பின்னர் இலங்கைத் தமிழர்களின் தலைவராக விளங்கியர்) அறிமுகப்படுத்தப்பட்டார். கட்சி பணிகளில் வன்னிய சிங்கம் முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார்.
கண்துடைப்பு மசோதா
இதற்கிடையே, பொன்னம்பலத்துக்கு கொடுத்த வாக்குறுதிக்காக பிரஜா உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் ஒரு மசோதாவை, பாராளுமன்றத்தில் பிரதமர் சேனநாயகா கொண்டு வந்தார். இது வெறும் கண் துடைப்பாகவே நடந்தது. “பிரஜா உரிமை பெறாதவர்கள் அந்த உரிமையைப் பெற, திருமணம் ஆனவராக இருந்தால் இலங்கையில் தொடர்ந்து 7 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருந்தால், 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்” என்று இந்த திருத்தங்களில் கூறப்பட்டிருந்தது. தன்னுடைய பாட்டன், முப்பாட்டன் எல்லாம் இலங்கையில் வசித்தவர்கள் என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் காட்டவேண்டியிருந்தது.
பாராளுமன்றத்தில் இந்த திருத்தத்தின் மீது விவாதம் நடைபெற்ற பொது, செல்வநாயகம் அதை கடுமையாக எதிர்த்தார். “பிரஜா உரிமையை இழந்தவர்கள் அதை பெறுவதற்கு உதவும் வகையில் திருத்த மசோதா அமைய வேண்டும். இப்போது பிரதமர் தாக்கல் செய்துள்ள மசோதா, பிரஜா உரிமை பெற உதவுவதற்கு பதிலாக, பல தடைகளை ஏற்படுத்தியுள்ளது. பல தோட்டத் தொழிலாளர்கள், அடிக்கடி தங்கள் இருப்பிடங்களை மாற்றி இருக்கிறார்கள். அப்படியிருக்க, அவர்கள் எப்படி தாங்கள் தொடர்ந்து இலங்கையில் இருந்ததை நிரூபிக்க முடியும்? என்று அவர் கேட்டார்.
காரசாரமான விவகாரத்துக்கு பிறகு, திருத்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. பொன்னம்பலமும் அவர் ஆதரவாளர்களும் மசோதாவை ஆதரித்து ஒட்டு போட்டனர். செல்வநாயகமும் அவர் ஆதரவாளர்களும் எதிர்த்து வாக்களித்தனர்.
மசோதா நிறைவேறியது.
எனினும், செல்வநாயகம் கூறியது போலவே இந்த மசோதாவினால் எந்த பலனும் இல்லை. 10 லட்சம் தமிழர்கள் “நாடற்றவர்கள்” என்ற நிலையில் நீடித்தனர்.
தேர்தலில் இழப்பு
மலையகத் தமிழர்களின் தலைவராக சி.தொண்டமான் விளங்கினார்.
1947 தேர்தலின் போது, மலையகத் தமிழர்கள் ஓட்டுரிமை பெற்றிருந்ததால், பாராளுமன்றத்தில் 7 இடங்களை அவர்கள் பெற்றனர். ஆனால், 10 லட்சம் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதால் 1952 -ம் ஆண்டு தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கான தகுதியை கூட இழக்க நேரிட்டது.
சேனநாயகா மரணம்
1952 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், பிரதமர் டி.எஸ்.சேனநாயகா மரணம் அடைந்தார்.
அவருக்குப்பின், அவர் மகன் டட்லி சேனநாயகா பிரதமர் ஆனார்.

1952 தேர்தலில் பொன்னம்பலத்தின் “இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி” 4 இடங்களில் வெற்றி பெற்றதுடன், தொடர்ந்து டட்லி சேனநாயகா அரசுக்கு ஆதரவு தர முன்வந்தது. அதனால் பொன்னம்பலம் மீண்டும் மந்திரி ஆனார்.
டட்லி செனநாயகாவுக்கும், அவருடைய உறவினரான ஜான் கொத்தலாவலாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் டட்லி ராஜினாமா செய்ய நேர்ந்தது. புதிய பிரதமாராக கொத்தலாவலா பதவி ஏற்றார்.
அவர் பதவிக்கு வந்ததும், மந்திரி பதவியை விட்டு பொன்னம்பலத்தை நீக்கினார்.
இதன்பின், பொன்னம்பலத்தின் அரசியல் வாழ்க்கை வீழ்ச்சி அடைந்தது.

1956 தேர்தலில் வென்று பண்டார நாயகா பிரதமர் ஆனார்
செல்வநாயகத்துடன் செய்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார்

************************************************************
1956 -ல் இலங்கை பிரதமாராக பதவி ஏற்ற பண்டார நாயகா, இலங்கைத் தமிழர் தலைவர் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை, சிங்களருக்கு பயந்து கிழித்து எறிந்தார்.
சிங்களத் தலைவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்களுக்கு எதிரான திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வருவதில் ஒன்றுபடுவார்கள். சில சமயம் தமிழர்களுக்கு பரிந்து பேசுவது போலத் தோன்றினாலும், திடீரென்று தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு ‘பல்டி’ அடிப்பார்கள்.
பண்டாரநாயகா
சிறிமாவோ பண்டாரநாயகாவின் கணவரும், சந்திரிகாவின் தந்தையுமான பண்டாரநாயகாவின் கதையும் இதுதான்.
ஆரம்பத்தில், தமிழர்களுக்கு ஓரளவு சாதகமாகப் பேசிவந்த பண்டாரநாயகா, 1956 தேர்தலில் வெற்றி பெற்று, ஏப்ரல் 12 -ந்தேதி பிரதமராகப் பதவி ஏற்றார்.
சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்றும், அரசு அலுவல்கள் சிங்களத்திலேயே நடை பெறவேண்டும் என்றும் சட்டம் இயற்ற ஏற்கனவே இலங்கை அரசு திட்டமிட்டு இருந்தது. சட்ட அமைச்சரை பண்டார நாயகா அழைத்து, “சிங்கள மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அதே சமயத்தில் தமிழர்களின் நலனையும் கவனிக்க வேண்டும். அதற்கேற்றபடி சட்டத்தை தயாரியுங்கள். இலங்கையில் வாழும் எல்லா மக்களும், அரசாங்கத்துடன் தங்கள் தாய் மொழியில் தொடர்பு கொள்ள வசதி செய்து தரவேண்டும்” என்று கூறினார்.
சிங்களர்கள் ஆவேசம்
மொழி விஷயத்தில், பண்டார நாயகா தமிழர்களுக்கு சாதகமாக இருக்கிறார் என்று வெளியே செய்தி பரவியது. சிங்களர்கள் ஆவேசம் அடைந்தனர்.
சிங்களர் கட்சியின் முக்கிய தலைவரான ஜெயசூரியா, பாராளுமன்றத்தின் முன் அமர்ந்தது, “சாகும் வரை உண்ணாவிரதம்” தொடங்கினார். “சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். தமிழுக்கு எந்தவித இடமும் தரக்கூடாது” என்பது அவருடைய கோரிக்கை.
சிங்கள தீவிரவாதிகளின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயகா, சிங்களருக்கு அடிபணிந்தார். சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்க வகை செய்யும் சட்டத்தை 1956 ஜூன் 5 -ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
“இலங்கையின் ஒரே ஆட்சி மொழியாக சிங்களம் இருக்கும். சிங்களத்தை உடனே பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில், ஆங்கிலத்தை 1960 டிசெம்பர் 31-ந்தேதி வரை பயன்படுத்தலாம்” என்று அந்த சட்டம் கூறியது.
தமிழர்கள் போராட்டம்
இந்த சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது என்று, செல்வநாயகத்தின் “தமிழரசு கட்சி” முடிவு செய்தது.
“சிங்களம் மட்டும்தான் ஆட்சி மொழி என்ற சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தின் முன் தமிழ் எம்.பி.க்களும், மற்றும் 200 பேர்களும் உண்ணாவிரதம் இருப்போம்'” என்று பண்டாரநாயகாவுக்கு, செல்வநாயகம் கடிதம் எழுதினர்.
ஆனால், பண்டாரநாயகாவின் மிரட்டலுக்கு தமிழர்கள் பயப்படவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் இருக்க ஊர்வலமாகப் புறப்பட்டார்கள். இதில் செல்வநாயகம், அமிர்தலிங்கம், நவரத்தினம் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஊர்வலத்தின் முன் சென்றனர்.
பயங்கர தாக்குதல்
பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும் 500 -க்கும் மேற்பட்ட சிங்கள வெறியர்கள் கையில் ஆயுதங்களுடனும், சிங்கக் கொடியுடனும் வந்து உண்ணாவிரதம் தொடங்கிய தமிழர்களைத் தாக்கினார்.
செல்வநாயகத்தின் 14 வயது மூத்த மகன் மனோகரன், தந்தையின் கண் முன்னாலேயே அடித்து நொறுக்கப்பட்டான். செல்வநாயகமும் சேற்றுத் தண்ணீரில் வீசி எறியப்பட்டார்.
அமிர்தலிங்கத்தை, சிங்கள வெறியர்கள் தடியால் தாக்கினார்கள். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
ஊர்வலத்தினர் “தமிழ் வாழ்க !” என்று முழக்கமிட்டனர். அவர்களை சிங்கள வெறியர்கள் அடித்து நொறுக்கினர்.
தமிழ் எம்.பி.க்கள் சிலர் மண்டை உடைந்து, ரத்தம் சொட்டச்சொட்ட சுருண்டு விழுந்தனர். சிலரை சிங்களர்கள் தூக்கிச் சென்று, அருகே இருந்த ஏரியில் வீசினர்.
இந்தக் கலவரத்தை, பாராளுமன்ற ஜன்னல் வழியாக பண்டார நாயகா பார்த்துக் கொண்டு நின்றார்.
150 பேர் பலி
இந்த கலவரம் கொழும்பு நகரம் முழுவதும் பரவியது. தெருவில் நடந்து போன தமிழர்களை, சிங்களர்கள் ஓட ஓட விரட்டித் தாக்கினர்.
தமிழர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன.
இதில் 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய முதல் இனப்படுகொலை இது என்று கூறலாம்.
ஒப்பந்தம்
இந்த சம்பவத்தால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் கொந்தளிப்பும், பதற்றமும் நிலவுவதை பிரதமர் பண்டார நாயகா உணர்ந்து கொண்டார். தமிழர்களுடன் ஏதாவது சமரசம் செய்து கொண்டால் தவிர, கலவரம் மேலும் பரவும் என்பது அவருக்குப் புரிந்தது.
செல்வநாயகத்தை அழைத்துப் பேசினார். பிரதமருக்கும், செல்வநாயகத்துக்கும் இடையே 1957 ஜூலை 27 -ந்தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
“இலங்கையில் பிராந்திய சபைகள் அமைக்கப்படும். தமிழர்களுக்கு என்று ஒரு பிராந்திய சபை இருக்கும். அந்த சபையின் நடவடிக்கைகள் தமிழில் நடைபெறும். கல்வி, குடியேற்றம் முதலியவை சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் இந்த பிராந்திய சபைகளிடம் இருக்கும்” என்று இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.
ஜெயவர்த்தனா பாத யாத்திரை
இந்த ஒப்பந்தத்தை சிங்களர் கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர்.
ஒப்பந்தத்தை எதிர்த்து 1957 அக்டோபர் 4 -ந்தேதி ஜெயவர்த்தனா தலைமையில் கொழும்பில் இருந்து கண்டி வரை சிங்களர்கள் பாத யாத்திரை சென்றனர்.
ஊர்வலம் சென்ற வழி எங்கும் கல் வீச்சு நடந்தது. இதனால், ஜெயவர்த்தனாவும், மற்றவர்களும் கார்களில் ஏறி, கண்டி வரை சென்று, தங்கள் “பாத யாத்திரை” யை நிறைவு செய்தனர்!.
பண்டாரநாயகா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த விமலா விஜயவர்த்தனா, சிங்கள புத்த பிட்சுகளை திரட்டிக்கொண்டு போய், பிரதமர் பண்டார நாயகா வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
கிழித்து எறிந்தார்
சிங்களர் எதிர்ப்பைக் கண்டு, பண்டாரநாயகா பயந்து போனார். சிங்களர்களின் கோரிக்கையை ஏற்கத் தீர்மானித்து ரத்து செய்வதாக அறிவித்தார்.
“ஒப்பந்தத்தை கிழித்து ஏறி!” என்று ஒரு புத்த பிட்சு கூச்சலிட்டார். உடனே செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ‘ஒரிஜினல்’ பிரதியை கொண்டு வந்து, சிங்களர் முன்னால் சுக்கு நூறாக கிழித்து எறிந்தார், பண்டாரநாயகா.
இதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கை முழுவதும் மீண்டும் இனக்கலவரம் வெடித்தது. தமிழர்களின் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கொளுத்தப்பட்டன. நூற்றுக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
கொழும்பு நகரில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடு – வாசலை இழந்து அகதிகள் ஆனார்கள். அவர்கள் கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டு போகப்பட்டனர்.
தமிழ் எம்.பி.க்கள் உள்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலைமை காணப்பட்டது. நிலைமையை சமாளிக்க ஒரு புதிய சட்டத்தை பிரதமர் பண்டார நாயகா கொண்டு வந்தார்.
தமிழ்ப் பகுதிகளில் அரசாங்க நிர்வாகத்தில் தமிழைப் பயன்படுத்தலாம் என்று அந்த சட்டம் கூறியது !
இலங்கை பிரதமர் பண்டாரநாயகா கொலை
புத்த சாமியார் 6 முறை சுட்டான் – 26.09.1959
*********************************************
இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகா சிங்கள புத்தப் பிட்சு ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பண்டாரநாயகா பிரதமர் ஆவதற்கு புத்த பிட்சுகளும் சிங்களர் கட்சிகளும் ஆதரவாக இருந்தனர்.
இந்நிலையில் தமிழ் பகுதிகளில் வாழ்கிறவர்கள் அரசாங்கத்துடன் தமிழில் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியதால் புத்தப் பிட்சுகளும் சிங்கள வெறியர்களும் ஆத்திரம் அடைந்தனர்.
1959 செப்டம்பர் 25 ந்தேதி காலை சுமார் பத்து மணிக்கு தன்னைக் காண வந்தவர்களுக்கு பேட்டியளிக்க வெளியே வந்தார் பண்டாரநாயகா. வெளியே பெரிய கூட்டம் கூடியிருந்தது.
எல்லோரையும் பார்த்து பண்டாரநாயகா கைக் கூப்பி வணங்கினார். பிறகு தன் அறைக்கு திரும்பி ஒவ்வொருவராக அழைக்க எண்ணினார். அவர் திரும்பவதற்குள் கூட்டத்தில் இருந்த புத்த சாமியார் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு பண்டாரநாயகாவைச் சுட்டான்.
ஆறு குண்டுகள் சீறிப் பாய்ந்தன மார்பிலிருந்து ரத்தம் பீறிட பண்டாரநாயகா கீழே சாய்ந்தார்.
பண்டாரநாயகாவின் உதவியாளர் ஒருவர் மீதும் குண்டு பாய்ந்து, படு காயம் அடைந்தான்.
பண்டாரநாயகாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.
அவரைத் துப்பாக்கியால் சுட்ட புத்த சாமியாரை அருகில் இருந்தவர்கள் சூழ்ந்துக் கொண்டு அடித்து நொறுக்கினார்கள். போலீசார் விரைந்து வந்து சாமியாரை கைது செய்து ஜெயிலுக்கு கொண்டுப் போனார்கள்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப்பட்ட பண்டாரநாயகாவிற்கு அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடலில் 4 குண்டுகள் பாயந்திருந்ததை டாக்டர்கள் கண்டுப்பிடித்தனர்.
ஒரு குண்டு வயிற்றில் பாய்ந்து இருந்தது. மற்றொரு குண்டு கல்லீரலைத் துளைத்திருந்தது.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தாலும் மரணப் படுக்கையில் இருந்தவாறே அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
“ஒரு முட்டாள் என்னை சுட்டுவிட்டான். பொதுமக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அவனை பழிவாங்க கூடாது. நெருக்கடியான இந்த தருணத்தில் எல்லோரும் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பிழைத்து எழுந்து மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது” என்று அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அவர் நம்பிக்கை வீணாயிற்று. மறுநாள் (26 ந்தேதி ) காலை எட்டு மணிக்கு அவர் மரணம் அடைந்தார். உயிர் பிரியும் போது மனைவி சிறிமாவோ பண்டாரநாயகா மற்றும் குழந்தைகள் முக்கிய அமைச்சர்கள் அருகில் இருந்தனர்.
பண்டாரநாயகா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இலங்கையை மட்டுமல்ல உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சி அடைய செய்தது. கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
இந்திய பிரதமர் நேரு ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆகியோர் அனுதாப செய்தி விடுத்தனர்.
பண்டாரநாயகாவின் மரணத்தை தொடர்ந்து இலங்கை மந்திரி சபை கூட்டம் நடந்தது. தற்காலிக பிரதமராக மூத்த மந்திரி தசனாயகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
பண்டாரநாயகா இறக்கும் போது வயது அறுபது. அவர் 1899 ஆம் ஆண்டு ஜனவரி 8 ந்தேதி பிறந்தார். லண்டனுக்குப் போய் சட்டம் படித்தார். வழக்கறிஞராக பணி புரிந்தார்.
1927 -ல் அரசியலில் ஈடுப்பட்டார். 1931 -ல் இருந்து இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். 1936 ஆம் ஆண்டு முதல் மந்திரியாக இருந்து வந்தார்.
பண்டாரநாயகாவின் மனைவி சிறிமாவோ பிற்காலத்தில் பிரதமாராகி “உலகின் முதல் பெண் பிரதமர்” என்று புகழ் பெற்றவர்.
மகள் சந்திரிக்கா இலங்கைப் பிரதமராகவும் அதிபராகவும் பதவிக்கு வந்தவர்.
இலங்கை வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது பண்டாரநாயகாவின் குடும்பம்.

