19ஆவது அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன?

446

 

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது ஜனநாயகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக் கொண்டு விட்டன என்பதற்கு இந்த குதூகலிப்புக்கள் சான்று பகிர்கின்றன. 19ஆம் திருத்தம் சாதிக்க விளைந்த முக்கியமான இரண்டு விடயங்களைப் பற்றி மட்டுமே இந்தப் பத்தி கவனம் செலுத்துகின்றது. ஒன்று – ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல். இரண்டு – சுயாதீனமாகப் பொதுத் தாபனங்கள் மற்றும் நீதித்துறை இயங்குவதற்குரிய ஏற்பாடுகளைக் கொண்டுவரல்.

18ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலங்களை வரையறை அற்றதாக்கிய மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியலமைப்புத் தலையீட்டை செயலற்றதாக்கி மீண்டும் இரண்டு பதவிக் காலங்களுக்கு மட்டுமே ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்க முடியும் என 19ஆவது திருத்தம் 1978இல் பழைய ஏற்பாடுகளை மீளக் கொண்டு வந்துள்ளது. இதனைத் தவிர 19ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பெரிதளவில் குறைத்திருக்கின்றது என்று சொல்லுவதற்கு இல்லை என்பதே எனது கருத்து.

19ஆவது திருத்தத்தின் முதல் வரைபுகளில் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பிரதமர் பிரயோகிப்பதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால், இவற்றை நிறைவேற்றுவதற்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்பளித்திருந்ததால் இந்தப் பிரிவுகளும் இறுதியில் திருத்தத்தில் இடம்பெறவில்லை.

ஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்கும் போது பிரதமரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி 19ஆம் திருத்தத்தில் இடம் பிடித்திருக்கின்றது. இது ஆரம்பத்தில் மஹிந்த சார்பு சுதந்திரக் கட்சியால் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் இறுதி வரைபில் இடம்பெறுவதற்கு அனுமதித்திருக்கிறார்கள். இலங்கையின் அரசியலமைப்பு மரபில் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் அதிகாரம் குறைந்த ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுச் செயற்பட வேண்டும் என்ற வாசகத்திற்கு பெரியளவில் மதிப்பில்லை. உதாரணமாக, மாகாண சபைகளைக் கலந்தாலோசித்தே அரச காணிகளைப் பகிர வேண்டும் என்று 13ஆம் திருத்தம் சொல்கின்றது. ஆனால், இந்தப் பிரிவு மதிக்கப்படுவதில்லை. ஆலோசனை கேட்டாலும் ஆலோசனை வழங்கியவரின் பேச்சுப்படி நடக்க வேண்டியதில்லை என்பது தான் இலங்கையின் அரசியலமைப்பு மரபாக இருக்கின்றது. நேரடியாக ஜனாதிபதி தெரிந்தெடுக்கப்படுவதாலும் நிறைவேற்றுத் துறை அதிகாரங்களின் உறைவிடமாக அரசியலமைப்பு ஜனாதிபதியை இனங்காணுவதாலும் பிரதமரின் ஆலோசனையை ஜனாதிபதி எவ்வளவு தூரம் கேட்டு நடக்க வேண்டும் என்ற அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சந்தேகப்படுவதற்கு காரணங்கள் உண்டு. ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்ற வேளையில் ஜனாதிபதி ஒத்துழைக்க தீர்மானித்தால் அன்றி ஜனாதிபதியின் அதிகாரங்களை இந்த பிரதமரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்ற விதி குறைக்காது என்றே தோன்றுகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியினராக இருந்தால் ஆலோசனை கேட்டல் என்ற பிரச்சினை எழாது.

19ஆவது திருத்தம் மூலம் பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவருக்கெதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர முடியாதென்ற நிலை 19ஆவது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்த வரையில் இந்த ஒரு விடயத்தைத் தவிர 19ஆவது திருத்தம் செய்திருப்பதெல்லாம் மஹிந்த ராஜபக்‌ஷவின் 18ஆம் திருத்தம் மூலமான அரசியலமைப்புத் தாக்கத்தை நீக்கி மீண்டும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மூல அரசியலமைப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளமையே அன்றி அடிப்படையில் 1978 அரசியலமைப்பிலோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலோ பெரிதளவில் 19ஆவது திருத்தம் தாக்கம் செலுத்தாது. ஆகவே, 18ஆவது திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு 1978இல் மூல அரசியலமைப்பில் இருந்த ஜனாதிபதி இப்போது மீள நிலை நிறுத்தப்பட்டிருகிறார். 18ஆவது திருத்தத்தை மஹிந்த ராஜபக்‌ஷ கொண்டு வருவதற்கு முன்னரே ஜனாதிபதி முறை மோசமான முறைமையாக அடையாளங் காணப்பட்டிருந்தமையை நாம் மறந்து விடக் கூடாது. இந்த நாட்டில் ஜனநாயக அரசியல் இல்லாமைக்குக் காரணம் மஹிந்த ராஜபக்‌ஷதான் என்று பார்ப்பது அரசியல் மறதியோடு கூடிய குறுங்காலச் சிந்தனைக் குறைபாடு எனக் கருதுகிறேன்.

