1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்தை ஆப்கானிஸ்தான் `திரில்’ வெற்றி

362
 

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

11வது உலகக்கிண்ண தொடரில் நியூசிலாந்தின் டுனிடின் நகரில் இன்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் முகமது நபி, களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணியில் மெக்லியாடு (0), கார்டினர் (5) ஏமாற்ற, கோட்ஜெர் (25), மக்கான் (31) சற்று தாக்குப்பிடித்தனர். அணித்தலைவர் மாம்சென் (23), பெர்ரிங்டன் (25), ஹக் (31), ஈவன்ஸ் (28) என, ஒருவரும் பெரியளவில் சொபிக்கவில்லை.

50 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 210 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜட்ரன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் எளிய இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு நவ்ரோஜ் மங்கள், ஜாவேத் அமகதி ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது.

நவ்ரோஜ் 3 ஓட்டங்கள் எடுத்த போது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 1000 ஓட்டங்களை எட்டினார். இவர் 7 ஓட்டங்களில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து அடுத்து வந்த ஸ்டானிக்ஜாய், 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

2 விக்கெட்டை மட்டும் இழந்து வலுவாக இருந்த ஆப்கானிஸ்தான், இதன் பின் திடீர் சரிவை சந்தித்தது. அரைசதம் அடித்த அகமதி (51) முதலில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து முகமது நபி (1), அப்சர் (0), நஜிபுல்லா (4), நெய்ப் (0) என, வரிசையாக ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற, 12 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை மொத்தமாக தாரை வார்த்து தடுமாறியது.

ஆப்கானிஸ்தான் அணி 27 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அந்த சமயம் தவ்லத் (2), ஷென்வாரி (25) களத்தில் இருந்தார்.

பின்னர் அணி 132 ஓட்டங்கள் எடுத்த போது தவ்லத் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹமிட் ஹாசன் உடன் ஜோடி சேர்ந்த ஷென்வாரி பொறுப்புடன் செயல்பட தொடங்கினார்.

96 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அவர் ஆட்டமிழந்தார். அப்போது அணி 192 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. பின்னர் பரபரப்பான சென்ற ஆட்டத்தில் ஹமிட் ஹாசன் (15), ஷாடர்ன் (12) கடைசி வரை இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய ஷென்வாரி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

SHARE