வவுனியாவில் நேற்றைய தினம் அரசு சார்பான அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் கைத்தொலைபேசி மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் இன்று (7.10) மதியம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, பம்பைமடு கிராம அலுவலருக்கும் கற்பகபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பான செய்தியை வெளியிட்டமை தொடர்பாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான கோ. வசந்தரூபன் அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார். இது தொடர்பாகவே தனது உயிர்ப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று அவர் ஏனை இரு ஊடகவியலாளர்கள் சகிதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது,
இன்று (06) திங்கள் கிழமை மதியம் 1.03 மணியளவில் ஸ்ரீரெலோ கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் ஜனகனின் கைத்தொலைபேசியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
அதற்கு நான் பதில் அளித்த போது, ”உதயண்ண உங்களுடன் கதைக்கப் போறாராம்” எனக் கூறப்பட்டது. நானும் ஆம் கொடுங்கள் என்றேன்.
அப்போது கற்பகபுரம் தொடர்பான செய்தியை ஏன் அவ்வாறு வெளியிட்டாய்? கிராம அலுவலருடன் கதைத்தீர்களா? ‘இப்படியே வெளியிட்டால் ஆளே இல்லாமல் போகவேண்டி வரும்.’ நாங்க மறுப்புத் தந்தால் போடுவீங்களா? எனக்கூறி அச்சுறுத்தல் விடப்பட்டது எனத்தெரிவித்தார்.
சிறீலங்காவில் ஊடகப்பணியை செய்யும் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருகின்றனர். வெளிப்படையான இந்த கொலை அச்சுறுத்தல்களுக்கு ஊடக நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் வன்மையாக கண்டித்து குரல் எழுப்ப வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.