1915 சிங்கள – முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைகளின் பின்னணி அன்றும் இன்றும்

450

 

1915 சிங்கள – முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைகளின் பின்னணி அன்றும் இன்றும்

1915 சிங்கள – முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைகளின் பின்னணி அன்றும் இன்றும்

யார் உங்களை அடித்தது..?
சிங்களவர்கள்….!
யார் உங்களைப் பாதுகாத்தது..??
அதுவும் சிங்களவர்கள்…..!
உங்களை அடிக்கவும் பாதுகாக்கவும் சிங்களவர்களுக்கு முடியும்.

இன்று இந்த நாட்டில் அரசியல் கேலிக் கூத்துக்களை அடிக்கடி சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒர் மைய நிலையம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகம் சிரிகொத்த. 1983ம் ஆண்டு செப்தெம்பர் 05ம் திகதி இதே இடத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் அப்போதய முக்கியஸ்தரும் அமைச்சருமான காமினி திசாநாயக்க தமிழ் மக்களை விளித்து அன்று மேற்கண்டவாறு அங்கு பேசி இருந்தார்.

சிரில் மெத்தியூ இந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கெதிராகப் போர்க் கொடிபிடித்த மற்றுமோர் முக்கியஸ்தர். ஐக்கிய தேசியக் கட்சி அரசின் முக்கிய அமைச்சராகவும், அதன் தொழிற் சங்கமான ஜதிக சேவக்க சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். ‘சிங்களவர்களின் விரைவான எதிரி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் இந்நாட்டு சிங்கள வர்த்தகர்களின் பொருளாதார அபிலாசைகள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நூலை மிக நிதானமாக படிக்கின்ற ஒருவருக்கு இந்த நாட்டில் பௌத்த கலாச்சாரத்திற்கும் அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் எதிராக தமிழ் சக்திகள் வேகமாக முன்னேறி வருகின்றார்கள். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில் நாட்டில் சமாதானம் நிலவும் என்று குறிப்பிடுவதில் எந்த விதமான அர்தமும் கிடையாது என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இது 1983 ஜூலை வன்முறைக்கு சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு.

1983ல் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறையில் தலை நகர் உட்பட நாட்டின் தென் பகுதியிலுள்ள அனைத்து தமிழர்களின் உடமைகளும் வன்முறைக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டு கொழுத்தப்பட்டது. அன்று வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தங்கி இருந்த வீடும் எறிக்கப்பட்டது. அந்த வீடு இந்தியர் ஒருவருக்குச் சொந்தமானது. ஆனால் வீரகேசரிப் பத்திரிகைக்காரியாலக் கட்டிடம் தாக்குதலில் இருந்து தப்பிக் கொண்டது. அது ஏன்? குறிப்பிட்ட கட்டிடம் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் பிறந்த இடம் என்பதனால் அது விட்டு வைக்கப்பட்டது. இப்படி ஒரு காரணத்தை முன்வைக்கின்றார். எம்.எஸ்.வெங்டாசலம் ‘இலங்கையின் இன அழிப்பு’ என்ற தனது நூலில்.

எனவே 1983 வன்முறையை நெறிப்படுத்தியதில் ஆளும் தரப்பு முக்கிய புள்ளிகள் சூத்திரதாரிகளாக இருந்திருக்கின்றார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபனமாகின்றது. புகழ் பெற்ற யாழ் நூலகத்தை எறித்து சம்பலாக்குவதற்கு கொழும்பிலிருந்து வன்முறையாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பது இதற்கு நல்லதொரு சாட்சி.

1983 ஆண்டு ஜூலை வன்முறைக்கு சரியாக 13 நாட்களுக்கு முன்னர் லண்டன் டெலி கிராப் பத்திரிகையின் இயன் வோட் என்றவருடன் நடாத்திய கலந்துரையாடலில் யாழ் மக்களின் அபிப்பிராயங்கள் தொடர்பாக நான் தற்போது கவலைப்பட மாட்டேன். இப்போது அவர்களைப் பற்றிச் சிந்திக்க எங்களுக்கு முடியாது. வடக்கிற்கு அதிகமாக அலுத்தங்கள் கொடுப்பதற்கும் இங்குள்ள சிங்களவர்கள் விரும்புகின்றார்கள். உண்மையைச் சொன்னால் தமிழ் மக்களை பட்டினியில் போடுவதானால் இங்குள்ள சிங்களவர்கள் அதனைப் பெரிதும் விரும்புவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் அப்போதய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனா என்பது அவதானிக்கத் தக்கது.

