தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் கல்வி கற்று மேன் மக்களாக விளங்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.
அக்காலகட்டத்தில் பாடசாலைகள் குறைவு. இருந்த சில நல்ல பாடசாலைகளும் அரச குடும்பத்தினரையும் பெரிய பணக்காரக் குழந்தைகளையுமே அனுமதித்தன. எனவே, வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்களை கல்வி கற்பதற்காக மலேசியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார்கள். அப்பொழுது எமது கதாநாயகன் செல்வநாயகத்திற்கு வயது நான்கு. தனது இரண்டு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் மலேசியாவிலிருந்து கொழும்புக்கு கப்பலில் வந்திறங்கினான் பாலகன் செல்வநாயகம். அப்போது கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படாமையினால் மீண்டும் கப்பலிலேயே காங்கேசன்துறைக்கு வந்து தமது சொந்த ஊரான தெல் லிப்பழைக்கு வந்தார். அங்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இந்த அமெரிக்க மிஷன் பாடசாலை தான் பின்பு யூனியன் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட் டது கவனத்திற்குரியதாகும். சிறு வயதிலே செல்வநாயகம் பெண் வேடம் பூண்டு நாடகங்களில் நடித்தாராம்.
ஐந்தாம் வகுப்பிற்குப் பின்னர் செல்வநாயகம் யாழ்ப்பாணம் சென்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து சீனியர் கேம்பிரிட்ஜ் பரீட்சைக்குப் படிக்கத் தொடங்கினார். பின்னர் மாமனார் எஸ்.கே. பொன்னுசாமியின் உதவியுடன் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியில் சேர்ந்து தமது கல்வியைத் தொடர்ந்தார்.
சென். தோமஸ் கல்லூரியில் ஏறத்தாழ ஒன்றரை வருட காலம் கல்வி கற்று இன்டர்சயன்ஸ் பரீட்சையில் தேறிய செல்வநாயகம் தனது தம்பிமாரைப் படிப்பிப்பதற்காக 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
ஆசிரியராக இருந்துகொண்டே இலண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.ஸி. விஞ்ஞானப் பட்டப் பரீட்சைக்கு வெளிவாரி மாண வனாகத் தோற்றி அடுத்த ஆண்டே அதாவது, 1918இல் சித்தி எய்தினார்.
இத்தருணத்தில் மலேசியாவிலிருந்த அவரது தந்தையார் சுகவீனமுற்றிருந்தமையால் அவரைப் பார்க்க மலேசியா சென்று சுமார் ஒரு மாதம் வரை தங்கியிருந்து மீண்டும் திரும்பினார். ஆனால், என்ன பரிதாபம்! செல்வநாயகம் இலங்கை திரும்பி வந்த ஓரிரு வாரங்களிலேயே அன்னாரது தந்தையார் மலேசியாவில் காலமானார்.
அதனால் குடும்பப் பொறுப்பு அனைத்தும் இளைஞரான செல்வநாயகத்தின் மேல் சுமத்தப்பட்டது. தமது பிற்காலத்தில் இலங்கைத் தமிழினத்தின் பொறுப்பெல்லாவற்றையும் சிரமேற் கொண்ட தமிழ்த் தந்தைக்கு தந்தையில்லாத குடும்பத்தின் பொறுப்பைச் சுமப்பதா பெரிய காயம்! இரண்டு தம்பிமாரையும், அருமைத் தங்கையையும் அரவணைத்துக் கொண்டு கொழும்பு சென்ற்.தோமஸ் கல்லூரியில் தமது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார்.
எனினும், அன்னாருக்கு சோதனை தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் அவரது இளைய சகோதரருக்கு கடும் சுகவீனம்.
அவரைப் பார்ப்பதற்கு தெல்லிப்பழை செல்ல லீவு கேட்டார், லீவு மறுக்கப்பட்டது. ஆசிரியர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தெல்லிப்பழைக்குச் சென்றார்.
தம்பியை நன்கு பராமரித்தும் என் செய்வது? பலனில்லாமல் போய்விட்டது. அருமைத்தம்பி இராஜசுந்தரம் தமது பதினைந் தாவது வயதில் காலமானார்.
