13வது அரசமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் சம்பந்தன் குழுவினர் இன்று டில்லி பயணம்! சனியன்று மோடியைச் சந்தித்து பேசுவர்!,

434
இன்று வியாழக்கிழமை பிற்பகல் புதுடில்லி செல்லும் எமது குழு, அங்கு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் தங்கி நின்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜ் மற்றும் பா.ஜ.க. அரசின் உயர்மட்டத் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.

13வது அரசமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் உட்படப் பல விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணைக்குழு மேற்கொண்டுவரும் விசாரணை குறித்தும் கூட்டமைப்புக் குழு இந்தியப் பிரதமருக்கு எடுத்து விளக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்திய மத்திய அரசின் அழைப்புக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான அக்கட்சியின் எம்.பிக்கள் குழு  இன்று வியாழக்கிழமை பிற்பகல் புதுடில்லி பயணமாகின்றது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் செல்கின்றனர்.

இந்தப் பயணம் தொடர்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தவை வருமாறு:-

இன்று வியாழக்கிழமை பிற்பகல் புதுடில்லி செல்லும் எமது குழு, அங்கு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் தங்கி நின்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜ் மற்றும் பா.ஜ.க. அரசின் உயர்மட்டத் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.

வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சரையும், மறுநாள் சனிக்கிழமை முற்பகல்10.30 மணிக்கு இந்தியப் பிரதமரையும் எமது குழு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

இந்தப் பேச்சின்போது 13வது அரசமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதற்கப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாணசபையை முறையாக இயங்கவிடாமல் மத்திய அரசு போடும் முட்டுக்கட்டைகள், வடக்கு, கிழக்கில் அரச படைகளின் ஆக்கிரமிப்பால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட முக்கிய பல விடயங்கள் குறித்தும் மோடி தலைமையிலான இந்திய அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது” – என்றனர்.

கடந்த மே மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுடன் மோடி உத்தியோகபூர்வமாக பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போது பேசப்பட்ட எவையும் மஹிந்தவால் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் மோடியின் கவனத்திற்குக் நாம் கொண்டு வருவோம் என்றும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கூறினர்.

 

SHARE