பண்டாரநாயக்கவை சுட்டு கொன்றவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவன் பெயர் சோமராமதேரோ.
பண்டாரநாயகா தேர்தலில் நின்றப் போது அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவன்.
பண்டாரநாயகாவை சுட்டுக் கொன்ற சோமராமதேரோ மீது வழக்கு தொடரப்பட்டது.
இலங்கையில் தூக்கு தண்டனை விதிப்பதை பண்டாரநாயகா ஏற்கனவே ரத்துச் செய்திருந்தார். பண்டாரநாயகாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயகா மீண்டும் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தார்.
சோமராமதேரோவிற்கு கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவன் தூக்கில் போடப்பட்டான்.

திருமதி பண்டாரநாயகா பிரதமர் ஆனார்
“சிங்களம்தான் ஆட்சி மொழி” என்று பிரகடனம்

*************************************************
பண்டாரநாயகா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் ஆன தகனாயகே ஆட்சி 6 மாதம் மட்டுமே நீடித்தது.
கட்சிக்குள் மோதல் ஏற்பட்டதால், ஆட்சி கவிழ்ந்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது.
பண்டாரநாயகா கொல்லப்பட்டதால், அவருடைய “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி” க்கு ஆதரவாக நாடு முழுவதும் அனுதாப அலை வீசியது.
1960 -ல் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகத்தான வெற்றி பெற்றது.
பண்டாரநாயகாவின் மனைவி திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா, பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன் 1960 ஜூலை 21 -ந்தேதி பதவி ஏற்றார்.
இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, எனவே இலங்கை மேல் – சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
திருமதி பண்டாரநாயகாவின் ஆட்சியில் மிக முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1961 ஜனவரி 1-ந்தேதி முதல் இலங்கை முழுவதும் சிங்களம் மட்டும்தான் ஆட்சி மொழி என்று உத்தரவிடப்பட்டது.
“நாடு முழுவதும் நீங்கள் சிங்களத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளில் மட்டும், கோர்ட்டு நடவடிக்கைகளையும், அரசாங்க அலுவலக வேலைகளையும் தமிழில் நடத்த அனுமதியுங்கள்” என்று செல்வநாயகத்தின் தமிழரசு கட்சி கேட்டுக்கொண்டது. இதை, சிங்களர் கட்சிகள் ஏற்கவில்லை. இதுகுறித்து பாராளுமன்றத்தில் தமிழரசு கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை, சிங்களக் கட்சிகள் தோற்கடித்தன.
சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டத்தை எதிர்த்து, அகிம்சை வழியில் போராட்டம் நடத்த தமிழரசு கட்சி முடிவு செய்தது. இந்த சட்டத்தை எதிர்த்து, ஜனவரி 2 -ந்தேதியன்று தமிழர் பகுதிகளில் முழு அடைப்பு (“பந்த்”) அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடந்தது. இதை சிங்கள அரசு கண்டுக் கொள்ளவில்லை. சிங்களத் திணிப்பை தீவிரப்படுத்தியது.
பிரவரி 20 -ந்தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள அரசு அலுவலகத்தின் முன், செல்வநாயகமும், தமிழரசு கட்சியின் தொண்டர்களும் “சத்தியாகிரக” போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து, சிங்களச் சட்டத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில் தொடங்கிய இந்த போராட்டம், தமிழர்கள் வாழும் இதர பகுதிகளுக்கும் பரவியது.
திரிகோணமலையில் போட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த ஏகாம்பரம் என்ற தமிழர் மரணம் அடைந்தார். இதனால் செல்வநாயகம், அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். “அஹிம்சை போராட்டத்துக்கு அரசாங்கம் பணிய மறுப்பதால், சட்ட மறுப்பு போராட்டத்தைத் தொடங்குவோம்” என்று அறிவித்தார்.
ஏப்ரல் 14 -ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று, அவர் அரசு தபால் நிலையத்துக்குச் சென்றார். தபால் அதிகாரி (போஸ்ட் மாஸ்டர்) இருக்கையில் அமர்ந்து, தபால் தலைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அரசாங்கத்துக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்தன.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 17 -ந்தேதி, “நெருக்கடி நிலை” பிரகடனம் செய்யப்பட்டது.
செல்வநாயகமும், தமிழரசு கட்சியின் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். தொண்டர்களும் வேட்டையாடப்பட்டனர்.
தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியவர்களை ஒடுக்க, ராணுவம் பயன்படுத்தப்பட்டது. போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ராணுவம் ஒடுக்கியது.
செல்வநாயகமும் மற்றும் 8 பேர்களும் 6 மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் 3 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்தனர்.
தமிழ்ப் பள்ளிக்கூடங்களை அரசுடமை ஆக்கி சிறிமாவோ உத்தரவிட்டார். அந்தப் பள்ளிக்கூடங்களில், சிங்கள இனத்தின் வரலாறு போதிக்கப்பட்டது. புத்த மதத்தின் சிறப்பை விளக்கி பாடம் நடத்தப்பட்டது.
தமிழர்கள் இதை எதிர்த்த போதிலும் பலன் ஏதும் இல்லை. சிங்களப் பகுதிகளில் இருந்த பல தமிழ்பள்ளிகள் மூடப்பட்டன. பல பள்ளிகள் சிங்களப் பள்ளிகளாக மாற்றப்பட்டன. தமிழர்களின் குழந்தைகள் சிங்களம் படித்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் 1961 டிசெம்பரில் புது உத்தரவு ஒன்றை சிறிமாவோ பிறப்பித்தார். “அரசு ஊழியர்கள், வேலையில் நீடிக்க வேண்டுமானால், சிங்களம் படிக்க வேண்டும். சிங்கள மொழியில் புலமை பெறவேண்டும். அப்போதுதான் வேலையில் நீடிக்கமுடியும்” என்பதே அந்த உத்தரவு !
சிங்களம் படிக்க விரும்பாத தமிழ் ஊழியர்கள், மலேசியா, கானா, நைகீரியா, ஜாம்பியா முதலிய நாடுகளில் வேலை தேடிக்கொண்டு, இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
தமிழர்கள் புதிதாக அரசு வேளையில் சேர முடியாத நிலைமை ஏற்பட்டது. சிங்களம் தெரிந்தவர்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இலங்கையில், பிராஜா உரிமை மறுக்கப்பட்டு, “நாடற்றவர்கள்” என்று அறிவிக்கப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்திருந்தது.