மேற் சொன்னவை நமது காலத்து வன்முறை. நாம் நேரில் பார்த்த காட்சிகள். இந்த நாட்டு வரலாற்றில் நிகழ்ந்த முதல் இனக்கலவரமாக 1915 சம்பவம் பதிவாகி இருக்கின்றது. இது அன்று முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான இன மோதல். இது பிரித்தானிய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த சம்பவம். இது முற்றிலும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் வர்த்தகத்தில் செலுத்துகின்ற மேலாதிக்கம் தொடர்பான சிங்களவர்களின் காட்புணர்ச்சி தொடர்பான கதை. அது தொடர்பான வரலாற்றுப் பதிவுகளை இப்போது சற்றுப் பார்ப்போம்.

கம்பலை வல்லாகொட பௌத்த விகாரையின் நிருவாகிகள் போய தினத்தில் ஏற்பாடு செய்திருந்த பௌத்தர்களின் பெரஹர ஊர்வலமொன்று கண்டி காசல் வீதி வழியாகப் போய்க் கொண்டிருந்த சமயம் வீதியில் அமைந்திருந்த பள்ளிவாயில் முன்னால் பெரஹர செல்கின்ற போது மத்தள ஓசை எழுப்புவது தொடர்பான சர்ச்சை எழுந்தது.

முஸ்லிம்கள் ஓசை எழுப்பக்கூடாது என்றார்கள். இது பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடு. எங்களுக்கு இந்த விழாவை சம்பிரதாயப்படி முன்னெடுக்க உரிமை இருக்கின்றது. இது பெரஹர வைபவத்தை ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில் வாதம். இரு தரப்பும் விட்டுக் கொடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் மேளதாளங்களுடன் பெரஹர நகரத்துவங்கியது. இந்த நேரத்தில் ஒழுங்கையிலிருந்து எவரோ பெரஹர ஊர்வலம் மீது கல்லெறிந்து விட்டார்கள். மனிதர்களின் மரணங்களுக்கு ஏதோ காரணங்கள் சொல்லப்படுவது போல் வன்முறைக்கு காரணமாக இது அமைந்திருந்தது.

துழரசயெட ழக யுளயைn ளுவரனநைள என்ற சஞ்சிகையில் பீ.டி.எம்.பர்னாந்து என்பவர் முஸ்லிம்கள் தொடர்பான சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட கருத்துக்கள் அன்று மிகவும் மோசமாக அமைந்திருந்தது. முஸ்லிம்கள் அதிக வட்டிக்குப் பணம் வழங்கி சிங்களவர்களுடைய சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள், அவர்கள் அன்னியர்கள். சிங்கள யுவதிகளை ஏமாற்றுவதை அவர்கள் உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை சிங்களவர்கள் உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்காக இவர்கள் வேண்டும் என்றே தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்றெல்லாம் அன்று முஸ்லிம்கள் மீது சிங்கள மக்கள் மத்தியில் கதை பரப்பப் பட்டிருந்து என்று பர்னாந்து தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்சொன்ன கதைகள்தான் வன்முறைக்கு பின்னணியாக இருந்தாலும் கண்டியச் சம்பவம் வன்முறைக்கு உடனடிக் காரணமாக அமைந்திருந்தது. வன்முறை தொடர்பான பதிவுகளின் படி முஸ்லிம்கள் தரப்பில் கொலைகள் 25 காயப்பட்டவர்கள் 189 சோதமாக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாயில்கள் 17 வன்முறையின் பிரதான இலக்காக முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்கள் அமைந்திருந்தன. அதன்படி கொள்ளையடிக்கப்பட்ட கடைகள் 4055. தீயிட்டுக் கொழுத்தப்பட்ட கடைகளின் எண்ணிக்கை 250.

பேரசிரியர் குமாரி ஜெயவர்தனவின் கட்டுரையொன்றின் படி 1915 வன்முறைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்த மறுமலர்ச்சி அன்று நாட்டில் இருந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருப்பதைவிட இதன் இலக்கு சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களின் வர்த்தக ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

இந்த வன்முறை மற்றும் கொள்ளையடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பாமர மக்களாக இருக்கவில்லை அக் காலத்தில் இருந்த தொழிற்சங்கமொன்றின் முக்கிய நிருவாகிகள் வன்முறைக்குத் தலைமை தாங்கினார்கள். என்று பேரசிரியர் குமாரி ஜெயவர்தன தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