19ஆவது திருத்த்தைக் கொண்டுவந்தவர்களது மற்றுமொரு முக்கிய நோக்கம் 2001இல் 17ஆம் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு அவையை மீள்கொணரல். இந்த அரசியலமைப்பு அவையின் உருவாக்கமானது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட ஒரு காத்திரமான முயற்சியாகும். ஜனாதிபதியின் நியமன அதிகாரங்களில் பலவற்றை ஜனாதிபதியிடமிருந்து எடுத்து பல்வேறு கட்சிகளும் சேர்ந்து நியமிக்கும் நிபுணர்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு அவையிடம் இந்த அதிகாரங்களை வழங்குவதே 17ஆம் திருத்தத்தின் சாரம். இந்த ஏற்பாடு ஜே.வி.பி. – பொது சன ஐக்கிய முன்னணி கூட்டாட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைச் செயலிழக்கச் செய்வதில் பெரும் பங்காற்றியவர் இன்று பலராலும் நல்லாட்சிக்கான உறைவிடமாகக் கருதப்படும் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்திலேயே என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். ஓர் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக ஒதுக்கிச் செயற்பட்டார் சந்திரிக்கா. அரசியலமைப்புக்கு உண்மையில் இலங்கை அரசியலில் இருக்கும் மதிப்பு அவ்வளவு தான். 13, 17ஆம் திருத்தங்களை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இலகுவில் முழுமையாக ஒதுக்கி செயற்படக் கூடியதாகவிருந்தமை, (இருக்கின்றமை) இலங்கையை அரசியலமைப்பு ஜனநாயகமா கருதலாமா என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கை வெறுமனே ஒரு தேர்தல் ஜனநாயகம் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. சந்திரிக்கா அம்மையாரின் இந்த அணுகுமுறையை அவர் வழி பின்பற்றி பின்னர் 17ஆவது திருத்தத்தை 18ஆவது திருத்தத்தின் மூலம் முற்றாக ஒழித்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. 19ஆவது திருத்தத்தின் மூலம் இந்த அரசியலமைப்புச் சபையை மீளக் கொண்டுவருவதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இவ்விடயத்தில் மஹிந்த சார்பு சுதந்திரக் கட்சியினர் நாடாளுமன்றிற்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படும் நிபுணர்களிடம் இந்த அதிகாரங்களை வழங்குவதை எதிர்த்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசியலமைப்பு அவையில் இருக்க வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தனர். இந்த அழுத்தத்திற்கு விட்டுக்கொடுத்து அரசியலமைப்பு அவையில் 10இல் 7 உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் வண்ணம் 19ஆவது திருத்தத்தின் அரசியலமைப்பு அவை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது ஜனாதிபதியிடமிருந்த நியமன அதிகாரங்களை தற்போது நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது. முடிவில் 17ஆம் திருத்த அரசியலமைப்பு அவையும் 19ஆவது திருத்த அரசியலமைப்பு அவையும் முற்றிலும் வேறுபட்டவை என்பதே உண்மை. கட்சி அரசியல் சார்பற்ற நியமன முறையை முக்கிய ஆணைக்குழுக்களும் நீதித்துறைக்கும் செய்யும் முயற்சி தோல்வியடைந்து விட்டதென்றே கூற வேண்டும்.