அவர்களை இந்தியா ஏற்கவேண்டும் என்று சிறிமாவோ வலியுறுத்தத் தொடங்கினார். அப்போது இந்தியாவின் பிரதமராக நேரு இருந்தார். சிறிமாவோவின் கோரிக்கையை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினரை ஏற்றுக் கொள்ள நேரு சம்மதித்து விட்டதாக, பத்திரிகையில் செய்தி வெளியாகியது. அதைப் பார்த்து நேரு கோபம் அடைந்தார்.
“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் பிரஜா உரிமை தரவேண்டும். அவர்களை ஆடு – மாடு போல் கருதி சிங்கள அரசு பேச்சு நடத்த முயன்றால், நான் சம்மதிக்க மாட்டேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இந்த நிலையில் 1964 மே 27 -ந்தேதி நேரு காலமானார்
சாஸ்திரி – சிறிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தம் கையெழுத்தானது 5 லட்சம் இலங்கைத் தமிழர்கள் இந்தியா ஏற்கவேண்டும் 29.10.1964
********************************************************************
இலங்கையில் “நாடற்றவர்கள்” என்ற நிலையில் இருந்த தமிழர்கள் குறித்து, இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவும் டெல்லியில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இலங்கைத் தமிழர்களில் 5 லட்சம் பேரை இந்தியாவுக்கு கட்டாயமாக அனுப்ப இந்த ஒப்பந்தம் வகை செய்தது. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து டெல்லியில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவும் 1964-ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
10 நாட்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே அக்டோபர் 29-ந்தேதி உடன்பாடு ஏற்பட்டது. ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டார்கள்.
ஒப்பந்த விவரம் வருமாறு:-
(1 ) இலங்கையில் குடியுரிமை இல்லாமல் 9 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 5.5 லட்சம் தமிழர்களை இந்தியா அழைத்துக் கொள்ளவேண்டும்.
( 2) மீதி உள்ளவர்களில் 3 லட்சம் தமிழர்களுக்கு இலங்கையில் வசிப்பதற்கு `குடியுரிமை’ வழங்கப்படும்.
( 3 ) மீதியுள்ள 1.5 லட்சம் தமிழர்களின் நிலைமை பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கைத் தமிழர்களை வெளியேற்ற 15 ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் 36 ஆயிரம் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறவேண்டும். இலங்கையை விட்டு வெளியேறுவதற்குள் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் வெளியேறவேண்டும்.
3 லட்சம் தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்க ஒப்புக்கொண்டபடி, ஆண்டுக்கு 20 ஆயிரம் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் குடியுரிமை கொடுக்கவேண்டும். இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.
சிறிமாவோ பண்டாரநாயகாவுடன், நடந்த பேச்சுவார்த்தையில், லால்பகதூர் சாஸ்திரிக்கு உதவியாக மத்திய மந்திரி சுவரண்சிங், தமிழக மந்திரி ராமையா ஆகியோரும் பங்கேற்றனர். (தமிழ்நாட்டில் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்தது. முதல்-அமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தார்.)
இலங்கையில் வாழும் தமிழர்கள் வெளியேற்றப்படுவதால், தமிழ்நாடு நேரடியாக பாதிக்கப்படும் என்ற நிலை நிலவுவதால், இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள தமிழக மந்திரி ராமையா விசேஷமாக அழைக்கப்பட்டிருந்தார்.
“இப்போது பர்மாவில் இருந்து தமிழர்கள் லட்சக்கணக்கான அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இருந்து தமிழர்களும் வந்தால், நிலைமையை சமாளிப்பது பெரும் சங்கடமாக இருக்கும்” என்று மந்திரி ராமையா கவலை தெரிவித்தார்.
“இலங்கையில் இருந்து வரும் தமிழர்களைக் குடிஅமர்த்துவது அகில இந்திய பிரச்சினையாகக் கருதப்படும். தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்” என்று மத்திய அரசு உறுதி அளித்தது.
இலங்கையில் இருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு இலங்கைத் தமிழர் தலைவர் செல்வநாயகம் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- “இலங்கைத் தமிழர்களை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தம், இதுவரை நடந்திராத முறையில் செய்யப்பட்டுள்ளது. ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள், தமிழர்களை சொக்கட்டான் காய்களாக வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார்கள். வெளியேற்றப்படும் 5.5 லட்சம் மக்களின் தலைவிதியை நினைத்து நான் வருந்துகிறேன். இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் பிறந்த இடம் இலங்கைதான். அவர்களுக்குத் தமிழ்நாட்டில் வீடு, வாசல் எதுவும் கிடையாது. அவர்கள் எப்படி இலங்கையை விட்டுப் போகமுடியும்? பொருளாதார ரீதியில் பார்த்தாலும், இலங்கைத் தமிழர்களை வெளியேற்றுவதில் இலங்கைக்கு நஷ்டம் ஏற்படும். 5.5 லட்சம் பேர்களில் 4 லட்சம் பேர் தோட்டங்களில் வேலை செய்யும் நல்ல உழைப்பாளிகள். அவர்களை இலங்கை இழக்க நேரிடும்.” இவ்வாறு செல்வநாயகம் குறிப்பிட்டார்.
தி.மு.கழகத்தின் சார்பில், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் இரா.நெடுஞ்செழியன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- “5.5 லட்சம் தமிழர்களை இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்துக் கொள்வது என்று டெல்லியில் செய்யப்பட்ட ஒப்பந்தம், இந்திய அரசாங்கத்துக்கு திருப்தி அளிப்பதாக இருக்கலாம். ஆனால் தி.மு.கழகத்திற்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கொடுத்து இருக்கிறது. இலங்கைத் தமிழர்கள், இலங்கையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களை இந்தியாவுக்கு அழைக்க முடிவு செய்து இருப்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. இந்தப் பிரச்சினை இந்தியாவுக்கு, குறிப்பாக, தமிழ்நாட்டுக்கு பெரிய பாரமாக இருக்கும்.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி கூறியதாவது:- இந்த ஒப்பந்தம், கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒப்பந்தத்தில் திருப்தி அளிக்கக்கூடிய அம்சம் எதுவும் இல்லை. இந்த ஒப்பந்தம் எனக்கு வருத்தத்தை கொடுக்கிறது. இந்த ஒப்பந்தம், இலங்கைத் தமிழர்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால், தங்கள் தகராறில் இந்தியா – இலங்கை அரசாங்கங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. ஒப்பந்தம் குறித்து, அவர்களைக் கலந்து பேசவில்லை.” இவ்வாறு ராஜாஜி கூறினார்.
தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் கூறுகையில், “இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தைப் படித்து வியப்பும், வேதனையும் அடைந்தேன். எந்தக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. பேரம் பேசும் முறையே முழுக்க முழுக்க கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
லால்பகதூர் சாஸ்திரி 1966-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி காலமானார். அதன் பிறகு, இந்திரா காந்தி பிரதமர் ஆனார். இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தினர். சாஸ்திரி – சிறிமாவோ ஒப்பந்தம் பற்றியும் அவர்கள் ஆலோசித்தனர்.
ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த இலங்கைத் தமிழர்களின் மனுக்கள், இந்திய தூதரகத்தில் தேங்கிக் கிடந்தன. காலம் கடந்து போய்விட்டதால், இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று ஒரு கட்டத்தில் இந்தியா அறிவித்தது.
சாஸ்திரி – சிறிமாவோ ஒப்பந்தம் வெறும் ஏட்டளவுடன் நின்று விட்டது.
இலங்கையில் ஒரு கிளியோபாட்ரா
இலங்கையில் கி.மு. 51-ல் ஒரு சிங்கள அரசி இருந்தாள். அவள் பெயர் அனுலா. அவளுடைய கணவன் பெயர் கோரநாயகா. சிவா என்ற தமிழன் அரண்மனை காவலாளியாக இருந்தான். அழகும், கம்பீரமும், கட்டான உடலும் கொண்டவன். அவனை அனுலா விரும்பினாள். எனவே, மதுவில் விஷம் கலந்து கொடுத்து, கணவனைக் கொன்றாள். சிவாவும், அனுலாவும் காதலர்களாக வாழ்ந்தார்கள். சிவாவை காதலித்தாலும், காவலாளியான அவனை மணக்க அனுலா விரும்பவில்லை. எனவே, அரச குடும்பத்தை சேர்ந்த திசா என்பவனை மறுமணம் செய்து கொண்டாள். அவனுடன் ஒரு வருடம் 2 மாதங்களே வாழ்ந்தாள். வடுகா என்ற தச்சுத் தொழிலாளியுடன் காதல் ஏற்பட்டதால், திசாவை விரட்டி அடித்தாள்.
அனுலா மொத்தம் 6 திருமணங்களை செய்து கொண்டாள். வேறு இளைஞர்களையும் காதலித்தாள். கடைசியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.
எகிப்தில் பிறந்து, ஜுலியஸ் சீசர், ஆண்டனி ஆகிய ரோமானிய மாவீரர்களை காதலித்த கிளியோபாட்ரா, கடைசியில் தன் உடல் மீது விஷப்பாம்பை விட்டு கொத்தச் செய்து தற்கொலை செய்து கொண்டது போலவே அனுலாவின் வாழ்க்கையும் முடிந்தது. இது கதையும் அல்ல; கற்பனையும் அல்ல. சிங்களரின் சரித்திரத்தைக் கூறும் “மகாவம்சம்” நூலில் இடம் பெற்றுள்ள வரலாறு!
திருமதி பண்டாரநாயகா ஆட்சியில் இலங்கை குடியரசு நாடாகியது
‘இலங்கை’ என்ற பெயர் ‘ஸ்ரீலங்கா’ என்று மாற்றம்

**************************************************
இலங்கை 1972 மே 22-ந் தேதி குடியரசு நாடாகியது. பெயரும் “ஸ்ரீலங்கா” என்று மாற்றப்பட்டது.
1965-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், திருமதி பண்டாரநாயகாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வி அடைந்தது. டட்லி சேனநாயகா (மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனநாயகாவின் மகன்) தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கூடுதல் இடங்களைப் பிடித்தது. என்றாலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 7 கட்சிகளின் ஆதரவுடன் டட்லி சேனநாயகா பிரதமரானார். ஆதரவு அளித்த கட்சிகளில் செல்வநாயகத்தின் “தமிழரசு கட்சி”யும் ஒன்று. தமிழர் தலைவர் செல்வநாயகத்துடன், டட்லி சேனநாயகா ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். “மாகாண சபைகள் அமைக்கப்படும்; தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்படும்” என்பது அந்த ஒப்பந்தத்தின் சாரமாகும்.
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வகை செய்யும் சட்டமசோதா, 1968 ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று டட்லி சேனநாயகா வாக்குறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி, மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. மே 22-ந்தேதி செல்வநாயகமும், தமிழரசு கட்சியின் மற்ற தலைவர்களும் பிரதமர் டட்லி சேனநாயகாவை சந்தித்து, “வாக்குறுதி கொடுத்தபடி சட்டம் கொண்டு வாருங்கள். அது பற்றி வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு பிரதமர் சம்மதித்தார். சொன்னபடி `வெள்ளை அறிக்கை’யை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிமாவோ பண்டாரநாயகாவும், அவர் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். வெள்ளை அறிக்கையின் நகலை, பாராளுமன்றத்துக்கு வெளியே தீ வைத்துக் கொளுத்தினர்.
செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பிரதமர் டட்லி சேனநாயகா விரும்பினாலும், அதற்கு எதிர்க்கட்சியினர் பெரும் தடையாக இருந்தனர். இதுகுறித்து டட்லியை செல்வநாயகம் பல முறை சந்தித்துப் பேசினார். ஆனால் பலன் ஏதும் இல்லை. “நாங்கள் பண்டாரநாயகாவினால் கைவிடப்பட்டோம். பிறகு திருமதி பண்டாரநாயகாவால் கைவிடப்பட்டோம். இப்போது உங்களால் கைவிடப்படுகிறோம்” என்று டட்லியிடம் நேருக்கு நேர் கூறிவிட்டு வெளியே வந்தார், செல்வநாயகம். தமிழரசு கட்சி சார்பாக, மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த திருச்செல்வம், பதவியை ராஜினாமா செய்தார்.
1970 மே மாதம் நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் திருமதி பண்டாரநாயகாவின் “ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி” வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 151 இடங்களில் 91 இடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று, மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
திருமதி பண்டாரநாயகா தனது தேர்தல் அறிக்கையில், புதிய அரசியல் சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்து இருந்தார். ஆட்சிக்கு வந்ததும், புதிய அரசியல் திட்டத்தை உருவாக்க அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். அந்த குழு தயாரித்த அரசியல் சட்டத்தின்படி, 1972 மே 22-ந்தேதி இலங்கை குடியரசு நாடாகியது. ஆங்கிலத்தில் “சிலோன்” என்று இலங்கை குறிப்பிடப்பட்டு வந்தது. அந்தப்பெயர் “ஸ்ரீலங்கா” என்று மாற்றப்பட்டது. (`ஸ்ரீலங்கா’ என்றால், `பிரகாசமான இலங்கை’ என்று பொருள்)

புதிய அரசியல் சட்டப்படி, ஜனாதிபதியை பிரதமர் நியமிப்பார். ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகள். ஆயினும் அதிகாரம் முழுவதும் பிரதமர் கையில் இருக்கும். (இந்தியாவில், பாராளுமன்றத்தின் இரு சபைகளின் உறுப்பினர்களும், மாநில சட்டசபைகளின் உறுப்பினர்களும் ஓட்டு போட்டு, ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.)

யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் போலிஸ் தாக்குதல் 9 பேர் பலி
******************************************************************************
இலங்கையில், யாழ்ப்பாணத்தில் 1974-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் உலகத் தமிழ் மாநாடு நடை பெற்றது. அப்போது மைதானத்திற்குள் போலீசார் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 9 பேர் பலியானார்கள்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்” சார்பில், முதலாவது உலகத் தமிழ் மாநாடு மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலும், இரண்டாவது மாநாடு தமிழகத் தலைநகரான சென்னையிலும், மூன்றாவது மாநாடு பாரிஸ் நகரிலும் நடைபெற்றது. நாலாவது மாநாட்டை இலங்கை யாழ்ப்பாணத்தில் நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் முடிவு செய்தது.
இதுபற்றிய ஆலோசனைக் கூட்டம் கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அமைச்சர் குமாரசூரியரின் பிரதிநிதிகள், இலங்கைத் தலைநகர் கொழும்பில் மாநாட்டை நடத்த வேண்டும் என்றும், அதை பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகா தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதைப் பெரும்பாலானோர் விரும்பவில்லை. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் கொழும்பு கிளை, மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதை ஆதரித்தனர். இதன்படி, உலகத்தமிழ் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட அமைச்சர் குமாரசூரியரும், அவருடைய ஆதரவாளர்களும் மாநாட்டை தமிழரசு கட்சியின் விழா என்றும், அரசாங்க விரோத சக்திகளின் நடவடிக்கை என்றும் பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள்.
மாநாட்டுக்கு அனைத்து வழிகளிலும் தொல்லைகள் கொடுப்பதில் குமாரசூரியரும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டனர். மாநாடு பற்றி பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அனுமதி வழங்க போலீசார் மறுத்தனர். மாநாட்டுக்கு வருவதற்கு விண்ணப்பித்த தமிழ் அறிஞர்கள் சிலருக்கு ‘விசா’ மறுக்கப்பட்டது. ‘விசா’ இல்லாமல் வந்தவர்கள் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். மாநாட்டை நடத்துவதற்கு வீரசிங்கம் மண்டபத்தையும், திறந்தவெளி அரங்கத்தையும் பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதிலும் குமாரசூரியரின் தலையீடு இருந்தது. மாநாடு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் அவற்றை உபயோகிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தடைகளைக் கடந்து யாழ்ப்பாணத்தில், உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் செய்தி அறிந்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். யாழ் நகரமே விழாக்கோலம் பூண்டது. கடைவீதிகளில் மின்விளக்கு அலங்காரங்கள் நகரை அலங்கரித்தன. கனிகளுடன் கூடிய வாழை, மாமரங்கள், தென்னை, பனை, பாக்கு, மூங்கில் மரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்கள் நாதசுரம் முழங்க வரவேற்கப்பட்டனர்.

