தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு தபால் அட்டை அனுப்புமாறு முற்போக்கு தமிழ் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அந்தக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – கடந்த சில தினங்களுக்கு முன்பாக வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மக்களின், பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடவில்லை. வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவோ, காணாமல் போனவர்கள் தொடர்பிலோ, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலோ எதனையும் அவர் கவனத்தில் எடுக்கவில்லை.
ஜனாதிபதியின் வடக்கு விஜயம் சலுகைக்கான விஜயம் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கான விஜயம் அல்ல. எமது கட்சியானது சிறை மீட்பு போராட்டம் எனும் தொனிப்பொருளில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் முதல் கட்டமாக கடந்த மாதம் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தி இருந்தோம். 2ம் கட்டமாக கடந்த வாரம் நல்லூர் ஆலய சூழலில் மூன்று நாள் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து இருந்தோம். தற்பொழுது மூன்றாம் கட்டமாக ஜனாதிபதி செயலகத்திற்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
தபால் அட்டையில் “தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்” என எழுதி ஜனாதிபதி செயலகத்திற்கு ஒரு இலட்சம் தபால் அட்டையை எமது கட்சி சார்பாக அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தபால் அட்டைகளை நாளை முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோருகின்றோம்.
இதேவேளை, தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள், உறுப்பினர்கள். நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள். மாவட்ட பிரஜைகள் குழுகள். அனைத்து தமிழ் பேசும் மக்களும் இந்த போராட்டத்தில் தாங்களுடைய உதவிகளை செய்ய வேண்டும் என்றும் நாம் முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு முழு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர் பார்க்கின்றோம்.
உங்களுடைய உதவிகள் கிடைக்கவிட்டால் எமது தமிழ் அரசியல் கைதிகளை நாம் சிறை மீட்க முடியாமல் போய் விடும். எனவே அரசியல் பேதங்கள் பாராமல் அனைவரும் போராடுவோம். மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரும்புகின்ற அனைவரும் ஜனாதிபதி செயலகத்திற்கு தபால் அட்டையை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுகின்றோம். – என்றார் அவர்