சிறுபான்மை அரசொன்று விட்டுக்கொடுப்புக்களின்றி 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றியிருக்க முடியாது என்று கூறப்படுகின்றது. ஆனால், மாற்றுபாயமொன்று இருந்தது. 2ஆம் வாசிப்பின் மீதான 2/3 பெரும்பான்மையுடனான வாக்களிப்போடு நாடாளுமன்றைக் கலைத்துவிட்டு 3ஆம் வாசிப்பினைப் புதிய நாடாளுமன்றின் மூலம் நிறைவேற்றியிருக்கலாம். திருத்தங்கள் செய்யப்பட்டது குழுநிலை வாதத்தின் போதே. இரண்டாம் வாசிப்பின் போது திருத்தப்படாத 19ஆவது திருத்தத்தின் மீதே வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. ஆனால், இதனை சிறிசேனவோ ரணிலோ செய்ய விரும்பவில்லை.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களைக் குறைப்பேன், சுயாதீன பொது ஆணைக்குழுக்களின் இயங்குதலை உறுதிப்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை கொண்டு வருவேன்” என்பது தான் மைத்திரிபால சிறிசேனவின் பிரதான தேர்தல் கோஷமாக இருந்தது. ஆனால், உண்மையில் மக்கள் சிறிசேனவுக்கு வாக்களித்தது குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரத்தான். அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் பெரிதாக வாக்காளர்கள் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. எனினும், 19ஆவது திருத்தத்தை கொண்டு வருவதாக உறுதியளித்திருந்த சிறிசேனவுக்கு இத்திருத்தத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றுவது அவரது அரசியல் ஆளுமைக்கு முக்கிய சோதனையாக கருதப்பட்டது. 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றாமல் 100 நாள் திட்டம் முழுமையான தோல்வி கண்டுவிட்டது என்ற நிலையிலிருந்து பொதுத் தேர்தலைச் சந்திக்க ரணில் விக்கிரமசிங்கவும் விரும்பவில்லை. ஆகவே, எப்பாடுபட்டேனும் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது என்ற முடிவுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் இணங்கியிருந்தனர்.

இதற்காகத்தான் பல விட்டுக்கொடுப்புக்கள் செய்யப்பட்டிருந்தன. மேலே சொல்லப்பட்ட விட்டுக்கொடுப்புக்களுக்கு மேலதிகமாக 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற உதவினால் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பிலான 20ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர அனுமதிப்பேன் என்று சிறிசேன சுதந்திரக் கட்சிக்கும் ஹெல உறுமயவிற்கும் கொடுத்த வாக்குறுதி ஆபத்தானவோர் விட்டுக்கொடுப்பு. தேர்தல் மறுசீரமைப்பை சுதந்திரக் கட்சி மற்றும் ஹெல உறுமய வலியுறுத்தி வருவதற்கான காரணங்களை முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். 20ஆவது திருத்த வரைபு முற்று முழுதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் வரையப்பட்ட ஒன்றாகும். அந்த வரைபையே அமைச்சரவையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என அறியக்கிடைக்கின்றது. இவ்வரைபானது கூடுதலாக தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மேலோங்கும் ஒரு கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப் பார்க்கிறது. எண்ணிக்கையில் குறைவான சமூகங்களுக்கு இத்தேர்தல் முறை பாதகமாக இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி இத்திருத்தத்தை நிறைவேற்றாமல் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமென விரும்புகின்றது. சிறிசேன கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே முயற்சிப்பார் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், 19ஆவது திருத்தத்தைத் தனது கட்சியினர் நிறைவேற்ற போட்ட முட்டுக்கட்டைகளால் அவர் ஆத்திரமடைந்திருக்கக் கூடும். அதேவேளை, சுதந்திரக் கட்சி பிளவுபட்டிருக்கும் போது தேர்தலுக்குப் போக அவர் விரும்ப மாட்டார் என்றே தோன்றுகின்றது. தேர்தலை செப்டெம்பரில் ஜெனிவா அறிக்கை வருவதற்கு முதல் நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதில் சிறிசேன, ரணில், மேற்குலகம், இந்தியா விரும்புவதால் விரைவில் தேர்தல் வருவது உறுதி.

இறுதியாக ஒரு விடயம். மங்கள் சமரவீர 19ஆவது திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் 3ஆவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டு வருவோம் என்றும், இனப் பிரச்சனைக்கு அவ்வரசியலமைப்பு தீர்வு காணும் எனவும் கூறியுள்ளார். ஐ.தே.க. தமக்கு அரசியல் தீர்வு காண்பதில் உண்மையான அக்கறை உள்ளதை வெளிப்படுத்த ஒரு வழியண்டு. ஒற்றையாட்சியல்லாத அரசியலமைப்பு முறையொன்றை ஆட்சியமைத்தால் ஐ.தே.க. அரசியற் தீர்வாக முன் வைக்குமென சிங்கள் மக்கள் முன் தேர்தல் விஞ்ஞாபனம் முன் வைத்து வெற்றி பெற்று வர வேண்டும். தமிழ் மக்களுக்கு இந்த 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட வகைமுறை கூறும் செய்தியொன்று உண்டு. நல்லாட்சிக்கான நிறுவன மறுசீரமைப்பிற்கே தென்னிலங்கை அரசியல் காட்டும் முதிர்ச்சி இது தான் என்றால், வெளித் தலையீடின்றி தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றல் தென்னிலங்கை அரசியலுக்கு இப்போதைக்கு கிடையாது என்பதே அது.

குமாரவடிவேல் குருபரன்

 

SHARE