திட்டமிட்டபடி ஜனவரி 3-ந்தேதி வீரசிங்கம் மண்டபத்தில் உலகத் தமிழ் மாநாடு தொடங்கியது. தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மாநாட்டிற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற ஈழப்பிரிவு தலைவர் எஸ்.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இதில் தமிழ் அறிஞர்களான மதுரைப் பல்கலைக்கழக பேராசிரி யர் எம்.சண்முகம் பிள்ளை, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சி.நெய்னார் முகம்மது, ஜெர்மன் நாட்டுப் பேராசிரியர் கே.எல்.ஜெனட், சுவீடன் ஆய்வாளர் பிரிக்கோம், பேராசிரியர் சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இரா.சனார்த்தனம், புலவர் ஈரோடு இராசு, கொடுமுடி சண்முகம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, சுவீடன், இத்தாலி, பிரான்சு, ஹாலந்து, மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆய்வுக் கட்டுரைகளை படித்தனர். தமிழின் பெருமைகளையும், தமிழர்களின் மாண்பையும் விளக்கும் வகையில் அலங்கார வண்டிகள் அணிவகுப்பும், பண்பாட்டுக் கண்காட்சியும் நடைபெற்றன.
மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு அறிஞர்களுக்கு வழியனுப்பு விழா 10-ந்தேதி யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக அரங்கு பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், திறந்தவெளி மேடை திறந்திருக்க மைதானத்தின் வாசல் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன! மாநகர மேயரிடம் கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே அவை திறக்கப்படும் என்று அரங்கக் காப்பாளர் அறிவித்தார். மேயர் ஆல்பிரட் துரையப்பாவை கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வீரசிங்கம் மண்டபம் முன்னால் அவசரமாக ஒரு மேடை அமைக்கப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தார்கள். பேராசிரியர் சி.நெய்னார் முகம்மது உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இரவு 8.30 மணிக்கு போலீஸ் உதவி சூப்பிரண்டு சந்திரசேகரா, போலீஸ் பட்டாளத்தோடு ‘ஜீப்’களில் வந்து இறங்கினார். போலீசார் ‘ஜீப்’களில் இருந்து இறங்கி அணிவகுத்து நின்றனர். ‘ஜீப்’களை முன்னோக்கி செலுத்துமாறு சந்திரசேகரா உத்தரவிட்டார். அதற்குப்பின்னால் போலீசார் நடந்து சென்றனர். கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் சந்திரசேகரா மக்களுக்கு உத்தரவிட்டார்.
மாநாட்டுத் தொண்டர்கள் அவரிடம் சென்று “கூட்டத்தில் குழப்பம் செய்யவேண்டாம்” என்று கேட்டுக்கொண்டனர். அதைச் சிறிதும் பொருட் படுத்தாமல், போலீசார் தாக்குதலைத் தொடுத்தனர். திரண்டிருந்த திரளான மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள். நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் ஓட ஓட விரட்டியடித்தனர். அருகே இருந்த சேறு நிறைந்த குளத்தில் பலர் விழுந்தனர். அவர்களை யாழ்ப்பாண இளைஞர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.
இந்த நிலையில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசினார்கள். அதில் ஒரு குண்டு மேடைக்கு அருகே விழுந்தது. மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் அங்கேயே மயக்கம் அடைந்தார். துப்பாக்கியால் வானத்தை நோக்கி போலீசார் சுட்டனர். அதில் இருந்து வெளியேறிய குண்டு மின்சாரக் கம்பியில் பட்டு, கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நெரிசலில் சிக்கி 2 பேர் உயிர் இழந்தனர். ‘எங்கள் தலைவி சிறிமாவோ பண்டார நாயகாவுக்கு முதல் மரியாதை தராமல் நடக்கும் நிகழ்ச்சி, இப்படித்தான் முடியும்’ என்று குமாரசூரியரும், ஆல்பிரட் துரையப்பாவும் உள்ளுர மகிழ்ந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க சிறிமாவோ பண்டாரநாயகா மறுத்துவிட்டார். மாநாடு நடந்தபோது, மக்கள்தான் போலீசைத் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.
மாநாட்டில் குழப்பம் விளைவித்த போலீஸ் அதிகாரி சந்திரசேகராவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்த ஒரே தமிழ் அமைச்சர் குமாரசூரியரும் இரங்கல் தெரிவிக்கும் அடிப்படை நாகரீகம் அற்றவராக இருந்தார்.
மாநாட்டுக் கலவரம் தொடர்பாக, உண்மை நிலையைக் கண்டறிய அரசு சார்பற்ற அமைப்பான ‘யாழ்ப்பாண பிரஜைகள் குழு’ ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஓ.எல்.டி.கிரெஸ்டர் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணைக்குழு தனது அறிக்கையை 1974-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி அளித்தது. அதில், “எந்த வித ஆத்திரமூட்டலும் இன்றி போலீசார் கண்ணீர் புகை பிரயோகம் செய்தனர். தேவையில்லாமல் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு போலீசாரே பொறுப்பு” என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் முடிவை ஏற்கஅரசு மறுத்துவிட்டது.

இந்திரா – திருமதி பண்டாரநாயகா ஒப்பந்தம்
இலங்கைக்கு கச்சத்தீவு தானம்
இந்தியா கொடுத்தது – 28.06.1974

********************************
தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர் திருமதி பண்டாரநாயகாவும் 1974-ம் ஆண்டு ஜுன் 28-ந்தேதி கையெழுத்திட்டனர்.
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து ஏறத்தாழ 12 மைல் தூரத்தில் இருக்கிறது. முன்பு இந்தத் தீவு, ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று, சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயகா கடந்த ஜனவரி மாதம் டெல்லி வந்திருந்தபோது பிரதமர் இந்திராகாந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று, அப்போது தீர்மானிக்கப்பட்டது.
“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு தரக்கூடாது” என்று தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தபோது இதை வலியுறுத்தினார்.
இப்போது கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று இந்திய அரசு முடிவு செய்துவிட்டது. 28-6-1974 அன்று, கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை இலங்கையில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெயசிங்கே டெல்லிக்கு விமானத்தில் கொண்டு வந்தார். அதில் இந்திரா கையெழுத்திட்டார். அதேபோல, டெல்லியில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல்சிங், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கைக்கு கொண்டு போனார். அதில் இலங்கை பிரதமர் திருமதி பண்டார நாயகா கையெழுத்திட்டார். இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்து போடுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது. அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில் செல்வார்கள். இருதேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிப்பது உண்டு. அங்கு குடிதண்ணீர் இல்லையாதலால், மக்கள் நிரந்தரமாக வசிக்கவில்லை.
முதல்-அமைச்சர் கருணாநிதியை நிருபர்கள் பேட்டி கண்டு, “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்னால் மாநில அரசின் கருத்து கேட்கப்பட்டதா?” என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- “இரண்டு வாரங்களுக்கு முன்னால், வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங் இங்கு வந்தபோது, என்னிடம் அது பற்றி சில விவரங்களை விவாதித்தார். கச்சத்தீவு விஷயத்தில் தமிழ் மக்களுடைய உணர்ச்சியை நான் அவரிடத்தில் விளக்கி இருக்கிறேன்.” இவ்வாறு கருணாநிதி கூறினார்.
ராமநாதபுரம் ராஜா ராமநாதசேதுபதி நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசின் முடிவு வருத்தத்தை தருகிறது. கண்ணீர் விட்டு அழுவது தவிர வேறு வழி இல்லை” என்றார்.
கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றிய அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-தமிழ்நாட்டில் இருந்து 12.5 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 10.5 மைல் தூரத்திலும் இருக்கும் கச்சத்தீவில் இலங்கையைச் சேர்ந்தவர்களோ, இந்தியாவைச் சேர்ந்தவர்களோ எப்பொழுதும் நிரந்தரமாக குடியிருந்தது இல்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே கச்சத்தீவு, இந்தியாவுக்கு சொந்தமா அல்லது இலங்கைக்கு சொந்தமா என்ற பிரச்சினை இருந்தது. அதன்பிறகு ஒரு தீர்மானமான முடிவு ஏற்படும் வரை கச்சத்தீவை இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இரண்டு நாடுகளும் ஒரு பிரச்சினையை பேசி தீர்க்க முடியாவிட்டால் வேறு யாராவது மூன்றாவது நபர் தலையிட்டு சமரசம் செய்து வைக்க வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், அண்டை நாடு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையையும் மூன்றாவது நபர் தலையீடு இல்லாமல் நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறது. கச்சத்தீவு பற்றி தமிழ்நாடு, கோவா, பம்பாயிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள பழைய தஸ்தாவேஜ×களின் ஆதாரங்கள் திரட்டப்பட்டன. இந்த ஆதாரங்கள் பற்றி இரண்டு நாடுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக பேச்சு நடத்தி வந்தனர்.
கச்சத்தீவு அமைந்து இருக்கும் பாக்.ஜலசந்தி பற்றி இரண்டு நாடுகளுக்கும் எல்லைத் தகராறு வரக்கூடாது என்பதற்காக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டது. இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டது நியாயமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.” மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியா-இலங்கை ஆகிய நாடுகள் இடையே கச்சத்தீவு பற்றி ஏற்பட்ட ஒப்பந்தம் விவரம் வருமாறு:- ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்றாலும் அந்த தீவுக்கு இந்திய மக்கள் போவதற்கு “பாஸ்போர்ட்” (அனுமதி) வாங்க வேண்டியது இல்லை. கச்சத்தீவு அமைந்து இருக்கும் கடல் பகுதியில் (பாக் ஜலசந்தி) இரண்டு நாட்டு மீனவர்களும் முன்போல் மீன் பிடிக்கலாம். இரண்டு நாடுகளின் படகுகளும் அந்த பகுதியில் வழக்கம் போல் தடை இல்லாமல் போய் வரலாம். எண்ணைக்கிணறு பாக் ஜலசந்தியில் புதிதாக எல்லை பிரிக்கப்பட்டு இருக்கும் பகுதியை மீறி இந்தியாவோ, இலங்கையோ எண்ணை கிணறு தோண்ட விரும்பினால், இரண்டு நாடுகளும் கலந்து பேசி கூட்டு முயற்சியுடன் எண்ணை வளம் பெருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” மேற்கண்டவாறு கூறப்பட்டு இருந்தது.
கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு “தமிழ்நாட்டுக்கே உரியது கச்சத்தீவு” ஆதாரங்களுடன் இந்திராவுக்கு கருணாநிதி எழுதிய கடிதம்
********************************************************************************************************************
“கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்” என்று ஆதாரங்களுடன் பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழக முதல்- அமைச்சர் கலைஞர் கருணாநிதி கடிதம் எழுதினார். கச்சத்தீவு பற்றி இந்திரா காந்தியும், திருமதி பண்டாரநாயகாவும் பேச்சு நடத்திக் கொண்டு இருந்த காலகட்டத்திலேயே, கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே உரியது என்பதை வலியுறுத்தி, இந்திரா காந்திக்கு கருணாநிதி கடிதம் எழுதினார்.
“கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதை தொடர்ந்து எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14-2-1776 அன்று ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17-3-1762 அன்று ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரை படங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை. 1954-ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் (“மேப்”) கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.
நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்துக் குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென் இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன. கச்சத்தீவு செல்லும் பாதையிலும் கச்சத்தீவின் மேற்கு பகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதை காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.
இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது. எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும் பொழுது, இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி, “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல” என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.” இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார்.
இந்தக் கடிதத்துக்கு பதில் ஏதும் வரவில்லை. கச்சத்தீவு தானம் குறித்து, இந்திரா காந்தியும் திருமதி பண்டாரநாயகவும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார். இந்த கூட்டம் 1974 ஜுன் 29-ந்தேதி நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-
1. பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்)
2. ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்)
3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)
4. அரங்கநாயகம் (அ.தி.மு.க.)
5. வெங்கடசாமி (சுதந்திரா)
6. ஈ.எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்)
7. ஏ.ஆர்.பெருமாள் (பார்வர்டு பிளாக்)
8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ïனிஸ்டு)
மேல்-சபை
9. ம.பொ.சிவஞானம் (தமிழரசு)
10. ஜி.சாமிநாதன் (சுதந்திரா)
11. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)
12. ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்)
13. சக்தி மோகன் (பா.பிளாக்)
14. ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி)
தீர்மானம்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது:
“இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.”
மேற்கண்டவாறு தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.
அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம், பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் சொன்னதாவது:- “கூட்டத்துக்கு வந்திருந்த எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார். கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக்கொள்ளப்படாததால், வெளியேறினார். இ.காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான் இந்தத் தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது.” இவ்வாறு கருணாநிதி கூறினார்.