1915 கலவரத்திற்கு கெப்டன் ஹென்ரி பேதிரிஸ் என்பவர் முக்கிய பங்காளியாக கொழும்பில் செலாற்றி இருக்கின்றார். இவருடைய உறவினர்கள் பெரும் வர்த்தகப் புள்ளிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அன்று முஸ்லிம்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு முக்கிய காரணமாக இருந்தது சிங்கள வர்த்தகர்களின் அரசியலாக இருந்தது. குறிப்பாக தென்னிலங்கை சிங்கள வர்த்தகர்களே இந்த வன்முறையின் பின்னணி இருந்தார்கள் என்பது தெளிவாக இருந்தது. 1956ல் இதே வர்த்தகர்கள் கூட்டம் எஸ்.டப்லியு.ஆர்.டி.பாண்டாரநாயக்காவை ஆதரிப்பதன் மூலம் தமது வர்த்தக மேலாதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்த்தது. என்றாலும் குறுகிய காலத்தில் பண்டாரநாயக்காவின் அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றதனால் அவர்களுக்கு அது ஏமாற்றமாக அமைந்து விட்டது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை வர்த்தகத்துறையில் மந்த போக்கை ஏற்படுத்தியதனால் சிங்கள வர்த்தகர்கள் மட்டுமல்லாது ஏனைய சமூக வர்த்தகர்களுக்கு அக்காலப் பகுதி சாதகமாக அமையவில்லை.

இதனால் ஜே.ஆர்.ஜெயவர்தன பக்கம் இவர்களின் கவனம் திரும்பியது தேர்தல்களில் இந்த பேரின வர்த்தக சமூகம் ஜே.ஆர்.ஜெயவர்தனாவை ஆதரித்தது. திறந்த வர்த்தக் கொள்கை காரணமாக கதவுகள் திறந்திருந்ததால் சிங்கள வர்த்தகர்கள் மட்டுமல்லாமல் சிறுபான்மை வர்த்தகர்களும் அதன் நன்மைகளை அடைந்து கொள்ள முடிந்தது. ஒட்டு மொத்தமாக இந்த நாட்டு வர்த்தகம் தமது கரங்களுக்கு வரவேண்டும் என்று பேரின வர்த்தக சமூகம் கருதுவதனால். தமது நோக்கங்கள் நிறைவடையாத சந்தர்ப்பங்களில் நாட்டில் வன்முறைகளை சிறுபான்மையினருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடுக்கின்றனர். 1915,1979,1983களின் வன்முறைகளின் பின்னணியில் இந்த நாட்டில் வர்த்தகத்தில் தனி ஆதிக்கம் எதிர்பார்க்கின்ற பெரும்பான்மை வியாபாரிகள்தான் இருந்திருக்கின்றார்கள்.

எனவே இன்று இராணுவரீதியில் இந்த நாட்டு தமிழ் சமூகத்தின் முதுகெழும்பு முறிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் தற்போதய கவனம் முஸ்லிம்கள் மீது திரும்பி இருக்கின்றது. எனவே ஹலால் என்ற இசு தற்போது நாட்டில் பரபரப்பான கருப் பொருளாக மாறி இருக்கின்றது.

இது தொடர்பாக மங்கள சமரவீர பொது பல சேனாவின் நடவடிக்கைகளின் பின்னணியில் அரசு இருக்கின்றது என்று பகிரங்கமாகப் பேசி இருக்கின்றார். அத்துடன் பொது பல சேனா இது தொடர்பாக தம்முடன் நேரடி விவாதமொன்றில் கலந்த தமது கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு அகில இலங்கை ஜம்மித்துல் உலமாவுக்கு தொடர்ச்சியாக விடுக்கின்ற பகிரங்க அழைப்பு முன்னே அவர்கள் தலைமறைவாக இருந்து, அவ்வப்போது நடக்கின்ற விவாதங்களுக்கு தலைகால் புரியாதவர்களை ஆஜர் படுத்தி வாங்கிக் கட்டுவது ஏன் என்று புரியாமல் இருக்கின்றது.

கடைசியாக நடந்த விவாதமொன்றில் பொது பல சேனா குருமாரிடம் எங்கள் குருவே எங்கள் குருவே… என்று அவர்களிடத்தில் மண்டியிட்டு கேள்விகளுக்கு பதில் சொல்ல முற்படுவதும். இப்போதுதான் நீங்கள் காட்டுகின்ற ஜம்மியத்துல் உலமா சபையினரின் வெளியீடுகளை நாங்கள் பார்க்கின்றோம். அடுத்த முறை இது பற்றி கேட்டு வந்து உங்களுக்குப் பதில் சொல்லுகின்றோம் என்று அவர்களிடத்தில் சரணாகதி அடைந்து விடுகின்றனர்.