தம்பியின் இறுதிச் சடங்கு முடிந்து மீண்டும் கொழும்பு வந்த செல்வநாயகம், வெஸ்லி கல்லூரியில் ஆசிரியரானார். எஸ்.ஜே.வி. ஆசிரியனாக இருந்த காலத்தில் ~நல்லாசிரியன்| என்ற பெயரை பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் பெற்றார். பிற்காலத்தில் நல்ல, நேர்மையான சட்டத்தரணி என்று பெயரும் புகழும் பெற்றாரோ, அரசியலில் நுழைந்த பின்னர் எவ்வாறு உலக மக்கள் அனைவராலும் தமிழ் பேசும் மக்களின் தன்னிகரில்லாத் தலைவன் என்றும், நேர்மையான அரசியல்வாதி என்றும் பெயரும் புகழும் பெற்றாரோ அதே போல அவர் நல்லாசிரியன் என்று பெயரும் புகழும் பெற்றதில் எவ்வித ஆச்சரியமும் இருக்க முடியாது என்பது திண்ணம்.
அந்தக் காலத்தில் செல்வா ஆசிரியராக உலா வந்தபோது அன்னாரது நடை, உடை, பாவனையைப் பின்பற்றிய மாணவர்கள் பலர். அதிகம் ஏன்? அவரது நடு உச்சி தலைவாரும் பழக்கத்தைக் கூட வெஸ்லிக் கல்லூரி மாணவர்கள் கொண்டிருந்தார்கள் என்றால் பாருங்களேன்.
1918ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியான செல்வநாயகம் ஆசிரியராக இருந்த போதே சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1924ஆம் ஆண்டு சித்தியெய்தி சிவில் சட்டத்துறையைத் தேர்ந்தெடுத்து சட்ட வல்லுநரானார். அத்தொழிலில் தனது முழுக் கவ னத்தையும் செலுத்தினார். அப்போதெல்லாம் தமது வாழ்நாள் இலட்சியம் சுப்பிரிம் கோர்ட்டுக்கு நீதியரசராவதே என்று கூறுவது உண்டு.
எஸ்.ஜே.வி. புகழ்பெற்ற சட்டத்தரணியாக இருந்த காலத்தில் அன்னாரது ஜூனியராக இருந்து பிற்காலத்தில் பிரபல சட்டத் தரணிகளாகிய சிலரை இங்கு பார்ப்பது சாலச் சிறந்ததாகும்.
பிரதம நீதியரசர் பதவி வகித்த நெவில் சமரகோன், எஸ். சர்வானந்தா, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தை எட்மண்ட் விக்ரமசிங்க, வி. நவரட்ணராஜா, சி.இரங்கநாதன் என்போர்.
இவ்வாறு புகழ்பூத்த சட்டத்தரணியாக இருந்த செல்வா அரசியலில் நுழைந்தது அவரது போதாத காலமாக இருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி ஈழத்து தமிழினத்தின் தவப்பேறாகும்!
1944ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கொழும்பு சைவமங்கையர் கழக மண்டபத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் செல்வா கலந்து கொண்டார். தொடர்ந்து சோல்பரி கமிஷன் முன் ஜி.ஜி. சாட்சியமளித்த போது செல்வா அவர்கள் அருகிலிருந்து தம்மாலியன்ற பங்களிப்பை வழங்கினார்.
1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எஸ்.ஜே.வி.யின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்க் காங்கிரஸ் யாழ். குடாநாட்டில் ஏழு வேட்பாளர்களும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு வேட்பாளர்களுமாக மொத்தம் ஒன்பது வேட்பாளர்களை நிறுத் தியது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜி.ஜி.க்கு அடுத்தபடியாக எஸ்.ஜே.வி தான் பிரதம பேச்சாளர். தமக்கே உரித்தான மெல் லிய உடல்வாகுடன் மென்மையாக ஆறுதலாக ஆனால், உறுதியாக நிறுத்தி, நிறுத்தி அவர் பேசிய உரைகள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தன.
அந்தத் தேர்தலில் எஸ்.ஜே.வி. காங்கேசன்துறையில் போட்டி போட்டு வெற்றி பெற்றார். யாழ். குடாநாட்டில் ஆறு தொகு திகளில் தமிழ் காங்கிரஸ் பெரு வெற்றியீட்டியது. எஸ்.ஜே.வி.யின் ஜூனியராகக் கடமையாற்றிய கோப்பாய்க் கோமான் கு. வன்னியசிங்கம் கோப்பாய்த் தொகுதியில் பெரு வெற்றியீட்டினார்.