நிருபர் கேள்வி:- கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்றால் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுபற்றி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரவேண்டும் என்று ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் கருத்து தெரிவித்து இருக்கிறாரே?
கருணாநிதி பதில்:- கோர்ட்டுக்கு போவது பற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை. சட்டசபையை கூட்டுவது பற்றி யோசிக்கலாம்.
கேள்வி:- மத்திய அரசு வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங் உங்களைச் சந்தித்தபோதே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவதாக சொன்னாரா?
கருணாநிதி:- அப்போது அகதிகள் பிரச்சினை பற்றிதான் பேச வந்திருந்தார். இது முக்கியமாகப் பேசப்படவில்லை. அப்போதே தமிழர்கள் இப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் கூறி இருக்கிறேன்.
கேள்வி:- ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதே. இனிமேல் எதுவும் திருத்தம் செய்ய முடியுமா?
கருணாநிதி:- மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. செய்யலாம்.
ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்திலோ அல்லது முந்தினநாளோ, தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ டெல்லிக்கு அழைத்து பேசி இருக்கலாம். இந்த மாநில அரசைக் கலந்து கொள்ளாவிட்டாலும், மிக முக்கியமான பிரச்சினையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களையாவது அழைத்து பிரதம மந்திரி சர்வகட்சி கூட்டத்தை கூட்டி அவர்களது கருத்துக்களை அறிந்து இருக்கலாம். அப்படிச் செய்யாதது வருந்தத்தக்கது.
கேள்வி:- கச்சத்தீவு பிரச்சினைக்காக தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கூறுகிறார்களே?
கருணாநிதி:- கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்ட இந்திராவை ராஜினாமா செய்யும்படி சொல்ல தைரியம் இல்லாதவர்கள், எங்களைப் பார்த்து ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்.”
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பாராளுமன்றத்தில் அமளி
****************************
கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தானம் செய்ததற்கு, பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனசங்க உறுப்பினர், ஆவேசத்துடன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாட்டுக்கு அருகே உள்ளதும், முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் நகலை, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் தாக்கல் செய்தார். அப்போது அதன் மீது காரசாரமான விவாதம் நடந்தது. இரா.செழியன் (தி.மு.க.) பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு உரிய கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்ட விரோதமானது. இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்” என்றார்.
மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) பேசியதாவது:- “என்னுடைய ராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியது கச்சத்தீவு. அதை இலங்கைக்கு கொடுத்தது தவறானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஏற்கனவே, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தொல்லை கொடுத்து வருகிறது. எதிர்காலத்தில் போர் மூண்டால், இந்தத் தீவை இந்தியாவுக்கு எதிரான தளமாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.” இவ்வாறு மூக்கையா தேவர் கூறினார்.
ஜனசங்க தலைவர் வாஜ்பாய் பேசுகையில், “இலங்கைக்கு கச்சத்தீவை தானம் செய்யும் பேரம், ரகசியமாக நடந்து இருக்கிறது. இலங்கையின் நட்பைப் பெறுவதற்காக கச்சத்தீவை தூக்கிக் கொடுப்பது கேவலம்!” என்று கூறினார். மதுலிமாயி (சோசலிஸ்டு), பி.கே.தேவ் (சுதந்திரா), முகமது செரீப் (முஸ்லீம் லீக்), நாஞ்சில் மனோகரன் (அ.தி.மு.க.) ஆகியோரும் ஒப்பந்தத்தை கண்டித்துப் பேசினார்கள்.
வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் பதில் அளிக்கையில், “இந்தியா – இலங்கை நட்பு வளர, இந்த ஒப்பந்தம் உதவும். இரு தேசங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது” என்று கூறினார்.
ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.கழகம், சுதந்திரா, பழைய காங்கிரஸ், சோசலிஸ்டு, முஸ்லிம் லீக், ஜனசங்கம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளில் வலது கம்ïனிஸ்டு, இடது கம்ïனிஸ்டு கட்சிகள் மட்டும் வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.
சபையை விட்டு வெளியேறும் போது கச்வாய் என்ற ஜனசங்க உறுப்பினர், கச்சத்தீவு ஒப்பந்த நகலை கிழித்து, சபையில் வீசி எறிந்தார்.
இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மேல்-சபையிலும், கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். விவாதத்தின்போது எஸ்.எஸ்.மாரிசாமி (தி.மு.க.) பேசுகையில், “கச்சத்தீவு பற்றி தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசாமலேயே, ஒப்பந்தத்தில் டெல்லி சர்க்கார் கையெழுத்திட்டு இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு” என்று கூறினார்.
ராஜ்நாராயணன் (சோசலிஸ்டு) பேசுகையில், “ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன், தமிழ் மக்களின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார். “ஒப்பந்தத்தை தமிழகம் ஒருபோதும் ஏற்காது” என்று அப்துல் சமது (முஸ்லிம் லீக்) கூறினார்.
கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். “இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது” என்று பூபேஷ்குப்தா (வ.கம்.) கூறினார். முடிவில், வ.கம்ïனிஸ்டு, இ.கம்யூனிஸ்டு கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இலங்கை பாராளுமன்றம் கூடியது. கச்சத்தீவை இலங்கைக்கு பெற்றுத்தந்ததற்காக பிரதமர் திருமதி பண்டாரநாயகாவை உறுப்பினர்கள் பாராட்டினார்கள். திருமதி பண்டாரநாயகா பேசுகையில், கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு கண்டதற்காக இந்திரா காந்தியை பாராட்டுவதாக தெரிவித்தார். சமரசம் ஏற்பட இந்திய வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் மிகவும் உதவியதாக அவர் சொன்னார்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கலாமா, கூடாதா என்பது குறித்து இந்திரா காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. “இலங்கைக்கு கச்சத்தீவை இந்தியா கொடுத்தது சரி. அதை ஆதரிக்கிறோம்” என்று தமிழ்நாடு இ.காங்கிரஸ் தலைவர் ராமையா நிருபர்களிடம் கூறினார். கச்சத்தீவை கொடுக்கக்கூடாது என்று கூறுவது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று அவர் சொன்னார். இ.காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவரான பழைய முதல்-மந்திரி பக்தவச்சலமும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து, முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது” என்ற தீர்மானத்தில் கையெழுத்து போட்டார். இதேபோல் மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமியும், தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார்.
இப்படி அவர்கள் கையெழுத்துப் போட்டதற்கு ராமையா எதிர்ப்பு தெரிவித்தார். “அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மாரிமுத்துவும், ஆறுமுகசாமியும் கலந்து கொண்டது தவறு. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதற்கு எதிரான தீர்மானத்தில் அவர்கள் கையெழுத்திட்டது தவறு” என்று அவர் சொன்னார். சட்டசபை இ.காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த அனந்தநாயகியும் ராமையாவின் கருத்தை ஆதரித்தார்.
ராமையாவுக்கு, மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- “முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நானும், மாரிமுத்துவும் கலந்து கொண்டது சரிதான். மக்களின் உணர்ச்சிகளை எதிரொலிப்பது சட்டசபை உறுப்பினர்களின் கடமை. நாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு இ.காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்றுதான் நினைப்பார்கள்.
அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. மிக முக்கியமான இந்த பிரச்சினையில் நாங்கள் ஓடி ஒளிய விரும்பவில்லை. அதனால் நாங்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டோம்.” மேற்கண்டவாறு ஆறுமுகசாமி கூறினார்.
கச்சத்தீவு தானத்தைக் கண்டித்து, ஜுலை 14-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டன. முதல்-அமைச்சர் கருணாநிதி தஞ்சை, பாபநாசம் ஆகிய நகரங்களில் நடந்த கூட்டங்களில் பேசினார்.
கச்சத்தீவை தானம் செய்வது சட்ட விரோதம் என்றும், இந்திரா காந்தியும், திருமதி பண்டாரநாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்றும், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழ்நாடு ஜனசங்கத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கைத் தொடர்ந்தார். விசாரணைக்குப் பிறகு, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பலத்த எதிர்ப்பு இருந்தாலும், கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தது.

‘சயனைடு’ தின்று தற்கொலை செய்த முதல் போராளி
சிவகுமாரன் பற்றிய உருக்கமான தகவல்கள்

************************************************
ஈழத்தமிழர் போராட்டத்தில் 17 வயதான சிவகுமாரன் 1974-ம் ஆண்டு ஜுன் 5-ந்தேதி சயனைடு (விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார். ஈழப் போராட்டத்தில் சயனைடை சாப்பிட்டு உயிர் துறந்த முதல் போராளி இவர்தான். தனது மரணத்தின் மூலம் அன்றைய இலங்கையின் இளம் தமிழர் தலைமுறையை – தமிழ் சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கிய சிவகுமாரன், 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவருடைய தந்தை பொன்னுசாமி, தமிழ் ஆர்வலர். அரசியல் ஞானம் மிக்கவர். தாய் அன்னலட்சுமி. சிவகுமாரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இளமையில் இருந்து விடுதலை வேட்கை உடையவராகத் திகழ்ந்த சிவகுமாரன், தமிழ் மாணவர் பேரவையுடன் தொடர்பு வைத்திருந்தார்.
தொடக்கத்தில் தங்கதுரையின் குழுவில் இருந்த சிவகுமாரன் பின்பு தன் வழியே போகத்தொடங்கினார். சிறிமாவோ பண்டாரநாயகாவின் யாழ்ப்பாணத்து பிரதிநிதியாக, யாழ்ப்பாணம் நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா விளங்கினார். பெரும்பாலான தமிழர்கள் அவரை ஒரு தமிழ்த் துரோகியாகவே கருதினார்கள். துரையப்பாவை, சிவகுமாரன் தீர்த்துக் கட்டத் தீர்மானித்தார். 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் 2-வது கிராஸ் சாலையில் நின்ற துரையப்பாவின் கார் மீது வெடிகுண்டு வீசினார். இதனால் துரையப்பா கார் சேதம் அடைந்தது. காரை நிறுத்திவிட்டு ஓய்வு விடுதியில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த துரையப்பா உயிர் தப்பினார். இதற்காக சிவகுமாரனை போலீசார் கைது செய்தனர். போதிய ஆதாரம் இல்லாததால் சில மாதங்களுக்குப் பிறகு அவர் விடுதலையானார்.
ஆனால் போலீஸ் காவலில் இருந்தபோது கடும் சித்ரவதைக்கு உள்ளானார். இதனால் போலீஸ் கையில் சிக்குவதைக் காட்டிலும், உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்ற முடிவில் கழுத்தில் எப்போதும் `சயனைடு’ குப்பியை தொங்கவிட்டு இருந்தார். போர்க்குணம் உடையவராக சிவகுமாரன் திகழ்ந்தார். அவரது போர்க்குணத்திற்கும், தனித்த செயல்பாட்டிற்கும் சான்றாக ஒரு சம்பவத்தைக் கூறலாம். 1973-ம் ஆண்டு நல்லூர் திருவிழாவின்போது காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிங்கள போலீசார், பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டனர். இதை கண்ட சிவகுமாரன், தன்னந்தனியாகவே நின்று அவர்களை எதிர்த்தார். இதற்காக அவர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டார். பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் போலீசார் அவரை விடுவித்தனர்.

1974-ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்காக சிவகுமாரன் கடுமையாக உழைத்தார். போலீஸ் அட்டூழியத்தால், 9 பேர் மரணத்துடன் மாநாடு முடிந்தது அவரது மனதைப் பெரிதும் நோகச் செய்தது. கலவரத்துக்கு காரணமாக இருந்த இலங்கை அமைச்சர் குமாரசூரியரையும், போலீஸ் அதிகாரி சந்திரசேகராவையும், யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவையும் பழிவாங்க வேண்டும் என்று துடித்தார்.
சந்திரசேகரா, யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே குடியிருந்தார். அந்தக் கோவிலைக் கடந்துதான் அவர் போலீஸ் நிலையத்திற்குச் செல்வது வழக்கம். இதைக் கவனித்த சிவகுமாரன், நண்பர்களுடன் கோவில் அருகே காத்திருந்தார். போலீஸ் ‘ஜீப்’பை ஓட்டிக்கொண்டு சந்திரசேகரா வந்தார். அவரது ‘ஜீப்’பை வழிமறித்து கதவைத் திறந்து சிவகுமாரன் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி வெடிக்கவில்லை.
இதனால் சந்திரசேகராவை வெளியே இழுத்து கத்தியால் குத்த முயன்றார். அப்போது நண்பர்களின் உதவியைக் கோரினார். அவர்கள் ஏற்கனவே ஓடிவிட்டதால், சிவகுமாரனும் அங்கிருந்து ஓட நேர்ந்தது.
தப்பிச் செல்லும் வழியில், ஆல்பர்ட் துரையப்பாவின் காரைக் கண்டார். அவரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார். மறுபடியும் துப்பாக்கி ஒத்துழைக்க மறுத்தது. மீண்டும் ஓட்டம் பிடித்தார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
தலைமறைவாக இருக்கும் சிவகுமாரனைக் காட்டிக் கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. ஈழப்போராளி ஒருவரைப் பிடித்துத் தந்தால் சன்மானம் என்று அறிவிக்கப்பட்டது, அதுவே முதல் முறையாகும். மேலும் 1974-ம் ஆண்டு ஒரு லட்சம் என்பது பெரிய தொகை.
சிவகுமாரனைப் பிடிக்க போலீஸ் வலை வீசியது. அதுவரை மீசை வைத்திராத அவர் பெரிய மீசை வளர்த்தார். இந்தியாவுக்கு தப்பிச்சென்று சிலகாலம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று அவருக்குச் சில நண்பர்கள் யோசனை கூறினார்கள். அதற்குப் பணம் தேவைப்பட்டது. அவருக்குப் பணம் அளிப்பதாக வாக்குறுதி அளித்த சிலரும், கடைசி நேரத்தில் கைவிரித்தனர். இதனால் கோப்பாய் என்ற இடத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்க சிவகுமாரன் திட்டம் தீட்டினார்.
1974-ம் ஆண்டு ஜுன் 5-ந்தேதி இதற்காக ஒரு வாடகைக்காரை அமர்த்திக்கொண்டு நண்பர்களுடன் வங்கிக்குச் சென்றார். வங்கிக் காவலரை சிவகுமாரன் இருமுறை சுட்டார். குறிதவறியது. அதற்குள் யாரோ போலீசுக்குத் தகவல் தெரிவித்து விட்டனர்.
சிவகுமாரனும் அவருடைய நண்பர்களும் காரை நோக்கி ஓடினர். சாவியுடன் டிரைவர் தப்பிச் சென்றிருந்தார். அதற்குள் போலீஸ் படை வந்துவிட்டது. நண்பர்கள் நால்வரும் ஆளுக்கொரு பக்கம் ஓடினார்கள். சிவகுமாரன் செம்மண் நிலத்தில், புகையிலைக் காட்டில் ஓடினார். புகையிலை செடியை வெட்டிய பிறகு நிலத்தில் மிஞ்சிய கட்டைகள் அவரது காலை குத்திக் கிழித்தன. ரத்தம் சொட்டியது. அதற்கு மேல் ஓட முடியாமல் கீழே விழுந்தார். போலீசார் அவரைச் சுற்றி வளைத்தனர். சுற்றி வளைத்த போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த சிவகுமாரன் ‘சயனைடு’ சாப்பிட்டார். அவரைப் போலீசார் யாழ்ப்பாணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் மரணம் அடைந்தார்.
தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தில் சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்ட முதல் போராளி சிவகுமாரனே ஆவார். அவரது மரணச்செய்தி கேட்டு யாழ்ப்பாண மக்கள் – குறிப்பாக தமிழ் இளைஞர்கள் கண்ணீர் சிந்தினர். 17 வயதான சிவகுமாரனின் இறுதி ஊர்வலம் ஜுன் 7-ந்தேதி நடந்தது. திரளான மக்கள் அதில் பங்கேற்றனர். இறுதி சடங்கு நடப்பதற்கு முன்பு இளைஞர்கள் பலர் பெருவிரலைக் கிழித்து, சிவகுமாரன் நெற்றியில் ரத்தத் திலகமிட்டு தங்களைத் தமிழ் ஈழப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்பதாகச் சபதம் செய்தனர்.
சிவகுமாரனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமிர்தலிங்கம் பேசுகையில், “சிவகுமாரன் தமிழ் மக்களுக்காக அளப்பரிய தியாகத்தைப் புரிந்துள்ளார். பிறப்புரிமையை மீட்டு எடுப்பதற்காக அவர் கையாண்ட வன்முறை போராட்டத்தில் நான் வேறுபடுகிறேன். இருந்தபோதிலும் அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலைவணங்குகிறேன். அவரின் வீரத்தியாகம் வீணாகாது. அவரது சாம்பலில் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் முளைப்பார்கள். அவரது சமாதியில் இருந்து தமிழ் ஈழம் எழும்பும்” என்று உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.
சிவகுமாரனின் சொந்த ஊரான உரும்பிராயில் அவருடைய வெண்கலச்சிலை 1975-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதை 77-ம் ஆண்டு சிங்கள ராணுவம் தகர்த்தது. அதை மீண்டும் தமிழர்கள் நிறுவினார்கள். 81-ல் ராணுவம் மீண்டும் இடித்தது. சிவகுமாரன் நினைவு நாளை விடுதலைப்புலிகள் இயக்கம், “மாணவர் எழுச்சி நாளாக” கடைப்பிடித்து வருகிறது.