இந்த விடயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் வந்து பதில் சொல்லிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள சந்தர்ப்பங்கள் இருக்கின்ற போது எதற்காக கால தாமதம். மேலும் தற்போது உலமாக்களே இந்த விவகாரம் தேவையில்லாததொன்று ஒரு முஸ்லிமுக்கு ஹலாலையும் ஹராத்தையும் புரிந்து கொள்ள முடியுமாக இருக்கின்றபோது இந்த ஹலால் விவகாரம் வீண் பிரச்சினை ஏற்படுத்துகின்றது என்று குற்றம் சாட்டப்படுகின்றது.

மேலும் அந்த விவாதத்தில் தன்னை ஒரு ஊடக்காரர் என்று சொல்லிக் கொண்ட பிரமுகர் சிங்களப் பெண்களை மன முடித்த முஸ்லிம்கள் பௌத்தர்களாக தமது பிரதேசத்தில் வாழ்வதாகவும் வேண்டுமானால் அவர்களிடத்திற்கு பொது பல சேனா அமைப்பினரை அழைத்துச் சென்று காண்ப்பிப்பதாகவும் சொல்லி இருந்தார். அழைப்பையும் பொது பல சேனா நிருவாகிகள் ஏற்றிருக்கின்றார்கள். பௌத்தர்களாக வாழ்கின்றவர்களை முஸ்லிமாக இஸ்லாத்தின் அடிப்படையில் எப்படி நியாயப்படுத்த முடியும்-காட்சிப் படுத்த முடியும். பொது பல சேனாவிடத்தில் புள்ளிகளை வாங்குவதற்காக உதிர்க்கின்ற வார்த்தைகள், நெழிவுகள் எல்லாம் முஸ்லிம்களை ஒரு போதும் காப்பற்ற மாட்டாது அவர்களின் கேள்விகளுக்கு மூன்றாம் தரப்பு பதில் சொல்லி மாட்டிக் கொள்வதைவிட சம்மந்தப்பட்டவர்களே இதற்கு பதில் சொல்லி புரியவைக்க வேண்டும். பொது பல சேனாவுடன் போய் பேசுங்கள் என்று தானே ஜனாதிபதியும் ஆலோசனை கூறி இருக்கின்றார்.

பௌத்தம் மீது முஸ்லிம்களின் மேலாதிக்கம் தொடர்பாக தமது அமைப்பு விரைவில் நீதி மன்றம் செல்ல இருப்பதாக பொது பல சேன அமைப்பின் பொதுச் செலாளர் கலபொடஅத்த ஞனசாரத் தேரர் கூறி இருக்கின்றார். அத்துடன் ஆங்காங்கு முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளுக்கு தமது அமைப்பால் பெறுப்புக்கூற முடியாது பாதிக்கப்பட்ட பிரிவினர் அப்படி நடந்து கொள்வதும் தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை அமைந்திருக்கின்றது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்ற நிறுவனத்தின் மீது தொடர்ச்சியாக பல பாரதூரமான குற்றச் சாட்டுக்களை பொது பல சேனா அமைப்பினர் முன்வைக்கின்றனர். அது பணம் மோசடி, ஆயுத குழு போன்ற விடயங்கள். எனவே ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனத்தின் மீது இப்படியான குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு அதற்கு முழு சமுதாயமும் அவப்பேர் வாங்குவதை விட இது விடயத்தில் தம்மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றது என்றால் அந்த நிறுவனம் நீதி மன்றத்தின் உதவியை நாடி இந்த பிரசாரகர்கள் மீது நடடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று கேட்கத் தோன்றுகின்றது.

ஜெனிவாவுக்குப் போய் வாதம் புரிந்த நமது உலமா சபைத் தலைவருக்கு பொது பல சேனா என்ன பெரிய சவாலாகவா இருக்கப் போகின்றது. நாம் இப்படிச் சொன்னாலும் பொது பல சேனாவின் இலக்கு ஹலால் மட்டுமல்ல முஸ்லிம்களின் வர்த்தகப் பகிஸ்கரிப்பு, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் முஸ்லிப் பள்ளிவாயில்கள் முஸ்லிம்களின் உடமைகள் என்பதனை நமது உலமாக்கள் (குருமார்) மற்றும் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும் எனவே 1915 கலவரங்களின் பின்னணி சிங்கள மக்கள் மத்தியில் 2013ம் வருடத்தில் அதாவது 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரே விதமாக கருக்கட்டி இருக்கின்றது என்பதனை தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

SHARE