தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை சென்.பெட்றிக்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக நேற்றிரவு 11.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் வேனில் பயணித்த 8 பேரில் 4 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு நுவரெலியா பகுதிக்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழும்பு கிரிபத்கொடை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வேனில் பயணித்த 8 பேரில் 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு ஏனைய 4 பேருக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என விசாரணைகளை மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.