யாழ்ப்பாண மேயர் துரையப்பா சுட்டுக் கொலை
************************************
யாழ்ப்பாணம் மேயராக இருந்த துரையப்பாவை “தமிழர்களின் துரோகி” என்று குற்றம் சாட்டி, நேருக்கு நேராக நின்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார், பிரபாகரன். இந்த சம்பவத்தின் மூலமாகத்தான், பிரபாகரன் பெயர் வெளி உலகுக்குத் தெரிந்தது. அப்போது அவருக்கு வயது 21.
பிரபாகரனின் தந்தை பெயர் வேலுப்பிள்ளை. தாயார் பார்வதி அம்மாள். இந்த தம்பதிகளின் நான்காவது குழந்தையாக, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் 1954 நவம்பர் 26-ந்தேதி பிரபாகரன் பிறந்தார். பிரபாகரனுக்கு மனோகரன் என்று ஒரு அண்ணன். ஜெகதீசுவரி, விநோதினி என்று இரண்டு மூத்த சகோதரிகள். பிரபாகரன்தான் கடைக்குட்டி.
வேலுப்பிள்ளை அரசாங்க வேலையில் (மாவட்ட நில கணக்கீடு) இருந்தார். பிரபாகரன் அண்ணன் மனோகரனும் அரசுப் பணியில் இருந்தார். இரு மூத்த சகோதரிகளும், அரசு ஊழியர்களை மணந்தனர். (பிற்காலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு மேல் நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.)
1958 கலவரத்தின்போது, கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்களின் வீடுகளை சிங்களர்கள் தாக்கினார்கள்; தீ வைத்து கொளுத்தினார்கள். பிரபாகரனின் அத்தை தன் கணவருடன் கொழும்பு நகரில் வசித்து வந்தார். அந்த வீட்டையும் சிங்களர்கள் தாக்கினார்கள். அத்தையின் கண்முன்னே, அவர் கணவரை அடித்துக் கொன்றார்கள். வீட்டுக்கு தீ வைத்து, அத்தையையும் உயிரோடு எரிக்க முயன்றார்கள். தீக்காயம் அடைந்த அத்தை, குழந்தைகளுடன் சுவர் ஏறிக்குதித்து உயிர் தப்பினார்.
பிரபாகரனுக்கு 6 வயதானபோது, சிங்கள மொழித் திணிப்பை எதிர்த்து, செல்வநாயகம் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தினார். வல்வெட்டித்துறையிலும் தமிழர்கள் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் செய்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கலைந்து ஓடியவர்கள் மீது, ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
சிறுவனாக இருக்கும்போதே பிரபாகரனும், அவர் நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் கைக்குண்டுகளைத் தயாரிக்கும்போது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து, அவர் காலில் காயம் ஏற்பட்டது. வல்வெட்டித்துறையில், ஊரிக்காடு என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில், பத்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர், போராளியாகி விட்டதால், படிப்பைத் தொடரவில்லை. அவர் ரகசிய இயக்கத்தில் இருக்கிறார் என்பதே, அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.
3 மணிக்கு, போலீசார் வந்து அவர் வீட்டைச் சோதனையிட்டனர். அப்போது பிரபாகரன் வீட்டில் இல்லை. பின்னர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, பல இடங்களில் தேடி, பிரபாகரன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன், “உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்பட மாட்டேன். என்னால் உங்களுக்கு எவ்வித தொல்லையும் வேண்டாம். என்னை என் போக்கில் விட்டு விடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.
1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தொடங்கினார். யாழ்ப்பாண மேயர் துரையப்பா ஒரு தமிழர் என்றாலும், அவரை தமிழர்களின் பகைவர் என்று பிரபாகரன் கருதினார். உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள போலீசார் புகுந்து அட்டூழியம் செய்ததற்கும், துப்பாக்கி சூடு நடந்ததற்கும் அவரே மூலகாரணம் என்று நினைத்தார்.
ஏற்கனவே சிவகுமாரன் என்ற போராளியும், வேறு சிலரும் துரையப்பாவை தீர்த்துக்கட்ட முயன்று, அதில் தோல்வி அடைந்தனர். எனவே, அந்தப் பொறுப்பை தானே ஏற்பது என்ற முடிவுக்கு வந்தார், பிரபாகரன். துரையப்பாவை சுட்டுக் கொல்வது என்று தீர்மானித்தார். பொன்னாலை என்ற இடத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு, வெள்ளிக்கிழமை தோறும் துரையப்பா வருவது வழக்கம். அது ஒதுக்குப்புறமான இடம். துரையப்பாவை சுடுவதற்கு அதுதான் சரியான இடம் என்று பிரபாகரன் கருதினார். தனக்கு உதவியாக கிருபாகரன், கலாபதி, பற்குணராஜா ஆகிய போராளிகளை தேர்வு செய்தார். திட்டமிட்டபடி நால்வரும் வெள்ளிக்கிழமை காலை, வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்றனர். துரையப்பாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
சற்று நேரத்தில் துரையப்பா காரில் அங்கு வந்தார். கோவிலுக்கு முன்னால் உள்ள மரத்தின் நிழலில் கார் நின்றது. கதவை திறந்து கொண்டு துரையப்பா இறங்கினார். பிரபாகரனும் அவருடைய நண்பர்களும், “வணக்கம் ஐயா” என்று கைகூப்பி வணங்கினார்கள். துரையப்பாவும் பதிலுக்கு வணங்கினார்.
மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த பிரபாகரன். துரையப்பாவின் மார்பை நோக்கி சரமாரியாகச் சுட்டார். ஏழெட்டு குண்டுகள் சீறிப்பாய்ந்தன. ரத்தம் பீறிட்டு அடிக்க, கீழே சாய்ந்த துரையப்பா அதே இடத்தில் மரணம் அடைந்தார். துரையப்பாவின் கார் டிரைவரை பிடித்து கீழே தள்ளிவிட்டு, பிரபாகரனும், அவருடைய நண்பர்களும் காருக்குள் ஏறி தப்பிச் சென்றனர்.

போலீசாரிடம் சிக்காமல் பிரபாகரன் தப்பினார்
காட்டில் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி

***************************************************
யாழ்ப்பாணம் மேயர் துரையப்பாவை சுட்டுவிட்டு காரில் தப்பிச்சென்ற பிரபாகரனும், அவருடைய நண்பர்களும், நீர்வேலி என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு, ஆளுக்கொரு திசையில் நடந்து சென்றனர். பிரபாகரனைத் தவிர மற்ற மூவரும், பிறகு பஸ்களில் ஏறி வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். பிரபாகரன் தன் குடும்பத்தைப் பிரிந்து வந்து வெகு காலம் ஆகியிருந்தது. எனவே, அவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று தங்கினார். எதுவுமே நடக்காதது போல் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டார். மறுநாள் காலை நண்பர் எழுந்து பார்த்தபோது, பிரபாகரனைக் காணவில்லை. ‘அவசரமாகப் புறப்பட்டுப் போய்விட்டார் போலிருக்கிறது’ என்று நண்பர் நினைத்தார்.
மறுநாள் காலை பத்திரிகைகளில் துரையப்பா கொலை பற்றிய செய்தி, முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. இச்செய்தி, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. துரையப்பா, இலங்கை அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இருந்தார். அவரையும், குமாரசூரியரையும் வைத்து, தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கலாம் என்று பிரதமர் திருமதி பண்டாரநாயகா எண்ணியிருந்தார். இந்நிலையில் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியால், அவர் தாங்க முடியாத அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.
“துரையப்பாவை கொலை செய்தவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யுங்கள்” என்று, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். “தமிழர் கூட்டணி” யின் தூண்டுதலின் பேரிலேயே, சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று சி.ஐ.டி. போலீஸ் கருதியது. குறிப்பாக, அமிர்தலிங்கத்தின் மீது அவர்களுடைய சந்தேகப் பார்வை விழுந்தது. உண்மையில், போராளிகள் எவரும் வன்முறையில் ஈடுபடாமல் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அமிர்தலிங்கத்திடம் செல்வநாயகம் ஒப்படைத்து இருந்தார். அதற்காக, போராளிகளை அமிர்தலிங்கம் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். இதனால்தான், போலீசார் அமிர்தலிங்கத்தின் மீது சந்தேகப்பட்டார்கள்.
தமிழர் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனினும், பிரபாகரன் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தார். துரையப்பா கொலையில் தனக்குத் துணையாக இருந்த மூவரிடமும், “உங்கள் வீட்டில் தங்கியிருக்காதீர்கள். தலைமறைவாக இருங்கள்” என்று கூறினார். பிரபாகரனின் எச்சரிக்கைப்படி நடக்காமல், அந்த நண்பர்கள் அலட்சியமாக இருந்தனர். அதன் விளைவாக, ஆகஸ்ட் 21-ந்தேதி கிருபாகரனும், செப்டம்பர் 19-ந்தேதி கலாபதியும் அவர்களுடைய வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் சித்ரவதை செய்ததில், அவர்கள் நடந்ததையெல்லாம் அப்படியே கூறிவிட்டனர். பிரபாகரனின் பெயர் வெளிஉலகுக்கு தெரிந்தது. அவரைப் பிடிக்க நாலாபுறமும் போலீசார் அனுப்பப்பட்டனர்.
பிரபாகரன் எப்படி இருப்பார் என்று போலீசுக்குத் தெரியாது. அவர் தந்தை வீட்டுக்குச் சென்று சோதனை போட்டபோது, படம் எதுவும் கிடைக்கவில்லை. ஏனென்றால், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் தன்னுடைய போட்டோக்களை எல்லாம் கிழித்து எறிந்து விட்டார். அவர் அக்காவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரே ஒரு படத்தில் மட்டும் அவர் இருந்தார். சிறுவனாக இருந்தபோது எடுக்கப்பட்ட படம் அது. அதை வைத்து பிரபாகரனை பிடிக்க போலீசார் முயன்றனர்.
ஆனால், பிரபாகரன் வவுனியா காட்டுக்குள் புகுந்து விட்டார். அந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து விட்டால் தன்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று பிரபாகரன் எண்ணினார். அவர் நினைத்தபடியே நடந்தது. பிரபாகரனை தேடும் முயற்சியில் போலீசார் தோல்வி அடைந்தனர்.
வவுனியா நகரில் இருந்து 3 மைல் தூரத்தில் அந்த காட்டுப் பகுதி உள்ளது. தமிழ் ஈழ விடுதலைக்காக தமிழ் இளைஞர்களை ஒன்று திரட்டி, அந்த காட்டுப்பகுதியில் ராணுவப் பயிற்சி அளிக்கத் தீர்மானித்தார், பிரபாகரன். லட்சியத்தில் பிடிப்புள்ள இளைஞர்களாகப் பார்த்து தேர்வு செய்தார். குறிபார்த்து சுடுவதில் பிரபாகரன் வல்லவர். மற்றவர்களும் இதேபோல் குறிபார்த்து சுடவேண்டும் என்று விரும்பி, அதற்கேற்றவாறு பயிற்சி அளித்தார். துப்பாக்கிகளும், குண்டுகளும் தேவைப்பட்டன. அவற்றை வாங்க பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.
போலீசார் தேடி வருவதால், பொதுமக்களிடம் சென்று நிதி திரட்ட முடியாது. எனவே, அரசு வங்கியை கொள்ளையடிப்பது என்று பிரபாகரனும், அவர் நண்பர்களும் முடிவு செய்தனர். புத்தூர் என்ற இடத்தில் உள்ள அரசு வங்கியை அவர்கள் பல நாட்கள் கண்காணித்தனர். வங்கி எத்தனை மணிக்குத் திறக்கப்படுகிறது, எத்தனை மணிக்கு மூடப்படுகிறது என்பதை எல்லாம் நோட்டம் விட்டனர். வங்கிக்குள் புகுந்து, பணத்தை எப்படி கைப்பற்றிக் கொண்டு வருவது என்று தெளிவாக திட்டம் வகுத்தார்.
1976-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி. வங்கி திறந்ததும், பிரபாகரன் அவருடைய நண்பர்களுடன் உள்ளே நுழைந்தார். வங்கி அதிகாரிகளை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். எல்லோரும் பயந்துபோய் இரண்டு கைகளையும் தூக்கினார்கள். அவர்கள் அனைவரையும் மானேஜர் அறைக்குள் தள்ளி கதவைத் தாழிட்டார். வங்கியில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கத்தையும், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் பிரபாகரனும், அவர் நண்பர்களும் அள்ளி மூட்டையாகக் கட்டினார்கள். மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்கள். ஐந்தே நிமிடத்தில் இவ்வளவும் நடந்து விட்டது.
பிரபாகரன் இந்த பணத்தில் ஒரு பகுதியை வல்வெட்டித்துறையில் உள்ள கோவிலுக்கு வழங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்தார். மீதிப்பணத்தில் துப்பாக்கிகளும், குண்டுகளும் ரகசியமாக வாங்கப்பட்டன. “தமிழ் ஈழம் அடையவேண்டுமானால், சிறிய ராணுவக் குழுவால் முடியாது. சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு பெரிய ராணுவத்தை உருவாக்க வேண்டும்” என்று பிரபாகரன் எண்ணினார். பலநாள் சிந்தனைக்குப் பிறகு, அவர் மனதில் ஒரு திட்டம் உருவாயிற்று.

“புதிய தமிழ்ப்புலிகள்”
“தமிழீழ விடுதலைப்புலிகள்” ஆக உருவெடுத்தது – 05..05.1976

*********************************************************
“புதிய தமிழ்ப்புலிகள்” என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த பிரபாகரன், அதை ஒரு பெரிய ராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். இந்த அமைப்புக்கான சின்னத்தையும் அவர் வடிவமைத்திருந்தார். வட்டத்தின் நடுவே, கர்ஜனை செய்யும் புலியின் தலை. பின்னணியில் இரு துப்பாக்கிகள். “தமிழீழ விடுதலைப்புலிகள்” என்ற எழுத்துக்கு மேலே, வட்டத்தைச் சுற்றிலும் துப்பாக்கித் தோட்டாக்கள். இதுதான் விடுதலைப்புலிகள் அமைப்பின் சின்னம்.