1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கைத் தமிழருக்கு ஒரு கரிநாள். அன்றுதான் இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்க் காங்கிரஸ், இலங்கை, இந்தியக் காங்கிரஸ், லங்கா சமசமாஜக் கட்சி, பொல்சுவிக் வெனிஸ்ட்ரீட்சி சில சுயேச்;சை உறுப்பினர்களும் வாக்களித்தனர். எனினும், சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து யூ.என்.பி. டி.எஸ்.சேன நாயக்கா அரசு தமிழரைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலீடுபட்டது. அதன் முதற்படியாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மந்திரிப் பதவிகள் வழங்கப்பட்டன.
ஜி.ஜி.க்கு கைத்தொழில் அபிவிருத்தி, கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டது. ஜி.ஜி.யுடன் கே. கனகரத்தினம் (உதவி மந்திரிப் பதவி), சி.இராமலிங்கம், வி.குமாரசாமி போன்றோர் அரசுடன் இணைந்தனர். செல்வநாயகம், வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் அரசுடன் இணைய மறுத்துவிட்டனர்.
1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.ஜி. அமைச்சராகி அரசுடன் இணைந்தார். அன்றிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் ஜி.ஜி. குழு, செல்வநாயகம் குழு என இரண்டாகப் பிரிந்து வௌ;வேறாகக் கூட்டங்களும் நடத்தத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் செனட்டராக இருந்த இ.எம்.வி. நாகநாதன், செல்வநாயகம் குழுவில் இணைந்து கொண்டார்.
தொடர்ந்து தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதும் தன்னிகரில்லாத் தலைவராக தந்தை எஸ்.ஜே.வி. விளங்கியதும், பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அன்னார் வெற்றி பெற்றதும் அனைவரும் அறிந்ததே.
பெரியவர் செல்வநாயகம் தமிழர் விடுதலைக்காக, தமிழ் மக்கள் அமைதியாக தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இறுதி வரை ஒரு சத்தியாக்கிரகியாக, ஊழலற்ற வாழ்க்கையைக் கடைப்பிடித்தார். அமரர் செல்வநாயகத்தின் தீர்க்கதரிசனமான பண்டா-செல்வா ஒப்பந்தத்தையோ அல்லது பண்டா-டட்லி ஒப்பந்தத்தையோ மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் நிறைவேற்றி இருந்தால் எத்தனை பொருள் இழப்புகள், உயிர்ச் சேதங்கள், அனர்த்தங்களை இந்த நாடு தவிர்த்திருக்கும்.
அன்னார் தாம் காலமாகும் முன் தமது 79ஆவது வயதில் ‘கடவுள்தான் இனி தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்ற வேண் டும்”என்றார்.
தந்தையின் கூற்று எத்தனை தீர்க்கதரிசனமான கூற்று! அக்கூற்று நிதர்சனமான கூற்றாக இன்று மாறியிருப்பது தமிழ் பேசும் மக்களின் துரதிர்ஷ்டமே!
இணுவையூர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன்.
தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம்
‘ ஒற்றையாட்சி தமிழர்களை அழிக்கும்! சமஷ்டி ஆட்சியே ஐக்கியமாக வாழ வழி வகுக்கும்! – தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் ‘
இலங்கை அரசியலில் தலைசிறந்த நேர்மையான அரசியல் தலைவராக மதிக்கப்பட்ட தந்தை செல்வா சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் அவர்களின் அரசியல் தீர்க்கதரிசனம் 60 ஆண்டுகளின் பின்னரும் யதார்த்தமாக அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது.
தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சியை அமைத்துக் கொடுப்பதற்காக 30 வருட அகிம்ஸை வழிப் போராட்டத்தில் சாதித்தது என்ன என்பதை அன்னாரது 115வது பிறந்தநாளில் மீளாய்வு செய்வதன் மூலம் அவரது கொள்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழ் தேசியத்திற்கு 1949இல் அடித்தளமிட்ட பெருந்தலைவர். அதை அடைவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவி மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை ஆராய்வது இன்றைய அரசியல் சூழ்நிலையில் பொருத்தமானதே.
சோல்பரியின் ஒற்றையாட்சி தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும், மாற்று அரசியல் அமைப்பு எமக்குத் தேவை. பல்லின, பலமத, பலமொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளுக்கு பொருத்தமான அரசியல் அமைப்புத் திட்டம் ஒன்று உள்ளது.
அமெரிக்கா, கனடா, சோவியத்யூனியன், அவுஸ்ரேலியா, இந்தியா, சுவிஸ் உட்பட பலநாடுகளில் அத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுதான் சமஸ்டித் திட்டம் என்றார் தந்தைசெல்வா.
தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் திட்டம் வேண்டும் என்பதை 1949ல் உணர்ந்தார். சோல்பரி அரசியல் திட்டத்தை தீவிரமாக எதிர்த்தார். அதற்கான மாற்றுத் திட்டம் பற்றி பல அரசியல் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
1949 ஜனவரி இரண்டாம் வாரத்தில் கொள்ளுப்பிட்டியில் உள்ள தந்தை செல்வாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சமஸ்டி அரசியல் திட்டத்தை தந்தை செல்வா சமர்ப்பித்தார். அங்கு குழுமியிருந்த திரு.வன்னியசிங்கம் உட்பட பல சட்டவல்லுனர்கள் அதை விவாதித்து ஏகமனதாக அங்கீகரித்தனர்.
மேலும் தந்தை செல்வா அவர்கள் அளித்த விளக்கங்கள்“ ஒற்றையாட்சி முறை, சிங்களவர்கள் தமது சனத்தொகைப் பலத்தை உபயோகித்து தமிழ் இனத்தை அடக்கி ஆள்வதற்கு வசதியளிக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் நாடுகளில் ஒவ்வொரு இனமும் தாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தம்மைத் தாமே ஆட்சி புரிய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவரவர்கள் சுதந்திர தனியரசாக இயங்குவதில்லை. சமஸ்டி அமைப்பாக இயங்குகின்றன.
அத்தகைய சமஸ்டி அமைப்புத்தான் இலங்கைக்குத் தேவை.”தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி, தனியரசு வேணும் என்பதை 60 வருடங்களுக்கு முன்னர் கூறியது இன்றும் யதார்த்தமாக நோக்கப்படுகிறது.
இந்த இலட்சியத்தை அடைவதற்கு 30 வருட காலமாக அகிம்i~ வழிப் போராட்டம் நடத்தினர். அதனால் ஏற்பட்ட பலாபலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை 1948 லிருந்து, முதலில் நாடாளுமன்ற மேடையைச் சரியாகப் பயன்படுத்தி ஜனநாயக வழிகளில் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அரசியலில் தமிழர் பிரச்சினைகளில் எவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் ஆணித்தரமான கருத்துக்களை சிங்கள தலைவர்களுக்கு அச்சமின்றி எடுத்துக் கூறிய துணிவுமிக்க பெருந்தலைவர் தந்தைசெல்வா அவர்கள்.
அவர் 1948ல் இருந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய எழுச்சியுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. நாடாளுமன்றம் மூலம் போராடிய வரலாறு இதுவாகும்.
தேசியக்கொடி குடியுரிமை மசோதா (19-08-1948) பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்த மசோதா, இந்திய பாகிஸ்தானியர் குடியிருப்போர் பிரஜா உரிமைச் சட்டம், அரச கருமமொழி மசோதா, அரச கருமமொழி இரண்டாவது வாசிக்கு ஆகிய எழுச்சி உரைகள் ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது. இந்த எழுச்சி உரைகள் கேட்ட சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஜனநாயக வழியில் போராடிப் பெறக்கூடிய திட்டமே சமஸ்டி அரசியல் திட்டம். இந்த அரசியல் திட்டத்தை நன்கு விளங்கிய திரு.எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்கா, ஆட்சிப்பீடத்தைப் பிடிப்பதற்காக ஒரு இனவாத அரசியல்வாதியாக மாறி நியாயத்திற்கு மாறாக ஆட்சி நடத்தினார்.
தந்தை செல்வா இலங்கையில் உள்ள பல இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சமஸ்டி அரசியல் அமைப்பை வென்றெடுப்பதற்கு 30 வருடமாக அகிம்ஸை வழியில் போராடி வந்தார்.
1951ம் ஆண்டு வரலாற்றுப் பெருமை பெற்ற திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் தந்தை செல்வாவின் தலைமையில் நிறைவேற்றிய தீர்மானம்.
“பரிபூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு ஒவ்வொரு இனத்திற்கும் பிரிக்கவொண்ணாத உரிமை உண்டு என்பதாலும்,
அவ்வுரிமையின்றி அவ்வினத்தின் ஆன்மீக, கலாச்சார, தார்மீகப் பொலிவு சீரழிந்து விடும் என்பதாலும்,
இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் என்று கணிப்பதற்கான ஒவ்வொரு அடிப்படைத் தகுதிகளிலும் அதாவது முதலாவதாக குறைந்த பட்சம் சிங்கள மக்களை ஒத்த அளவிற்காவது புராதனமானதும் புகழ் செறிந்ததுமாக இத்தீவில் தனியொரு வரலாற்றாலும்,
இரண்டாவதாக ஒப்பற்றதோர் இலக்கியப் பாரம்பரியத்துடனும், இக்காலத் தேவைகள் அனைத்துக்குமே போதுமானதாகத் தமிழ்மொழியை இலங்கச் செய்யும் நவீன வளர்ச்சியுடனும் விளங்குவதுதான் சிங்களவர்களின் மொழியினின்றும் முற்றாக வேறுபட்ட தனியொரு மொழிவாரி மக்கள் என்ற உண்மையாலும்,
இறுதியாக இத்தீவின் மூன்றிலொரு பாகத்தை மேவிச் செறிந்துள்ளதான குறிப்பிடத்தக்க நிச்சயமான நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் அவர்கள் என்ற காரணத்தாலும் சிங்களவர்களினின்றும் வேறுபட்ட ஒரு தனியினமாக அவர்கள் விளங்குகின்றார்கள் என்பதாலும்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழ் பேசும் இனத்திற்கெனப் பிரிக்க முடியாத அவர்களின் அரசியல் சுயாதீன உரிமையைக் கோருவதுடன் அடிப்படையானதும்,
மறுக்கவொண்ணாததுமான சுயநிர்ணயக் கோட்பாட்டிற்கு அமைய மொழிவாரி அரசுகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கன ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறது” இது நாடாளுமன்ற மூலம் தந்தை செல்வா நடத்திய போராட்டம்.
இக் கருத்துக்களுக்கும் சிங்களத் தலைமை சிந்திக்கத் தவறியதைத் தொடர்ந்து அகிம்ஸை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1956 யூன் மாதம் 5ம் திகதி காலிமுகத்திடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை பிரதமர் எஸ்.டபிள்யு. ஆர்.டிபண்டாரநாயக்கா பாராளுமன்றத்தின் மேல்மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, சிங்களக் குண்டர்கள் சத்தியாக்கிரகிகளை குண்டாந்தடிகளால்த் தாக்கி சத்தியாக்கிரகத்திற்கு இடையூறு விளைவித்தனர்.
தாக்கப்பட்டபோதும்தமிழ்த்தலைவர்களும், தொண்டர்களும் அவ்விடத்தை விட்டுஅசையவில்லை. தாக்கப்பட்ட திரு.அமிர்தலிங்கம் இரத்தக்கறையுடன் நாடாளுமன்றம் சென்று உரையாற்றினார். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் தமிழர் பிரச்சினையை சர்வதேசத்திற்குக் கொண்டு சென்றது.
1961ல் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்தது. தமிழக மக்களிடையே புதிய எளிச்சியை ஏற்படுத்தியது. இந்திய அரசாங்கத்தைச் சிந்திக்க வைத்தது.
அகிம்ஸை வழிப் போராட்டத்தால் தமிழர் தாயகத்தில் அதாவது வடகிழக்கில் அரசாங்கத்தின் நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது. தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது. அதிக உயிரிழப்புக்களின்றி தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை என்ற ஆயுதத்தால் இலங்கை அரசை அதிர வைத்த நிகழ்வே 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம்.
தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற இம் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டாலும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி. அது தந்தை செல்வாவின் சாதனை.
1956ல் தந்தைசெல்வாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருமலை யாத்திரை, அதைத் தொடர்ந்து திருகோணமலை தலைநகரில் நடைபெற்ற மாநாட்டில் விடுக்கப்பட்ட அறைகூவலினால் ஏற்பட்டதே பண்டா–செல்வா ஒப்பந்தம்.
அதன் மூலம் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஒப்பந்தம் பின்வருவனவற்றை உறுதி செய்தது.
1. தமிழர் தாயகம் வடக்கும் – கிழக்கும் என்பதை ஏற்கச் செய்தல்
2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்தல்
3. தமிழ்மொழியை தேசியமொழியாக்குதல்.
4. வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல்.
5. இலங்கையின் தேசிய சிறுபான்மையினரின் மொழியாகத் தமிழை அங்கீகரிக்கச் செய்தல்.
6. பிரஜா உரிமைப் பிரச்சினையை மீளாய்வு செய்யச் செய்தல்.
7. சுயநிர்ணய உரிமை பிரதேசங்களை இணைக்கும் உரிமை மூலம் உள்ளே கொண்டு வரப்பட்டது.
திரு.ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கண்டி யாத்திரை, பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு என்பவற்றால் ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டாலும் தந்தை செல்வாவின் சமஸ்டி அடிப்படையில் ஒப்பந்தம் உருவானது ஒரு முதல்ப்படி. அது தந்தை செல்வாவின் சாதனை.
அடுத்து 1965ல் டட்லி சேனநாயக்காவுடன் செய்து கொண்ட இரண்டாவது ஒப்பந்தம் மற்றுமோர் சாதனை. 24-03-1965 ல் டட்லி–செல்வா கையொப்பமிட்ட ஒப்பந்தம். டட்லி சேனநாயக்கா ஒப்புக்கொண்டவை. இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டவை..
1. வட–கிழக்கு மாகாணங்களில் தமிழில் நிர்வாகம் நடப்பதற்கும் அவற்றைத் தமிழிலேயே பதிவதற்கும் தமிழ்மொழி விசேட விதிகளுக்கு அமைய உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் நாடு முழுவதிலும் தமிழிலேயே காரியமாற்ற உரிமையுள்ளவன் என்பதே தன் கட்சியின் கொள்கை என்பதையும் திரு.சேனநாயக்கா விளக்கினார்.
2. வட–கிழக்கு மாகாணங்களில் உள்ள சட்டபூர்வ நடவடிக்கைகளை நடாத்தவும், அவற்றைப் பதிவதற்கு தமிழ், நீதிமன்ற மொழியாக இருப்பது தன் கட்சியின் கொள்கையென்று திரு.சேனநாயக்கா ஏற்றுக் கொள்கிறார்.
3. இரண்டு தலைவர்களின் பரஸ்பர சம்மதத்தின் பேரில் மக்கள் பாலுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப இலங்கையில் மாவட்ட சபைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் தேசிய நன்மை கருதி சட்டங்களுக்கமைய மாவட்ட சபைகளுக்கு மேலான அதிகாரங்கள் அரசாங்கத்திற்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
4. இலங்கைப் பிரஜைகள் காணிப்பங்கீடுகளில் காணி பெறும் வண்ணம் காணி அபிவிருத்தி விதிகள் திருத்தியமைக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டாலும் சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் இணங்கியது ஒரு வரலாறு. தவிர சிங்கள தலைமையுடன் இணைந்து பங்காளியாக இருந்தால் அவர்கள் தமிழர் உரிமையை வழங்குவர் என்ற ஒரு பகுதியினரின் கருத்து இந்த தேசிய அரசாங்கம் மூலம் முறியடிக்கப்பட்டது.
தந்தை செல்வாவின் அகிம்ஸை வழி அணுகுமுறைக்குக் கிடைத்த இரண்டாவது சாதனை இதுவாகும். தந்தை செல்வாவை ஏமாற்றிய டட்லி சேனநாயக்காவின் கட்சி 1970ல் படுதோல்வி அடைந்தது.
1960 யூலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு பண்டா-செல்வா ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று கொடுத்த உறுதிமொழியே டட்லி சேனநாயக்கா அரசை வீழ்த்தி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை அமர்த்த வழிவகுத்தது.
தந்தை செல்வா இரண்டாவது தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டா–செல்வா ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வைத்ததன் மூலம் தந்தை செல்வா சாதனை படைத்தார். தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை. ஏமாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சிங்களத் தலைமைகளிடையே ஏமாற்றும் படலம் ஊறிப்போன விடயம். திரு.டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் ஆட்சிக்கு வந்த திரு.மகிந்த ராஜபக்ஸ வரை தமிழ்த் தலமைகளை ஏமாற்றியவர்களாகவே வரலாறு பதித்துள்ளனர்.
1960 தேர்தலின் பின் தமிழரின் போராட்ட முறையில் பெரும் மாற்றத்தைச் செய்தார். புதிய யுத்திகளை பரீட்சித்தார். அரசாங்கத்தை ஆக்குவது, அரசாங்கத்தை அழிப்பது, அரசாங்கத்தில் இணைவது.