அமைப்பை நிர்வாகிக்க, ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ராணுவ தளபதி, தலைவர் ஆகிய பொறுப்புகளை பிரபாகரன் ஏற்றார். அவரைத் தவிர செல்லக்கிளி, நாகராஜா, அய்யர், விஸ்வேஸ்வரன் ஆகியோர் முதலாவது மத்தியக் குழுவில் இடம் பெற்றனர். விடுதலைப்புலிகளுக்கு என்று கடுமையான சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் புகை பிடிக்கக்கூடாது; மது அருந்தக்கூடாது; ‘செக்ஸ்’ கூடாது. குடும்பத்துடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். இயக்கத்தை விட்டு வெளியேறுகிறவர்கள், வேறு இயக்கங்களில் சேரக்கூடாது; புதிய இயக்கம் தொடங்கக்கூடாது.
தமிழ் ஈழத்தை அடைய ஒரு செயல் திட்டத்தை பிரபாகரன் வகுத்தார். அது பின்வருமாறு:- “காட்டிக்கொடுக்கும் துரோகிகளை ஒழிக்க வேண்டும். போலீசுக்கு உளவு சொல்பவர்களை அழிப்பதன் மூலம், நமது திட்டங்களையும், வியூகங்களையும் போலீசாரும், ராணுவமும் அறிந்து கொள்ள முடியாதபடி தடுக்கலாம். இதுவே நமது வெற்றிக்குத் துணை நிற்கும். ஆயுதப்புரட்சி நடத்தி, இலங்கை அரசாங்கத்தை செயல்பட முடியாதபடி முடங்கச் செய்யவேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளை ஒருங்கிணைத்து “தமிழீழம்” அமைப்பதற்கு முதல் படியாக, அந்தப் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவ முகாம்களை அழிக்க வேண்டும். அந்தப் பகுதிகளை விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். தமிழ் ஈழத்துக்கு முழு சுதந்திரம் பெற்று, அங்கு சோசலிச ஜனநாயகக் குடியரசை நிறுவவேண்டும்.” மேற்கண்டவாறு செயல் திட்டத்தை வகுத்தார், பிரபாகரன்.
தமிழீழம் அடைய ஆயுதம் ஏந்திப் போராடிய போராளிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர். ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும், பிற்காலத்தில் மோதிக்கொண்டார்கள். ஒற்றுமையாக செயல்பட்ட காலத்தில், கைகோர்த்து நிற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:
1. சிறிசபாரத்தினம் (தமிழீழ விடுதலை இயக்கம் – TELO)
2. பத்மநாபா (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -EPRLF)
3. பிரபாகரன் (தமிழீழ விடுதலைப்புலிகள் – LTTE)
4. பாலகுமார் (ஈழப்புரட்சி அமைப்பு – EROS)

இலங்கைத் தமிழர்களுக்கு தனி சுதந்திர நாடு
“தமிழ் ஈழம் வேண்டும்”
வரலாற்றுப் புகழ் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் – 14.5.1976

************************************************************
இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு (“தனி ஈழம்”) வேண்டும் என்று, இலங்கைத் தமிழர் தலைவர் செல்வநாயகம் தலைமையில், வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது. இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அதற்கு மாநில சுயாட்சி வேண்டும் என்று `இலங்கைத் தமிழர்களின் தந்தை’ என்று போற்றப்படுகிற செல்வநாயகம் போராடி வந்தார். இது குறித்து பிரதமர்கள் பண்டாரநாயகா, திருமதி பண்டாரநாயகா ஆகியோருடன் ஒப்பந்தங்களும் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தங்கள் பயனற்றுப்போயின. தமிழர்களுக்கு எதிராக சிங்களர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தன.
இதனால் மனம் நொந்த செல்வநாயகம், “தனி நாடு பெற்றால்தான் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழமுடியும்” என்ற முடிவுக்கு வந்தார். இதை அறிவிப்பதற்காக அவர் ஒரு மாநாட்டை கூட்டினார். வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பண்ணாகம் என்ற ஊரில் 1976 மே 14-ந்தேதி இந்த மாநாடு நடந்தது. செல்வநாயகத்தின் பிரதம சீடரான அமிர்தலிங்கம் பிறந்த ஊர் பண்ணாகம்.
இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில், வட்டுக்கோட்டை மாநாடு மிகவும் முக்கியமானதாகும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. “தமிழர்களுக்கு தனி மாநிலம்”, “மாகாண சபை”, “மாநில சுயாட்சி” முதலான தத்துவங்களில் தமிழ் இளைஞர்கள் சலிப்படைந்து விட்ட காலகட்டம் அது. “தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். சிங்களர் அடக்கு முறையில் இருந்து மீள அதுதான் வழி” என்று அவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.
எனவே, வட்டுக்கோட்டை மாநாட்டுக்கு வந்த தமிழ் இளைஞர்கள், “தமிழ் ஈழம் வேண்டும்”, “தனி நாடு பற்றிய அறிவிப்பை வெளியிடுங்கள்” என்று குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
மாநாட்டுக்கு செல்வநாயகம் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் கூறியதாவது:- “தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைத்து, சுயாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். அதை சிங்கள அரசுகள் கேட்கவில்லை. ஐக்கிய இலங்கையில் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கு செய்த முயற்சிகள் தோற்றுவிட்டன. இந்நிலையில், தமிழர்களுக்கு என்று தனி சுதந்திர நாடு கோருவதை தவிர வேறு வழி இல்லை.” இவ்வாறு செல்வநாயகம் கூறியபோது, மாநாட்டில் கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். “தமிழ் ஈழம் வாழ்க” என்று முழக்கமிட்டனர்.
தொடர்ந்து, “வட்டுக்கோட்டை பிரகடனம்” என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் தனி நாடு தீர்மானத்தை செல்வநாயகம் முன்மொழிந்தார். மு.சிவசிதம்பரம் வழிமொழிந்தார். அந்தத் தீர்மான வாசகம் வருமாறு:- “ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற சோசலிச தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப்போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பானதாக அமையும்.” இந்தத் தீர்மானம் வாசிக்கப்பட்டதும், கூடியிருந்த இளைஞர்கள் “தமிழ் ஈழம் வாழ்க”, “தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம்” என்று குரல் எழுப்பினர்.
இந்த தீர்மானத்தை அடுத்து, “தமிழர் கூட்டணி”யின் பெயரை “தமிழர் விடுதலை கூட்டணி” என்று மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராக அமிர்தலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கையின் வரலாற்றையும், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான் என்பதையும் விளக்கி சொற்பொழிவாற்றினார்.
பின்னர் அவர் கூறியதாவது:- “இலங்கைக்கு இங்கிலாந்து சுதந்திரம் வழங்கியபோது, தமிழர்களுக்கு தனி நாடு வழங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. “சிறுபான்மை மக்களுக்கு பாதகமான சட்டங்களை நிறைவேற்றக் கூடாது” என்று கூறி, முழு நாட்டையும் சிங்களரிடமே ஒப்படைத்து விட்டனர். சிங்களர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கிவிட்டனர். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட, எந்த அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை. எனவே, இழந்துவிட்ட அரசுரிமையைப் பெற தமிழ் ஈழம் ஒன்றுதான் வழி என்று, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம்.” இவ்வாறு அமிர்தலிங்கம் கூறினார். அவருடைய பேச்சு, தமிழ் இளைஞர்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருந்தது. மாநாடு முடிந்ததும், அமிர்தலிங்கத்தை தோளில் தூக்கிக்கொண்டு இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
இது நடந்து ஒரு வாரத்துக்குப்பின், தமிழ் ஈழம் பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகிக்க, செல்வநாயகமும் அமிர்தலிங்கமும், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகர்களும், யாழ்ப்பாணம் பஸ் நிலையம் அருகே கூடினர். பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
அப்போது, ஆயுதம் தாங்கிய போலீசார் ஜீப்களில் வந்தனர். “உங்களை கைது செய்யும்படி எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. எங்களுடன் வாருங்கள்” என்று, அமிர்தலிங்கத்திடம் போலீஸ் அதிகாரிகள் கூறினர். “என்னையும் கைது செய்யுங்கள்” என்று செல்வநாயகம் கூறினார். “நீங்கள் எங்களுக்குத் தேவை இல்லை” என்று, போலீஸ் அதிகாரி சொன்னார். அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம், கே.பி.ரத்தினம், கே.துரை ரத்தினம், எம்.சிவசிதம்பரம் ஆகியோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்களுடன் சென்ற செல்வநாயகத்தை போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர்.
அமிர்தலிங்கத்தின் மீதும் மற்றவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. தேசத்துரோகம் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. நெருக்கடி கால சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கோர்ட்டில் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நெருக்கடி கால சட்டம் முறைப்படி பிரகடனம் செய்யப்படவில்லை என்றும், அந்த சட்டப்படி அமைக்கப்பட்ட கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கும் செல்லாது என்றும், அமிர்தலிங்கத்தின் தரப்பிலும், மற்ற தலைவர்களின் தரப்பிலும் வாதாடப்பட்டது. இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அமிர்தலிங்கத்தையும், மற்றவர்களையும் விடுதலை செய்தனர். இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இலங்கைத் தமிழர்களின் தந்தை
செல்வநாயகம் மறைவு

*************************
“இலங்கைத் தமிழர்களின் தந்தை” என்றும், “இலங்கையின் காந்தி” என்றும் போற்றப்பட்ட செல்வநாயகம், தமது 79-வது வயதில் காலமானார். பிரதமர் திருமதி பண்டாரநாயகா உள்பட அமைச்சர்களும், அனைத்துக் கட்சியினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சட்ட மேதையான செல்வநாயகம், வாழ்நாள் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். தமிழர்களுக்கு மாநில சுயாட்சி வேண்டும் என்று நீண்ட காலம் கோரி வந்தார். இதுகுறித்து அவருடன் ஒப்பந்தம் செய்த பண்டாரநாயகா, திருமதி பண்டாரநாயகா முதலான சிங்களத் தலைவர்கள், பிறகு பின்வாங்கி ஒப்பந்தத்தை காற்றில் பறக்க விட்டனர்.
எனவே, “தமிழர்களுக்கு என்று தனி நாடு (“தமிழ் ஈழம்”) பெறப் போராடுவோம்” என்று, வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் அறிவித்தார். இதன் பிறகு, தமிழ் ஈழ கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசினார். 1976 நவம்பர் மாதத்தில் திருகோணமலை கூட்டத்தில் பேசுகையில், “எனக்கு இப்போது 78 வயது ஆகிவிட்டது. இன்னும் அதிக காலம் வாழ்வேனா என்பது சந்தேகம். சாவதற்கு முன், தமிழ் இனத்துக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டு சாக விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
1976 நவம்பர் 19-ந்தேதி இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசினார். அதுவே, பாராளுமன்றத்தில் அவருடைய கடைசி பேச்சாக அமைந்தது. அவர் கூறியதாவது:- “தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை மீட்பதற்காக, நாங்கள் ஒரு காலத்தில் கூட்டாட்சி கோரினோம். ஆனால் கூட்டாட்சி மூலம், தமிழ் மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவது சாத்தியப்படாது என்பதை, கடந்த கால அனுபவங்கள் மூலம் உணர்ந்து கொண்டோம். இந்த அனுபவங்களின் அடிப்படையில்தான், தனியே பிரிந்து வாழ்வதுதான் சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இதைச் செய்யாவிட்டால், தமிழ் இனம் இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக்கொள்ள முடியாது.
இலங்கையின் வரலாற்றில் எங்களுக்கு தனி இடம் உண்டு. எங்கள் முன்னோர்கள் இந்த மண்ணை ஆண்டவர்கள். நாங்கள் எங்கள் அரசுரிமையை இழந்தோம். அந்த உரிமையைத்தான் கோருகிறோம். தனித்தமிழ் ஈழம் அமைப்பது இலகுவான காரியம் அல்ல, மிகவும் கஷ்டமானது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், சிங்களரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என்றால், தமிழ் ஈழம் அமைப்பது தவிர வேறு வழியில்லை. தனி நாடு கோரும் நாங்கள், அகிம்சை வழியிலேயே போராடுவோம்.” இவ்வாறு செல்வநாயகம் கூறினார்.
செல்வநாயகத்தை, வெளிநாட்டு நிருபர்கள் பேட்டி கண்டனர். “பாராளுமன்றத்தில் பேசும்போது, தமிழ் ஈழத்தை அடைவதற்கான உங்கள் போராட்டம் அகிம்சை வழியிலேயே நடைபெறும் என்று கூறினீர்கள். ஆனால், சில இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று அவர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்து செல்வநாயகம் கூறியதாவது:- “தமிழ்ச் சமுதாயம், அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதனால்தான் உணர்ச்சி மிக்க சில இளைஞர்கள் ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர். ஆயுதங்கள் அழிவுக்கருவிகள். ஆயுதத்தை தூக்கியவருக்கும் அது அழிவைக் கொடுக்கும். அகிம்சை அப்படியானது அல்ல. போராடுகிறவர்களை ஆளவோ, அடக்கவோ முடியாத நிலையை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தும். அகிம்சைப் பாதையில்தான் எங்கள் போராட்டம் அமையும். அதிலிருந்து சற்றும் விலகமாட்டோம். இவ்வாறு செல்வநாயகம் கூறினார்.
1977 மார்ச் 23-ந்தேதி செல்வநாயகம் தனது இல்லத்தில் இருந்தபோது கால் தடுக்கி கீழே விழுந்தார். தலையில் அடிபட்டு நினைவிழந்தார். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் நினைவு திரும்பவில்லை. செல்வநாயகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல பரவியது. ஆஸ்பத்திரி முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர்.
தனது தன்னலமற்ற தொண்டு, நேர்மை, தியாகம் ஆகியவற்றால், மாற்றுக்கட்சியினரின் நன்மதிப்பையும் செல்வநாயகம் பெற்றிருந்தார். செல்வநாயகம் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், பிரதமர் திருமதி பண்டாரநாயகா, ஆஸ்பத்திரிக்கு சென்று செல்வநாயகத்தைப் பார்த்தார். உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்தார். அத்துடன், ஒரு ஹெலிகாப்டர் விமானத்தில், நரம்பியல் டாக்டர்கள் இருவரை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி, செல்வநாயகத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். விசேஷ மருந்துகளை சிங்கப்பூரில் இருந்தும், லண்டனில் இருந்தும் தருவிக்கச் செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயவர்த்தனா, மலையகத் தமிழர்களின் தலைவர் தொண்டமான் மற்றும் பல “எம்.பி.”க்கள் செல்வநாயகத்தை போய்ப் பார்த்தனர். செல்வநாயகம் தலையில் அடிபட்டு இருந்ததால், ரத்தக்கசிவு ஏற்பட்டு, கட்டியாக மாறி இருந்தது. அதை அகற்ற அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின், செல்வநாயகம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர்.
எனினும், பிறகு அவர் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. 34 நாட்கள் மரணத்துடன் போராடிய செல்வநாயகம், ஏப்ரல் 26-ந்தேதி நினைவு திரும்பாமலேயே மரணம் அடைந்தார். செல்வநாயகத்தின் மறைவுச் செய்தி இலங்கைத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களும், செல்வநாயகத்தின் மறைவு செய்தி கேட்டு துயரம் அடைந்தனர்.
“செல்வநாயகம் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் தமிழ் பேசும் நல்லுலகின் வழிகாட்டி. ஈழம் வாழ் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கான வழி வகுத்திட்ட மாபெரும் தலைவர்” என்று கலைஞர் கருணாநிதி புகழ் அஞ்சலி செலுத்தினார். “உலகத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமாகப் போராடிய மேதை” என்று எம்.ஜி.ஆர். தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.
பிரதமர் திருமதி பண்டாரநாயகா விடுத்த அனுதாப செய்தியில், “செல்வநாயகம் எப்போதும் நியாயமாக நடந்து கொள்பவர். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர். அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கண்டன தீர்மானங்களைத் தயாரிக்கும்போது, கடினமான வார்த்தைகளை உபயோகித்தால், அவற்றை நீக்கிவிடுமாறு கூறி விடுவார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
செல்வநாயகத்தின் உடல், அவர் அமைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் திருமதி பண்டாரநாயகா தனி விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்று, செல்வநாயகம் உடல் மீது மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் ஸ்டான்லி திலகரத்னா, அமைச்சர்கள் மைத்ரி பாலசேனநாயகா, பிலிக்ஸ் டயஸ் பண்டாரநாயகா, இலங்கரத்னா, செல்லையா குமாரசூரியர் உள்பட பல பிரமுகர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. லட்சக்கணக்கானவர்கள் ஊர்வலத்தில் சென்றனர். தமிழகத்தில் இருந்து இரா.நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், இரா.சனார்த்தனம் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தெல்லிப்பளை என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், பிரார்த்தனைகள் நடந்தன. அதன்பின் செல்வநாயகத்தின் உடலை பிரபாகரன், உமா மகேஸ்வரன், சிறிசபாரத்தினம், ஈழவேந்தன், சித்தார்த்தன், கோவை மகேசன் உள்பட பலர் சுமந்து வந்து, 15 அடி உயர வெள்ளி ரதத்தில் ஏற்றினர். மக்கள் வெள்ளத்தில், இந்த வெள்ளி ரதம் ஊர்ந்து சென்றது.
தகனம் செய்யப்படுவதற்கான இடத்தில் 3 லட்சம் பேர் கூடி இருந்தனர். செல்வநாயகம் உடல் வைக்கப்பட்டிருந்த பேழையை, ரதத்தில் இருந்து அமிர்தலிங்கம், மாவை சேனாதிராஜா உள்பட பிரமுகர்கள் கீழே இறக்கி, சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டிருந்த “சிதை” மீது வைத்தனர். கூடியிருந்தவர்கள் கதறி அழ, “சிதை”க்கு பிஷப் அம்பலவாணர் தீமூட்டினார். இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிந்தது.
மறைந்த செல்வநாயகத்திற்கு ஒரு மகள், 4 மகன்கள். விவரம் வருமாறு:-
1. சுசீலாவதி. கனடா நாட்டில் வசிக்கிறார். இவருடைய கணவர் ஜெயரத்தினம் வில்சன். அரசியல் துறை பேராசிரியர். இறந்து விட்டார்.
2. டாக்டர் மனோகரன். அணு விஞ்ஞானி. அமெரிக்காவில் வசிக்கிறார்.
3. வசீகரன். கணிதப் பேராசிரியர். இறந்து விட்டார்.
4. ரவீந்திரன். சார்ட்டர்டு அக்கவுண்டண்ட். அமெரிக்காவில் வசிக்கிறார்.
5. சந்திரஹாசன். வக்கீல். ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழக நிறுவனர்- பொருளாளர். சென்னையில் வசிக்கிறார்.