1960 தேர்தல் முடிவுகள் அச்சந்தர்ப்பத்தை அளித்தது. தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்யும் சுயாட்சி அரசை அமைக்கும் தன்னோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்த ஜனநாயக வழிகளை பயன்படுத்தி நடவடிக்கையெடுத்தார்.
அது சுதந்திர இலங்கையில் தமிழர் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கையாண்ட நான்காவது உத்தி. முதலாவது ஒத்துழைப்பு திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்துடன் இணைந்திருந்த காலத்தில், அவர் அரசாங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைத்து தமிழர் பிரதேசத்தைப் பாதுகாக்கலாம் என்று டி.எஸ்.சேனநாயக்கா அரசுடன் ஒத்துழைத்த காலத்தில் தமிழரின் நிலப்பறிப்பு தீவிரமடைந்தது. மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது.
இரண்டாவது சாத்வீகப் போராட்டம் தமிழரின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு சுயாட்சியைப் பெற்றுக் கொடுக்க இந்த உத்தியை தந்தை செல்வா கையாண்டார்.
1956 யூன் 05ம் திகதி காலிமுகத்திடலில் நடத்திய சாத்வீகப் போராட்டமே இதுவாகும். பாரததேசத்திற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க மகாத்மாகாந்தி சாத்வீக வழியில் போராடினார். இச் சத்தியாக்கிரகத்தை தந்தை செல்வா மேற்கொண்டார்.
அதன் மகிமையை உணராத சிங்கள அரசும் சிங்களக் குண்டர்களும் பலாத்காரத்தை மேற்கொண்டு சத்தியாக்கிரகிகளை அடித்து வெருட்டினார்கள். திரு.அமிர்தலிங்கம் அவர்கள் இரத்தக்கறையுடன் நாடாளுமன்றம் சென்று இந்த அடாவடித்தனத்தை எடுத்துக் கூறினார். 1961ல் வடக்குக் கிழக்குத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை நடத்தினர். அந்த சத்தியாக்கிரகப் போராட்டம் சிங்கள இராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.
தந்தை செல்வாவின் சாத்வீகப் போராட்டமும் வெற்றியளிக்கவில்லை. நாலாவது உத்தி- அரசாங்கத்தை ஆக்குவதும் அழிப்பதும். 1960 மாச்சில் தந்தை செல்வா, டட்லி சேனநாயக்க அரசாங்கத்தைக் கவிழ்த்தார். 1960 யூலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் உருவாக உதவினார். உதவிய வரை ஸ்ரீமாவோ அம்மையார் உதறித் தள்ளினார். இதுவும் தந்தை (செல்வாவிற்கு ஏமாற்றம்.
ஐந்தாவது உத்தி அரசாங்கத்தில் பங்கு கொண்டமை. 1965ல் ஐ.தே.கட்சி தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தந்தை செல்வா ஆதரவளித்தார் பின்வரும் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் பங்காளியாகச் சேர்ந்த தந்தை செல்வா மூன்று ஆண்டுகளின் பின் டட்லியும் ஏமாற்றி விட்டார். ஐந்தாவது உத்தியிலும் தந்தை செல்வா தோல்வி கண்டார்.
ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அரசியல் அடிப்படையில் அதிகாரப் பகிர்வுடனான ஒருசுயாட்சியைப் பெறுவதற்கு 30 வருடமாகப் அகிம்ஸை வழியில் போராடிய தந்தை செல்வா சிங்கள ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்ட பின்னர் மாற்று வழியாக“ தமிழீழக் கோரிக்கையை வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்த நிலை.
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையையும் ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படைஉரிமைகளும்சிங்களஅரசாங்கங்களினால்மறுக்கப்பட்டதனால்தந்தைசெல்வாதமிழீழக்கோரிக்கையைமுன்னெடுத்தார். அதற்கான ஆயதப் போராட்டம் தற்போது தோல்வியடைந்த நிலையில், மீண்டும் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வுகாண்பதற்கான சந்தர்ப்பம் சிங்கள அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
பேர்ர் வெற்றியின் மமதையில் மகிந்த அரசு தட்டிக் கழிக்குமாயின், ஐக்கிய நாடுகள் சபை மூலம் தமிழீழம் மலரும் என்பது உறுதி.