1977 தேர்தலில்
ஜெயவர்த்தனா மாபெரும் வெற்றி
தன்னைத்தானே ஜனாதிபதியாக நியமித்துக் கொண்டார் !
*******************************************************
இலங்கையில், 1977 – ம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில், ஜெயவர்த்தனாவின் “ஐக்கிய தேசிய கட்சி” மகத்தான வெற்றி பெற்றது. அதன் காரணமாக, சட்டத்தில் ஒரு திருத்தம் செய்து, ஜனாதிபதியாக தன்னைத்தானே நியமித்துக் கொண்டு, சகல அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்டார், ஜெயவர்த்தனா.
இலங்கையின் வரலாற்றில் 1977 -ம் ஆண்டு ஜூலையில் நடந்த பொதுத் தேர்தல் முக்கியமானது.
இந்தத் தேர்தலில், ஜெயவர்த்தனாவின் “ஐக்கிய தேசிய கட்சி” வரலாறு கண்டறியாத மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது.
பாராளுமன்றத்தின் மொத்த இடங்கள் 168. அதில் 140 இடங்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியது.
அதுவரை ஆளும் கட்சியாக இருந்த திருமதி பண்டாரநாயகாவின் “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி” படுதோல்வி அடைந்தது. வெறும் 8 இடங்கள் மட்டுமே அதற்குக் கிடைத்தது.
“தமிழ் ஈழம் வேண்டும்” என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானம் நிறைவேறிய பிறகு இத்தேர்தல் நடந்தது.
அந்தக் கோரிக்கையை முன் நிறுத்தினார்கள். இந்தத் தேர்தலில் “தமிழர் விடதலை முன்னணி” போட்டியிட்டது. 18 இடங்களில் வெற்றி பெற்று, சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
அதாவது, முன்பு ஆளும் கட்சியாக இருந்த திருமதி பண்டாரநாயகா கட்சியைவிட 10 இடங்களை கூடுதலாகப் பெற்று, சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியாக தமிழர் கட்சி விளங்கியது. “தமிழ் ஈழம்” கோரிக்கையை தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக தேர்தல் முடிவு அமைந்தது.
தேர்தல் முடிவினால் ஜெயவர்த்தனா மிகவும் மகிழ்ந்தார். மிகப் பெரும் மெஜாரிட்டி கிடைத்துவிட்டதால், சட்டத்தில் எப்படிப்பட்ட திருத்தத்தையும் செய்யும் அளவுக்கு அவர் வலிமை பெற்றுவிட்டார். சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவர் தீர்மானித்தார்.
அரசியல் சட்டப்படி, பிரதமரே சகல அதிகாரங்களும் கொண்டவர். அதை மாற்றி, ஜனாதிபதியே சகல அதிகாரங்களும் படைத்தவர் என்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார். அதன்படி, தன்னைத்தானே ஜனாதிபதியாக நியமித்துக் கொண்டார்.
இந்த மாற்றம் 1978 பிப்ரவரி 4 -ந்தேதி அமலுக்கு வந்தது. பிரதமாராக, பிரமதாசாவை ஜெயவர்த்தனா நியமித்தார்.
(அமெரிக்க ஆட்சி முறையிலும் ஜனாதிபதிக்குத்தான் அதிகாரம். ஆனால், ஜானதிபதியை பொது மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.)
1978 பிப்ரவரி 4 -ந்தேதி இலங்கையின் 30 -வது சுதந்திர தினம். ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற அந்த நாளை தேர்ந்தெடுத்திருந்தார், ஜெயவர்த்தனா.
ஜோசியர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நேரமான காலை 8.58 மணிக்கு, ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அவருக்கு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சமரக்கோன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
11/2 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கூடியிருந்து பார்த்தார்கள்.
பிறகு முப்படை வீரர்கள், மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஜெயவர்த்தனா ஏற்றுக்கொண்டார்.
பாராளுமன்ற கட்டிடத்துக்கு அருகே கடற்கரை ஒரமாக இந்த விழா நடந்தது. விழாவையொட்டி, சற்று தூரத்தில் கடற்படை கப்பல்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து விமானங்கள் பறந்து வந்து, சாகச செயல்களை புரிந்தன.
ஜெயவர்த்தனா பதவி ஏற்ற பொது சங்குகள் முழங்க, முரசுகள் ஒழிக்கப்பட்டன.
இந்தியா சார்பில், மத்திய உள்நாட்டு மந்திரி சரண்சிங், இந்த விழாவில் கலந்து கொண்டார்.
அமெரிக்க ஜானதிபதி கார்ட்டர், விசேஷ பிரதிநிதியாக வெளிநாட்டு இலாகாவைச் சேர்ந்த கரோல்லைசி என்ற பெண் அதிகாரியை அனுப்பி இருந்தார். மற்ற நாடுகளின் சார்பில் அந்தந்த நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை முன்னிட்டு, கொழும்பு நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. அரசாங்க கட்டிடங்களில் தீப விழாக்கோலம் பூண்டு இருந்தது. அரசாங்க கட்டிடங்களில் தீப அலங்காரம் செய்யப்பட்டு, ஒளிமயமாக காட்சி அளித்தன.
இந்து கோயில்கள், மாதா கோயில்கள், மசூதிகள் ஆகியவற்றில் விசேஷ பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. ஜெயவர்த்தனா, அவருடைய குடும்பத்தாருடன் புத்தர் கோயில் ஒன்றுக்குச் சென்று புத்தரை வழிப்பட்டார்.
புதிய ஆட்சி முறை வந்ததையொட்டி, கைதிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டது. இதன் மூலம் 10 பேர் தூக்குதண்டனையில் இருந்து தப்பினார்கள்.
தமிழர் விடுதலை முன்னணி கட்சியும், முன்னாள் பிரதமர் திருமதி பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.
ஜனாதிபதி ஆட்சி முறை சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும் என்று திருமதி பண்டாரநாயகா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. சிறுபான்மையான தமிழர்களை சிங்களர்கள் அடக்கி ஆளும் வரை அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் இருந்தாலும் ஜனாதிபதி இருந்தாலும் ஒன்றுதான் என்று தமிழர் விடுதலை முன்னணி கூறியது.

ஜெயவர்த்தனா ஆட்சியில் தொடர்ந்து கலவரம்
தமிழர்கள் படுகொலை

*******************
ஜெயவர்த்தனா ஆட்சியின்போது, இலங்கையில் தொடர்ந்து கலவரங்கள் நடந்தன. தமிழர்களை சிங்களர்கள் படுகொலை செய்தார்கள். 1977 ஜுலையில் நடந்த தேர்தலில் ஜெயவர்த்தனா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்தே, கலவரங்கள் ஆரம்பமாகி விட்டன.
1977 ஆகஸ்டு 12-ந்தேதி யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது. சீருடை அணியாத 2 போலீசார் உள்ளே நுழைய முயன்றனர். “டிக்கெட் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்று அவர்களிடம் விழா அமைப்பாளர்கள் கூறினர். திரும்பிச்சென்ற அந்த போலீசார் மறுநாள் நன்றாகக் குடித்துவிட்டு, கலை நிகழ்ச்சிக்கு வந்தனர். அப்போதும் அவர்கள் போலீசுக்கு உரிய சீருடை அணிந்திருக்கவில்லை. விழாவுக்கு வந்த பொதுமக்களை அவர்கள் வலுச்சண்டைக்கு இழுத்தனர். கைகலப்பு நடந்தது. ஒரு வழியாக அவர்களை பொதுமக்கள் வெளியே அனுப்பினர்.
மறுநாள் போலீசார் பெரும் கூட்டமாக வந்து கலவரம் செய்தனர். பொதுமக்களை கண்மூடித்தனமாகத் தாக்கினர். 15-ந்தேதி மீண்டும் போலீசார் அட்டூழியம் செய்ததால் பெரிய அளவில் கலவரம் வெடித்தது. பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர். 16-ந்தேதியும் போலீஸ் அராஜகம் தொடர்ந்தது. தமிழர்களின் கடைகளுக்கு தீ வைத்தனர். 17-ந்தேதி, யாழ்ப்பாணம் மார்க்கெட்டையே தீ வைத்து கொளுத்தி நாசப்படுத்தினார்கள்.
கலவரப்பகுதியை அமிர்தலிங்கம் பார்வையிட்டார். “அப்பாவி மக்கள் மீது ஏன் சுடுகிறீர்கள்?” என்று போலீசாரைப் பார்த்துக் கேட்டார். போலீசார் அவரையும் தாக்கினார்கள். இதற்கிடையே, “யாழ்ப்பாணத்தில் சிங்களர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள்” என்று அனுராதபுரத்தில் வதந்தி பரவியது. திட்டமிட்டு இந்த வதந்தியைப் பரப்பியவர்கள் சிங்களர்கள்தான். அங்கும் கலவரம் வெடித்தது. தமிழர்களின் வீடுகளும், கடைகளும் கொளுத்தப்பட்டன. அனுராதபுரத்தில் மூண்ட கலவரம், இலங்கையின் மற்ற இடங்களுக்கும் பரவியது.
இந்தப் பிரச்சினை பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. “யாழ்ப்பாணத்தில் போலீசார் அநியாயமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ஏன் சுட்டீர்கள் என்று கேட்ட என்னையும் தாக்கினார்கள். நான் உயிரோடு இந்த சபை முன் நிற்பதே ஆச்சரியம்” என்று அமிர்தலிங்கம் கூறினார்.
இதற்கு ஜெயவர்த்தனா ஆவேசத்துடன் பதில் அளித்தார். “திரிகோணமலையை தலைநகராகக் கொண்டு தனிநாடு அமைக்கப்போவதாக நீங்கள் பேசி வருகிறீர்கள். அதனால் பொதுமக்கள் (சிங்களர்கள்) ஆத்திரம் அடைகிறார்கள். சண்டை போட விரும்புகிறீர்களா? வாருங்கள், சண்டை போடுவோம்! சண்டை என்றால் சண்டை; சமாதானம் என்றால் சமாதானம்” என்றார், ஜெயவர்த்தனா.
இதைக்கேட்டு, சிங்கள ‘எம்.பி’க் கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
ஜெயவர்த்தனாவின் பேச்சு, எரிகிற தீயில் எண்ணை ஊற்றியது போலாயிற்று. தமிழர்கள் மீது தாக்குதல் அதிகமாயிற்று. பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். தமிழர்களின் வீடுகளும், கடைகளும் எரித்து சாம்பலாக்கப்பட்டன. 1977 ஆகஸ்ட் மாதம் நடந்த கலவரங்களில் 112 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 25 ஆயிரம் பேர் வீடு – வாசல் இழந்தனர். 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டன.
SHARE