2015ம் ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல்? நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

742

 

ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த அரசுத் தலைமைப் பீடம் தீர்மானித்துவிட்டது. அரசுடன் நெருங்கிய வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதியாகத் தெரிவித்தாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 28ம் திகதி நடைபெற்ற தென்மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, அச்சமயம் தம்மைச் சந்தித்த செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என்று கோடிகாட்டியிருந்தார்.

அதன்படி 2016 நவம்பரில்தான் புதிய ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆரம்பமாகும், அப்போதுதான் தேர்தல் நடைபெறும் என்று பலரும் ஜனாதிபதியின் கருத்துக்கு அர்த்தம் கொடுத்தனர்.

ஆனால், அதற்கு மாறாக 2015 முற்பகுதியிலேயே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதில் வென்றுவிட்டு, தற்போதைய பதவிக் காலத்தை 2015 நவம்பர் வரை தொடர்வது என்றும், அதன் பின்னர் அடுத்த பதவிக் காலத்தை சத்தியப் பிரமாணம் செய்து ஆரம்பிப்பது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திட்டமிட்டிருக்கின்றார் என்று அவருக்கு

முற்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு அத்தேர்தலில் அச்சமயம் பதவியில் இருப்பவரே மீண்டும் வெற்றி பெறுவாராயின் அப்படிக் காலம் தாழ்த்தி பதவிப் பிரமாணம் செய்யச் சட்டத்தில் இடமுண்டு என்கின்றன சட்டத்துறை வட்டாரங்கள்.

2010 ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வெற்றியீட்டிய போதிலும், அந்த வெற்றிக்கான பதவியை 2010 நவம்பரிலேயே அவர் ஏற்றிருந்தார். அதன்படி அவரது தற்போதைய பதவிக்காலம் 2016 நவம்பரிலேயே முடிவடைகிறது.download (1)

தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி, 2014 நவம்பருக்குப் பின்னர் எச்சமயத்திலும், முற்கூட்டியே, புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுக்கலாம். அப்படி முற்கூட்டியே தேர்தல் அழைப்பு விடுக்கப்பட்டு, அதிலும் அவரே வெற்றியீட்டுவாராயின் அதற்கு அடுத்து வரும் நவம்பர் மாதம் வரை அவர் தற்போதைய பதவிக் காலத்தைத் தொடர முடியும்.

அதாவது, 2014 நவம்பருக்குப் பின்னர்,  2015 நவம்பருக்கு முன்னதாக, ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுத்து, அதில் வெற்றி பெறுவாராயின், 2015 நவம்பர் வரை தற்போதைய பதவியில் தொடர்ந்துவிட்டு, 2015 நவம்பரில் இருந்து புதிய பதவிக் காலத்தை அவர் ஆரம்பிக்க முடியும். அதுவே அவரது திட்டம் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

இப்படி, 2016 நவம்பரில் நடத்த வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை இரண்டு ஆண்டுகள் முன்னதாக,  2014 நவம்பருக்குப் பின்னான ஒரு திகதியில் நடத்தி, அதில் வெற்றியீட்டினால் தற்போதைய பதவிக் காலத்தில் ஓர் ஆண்டை மட்டுமே அவர் இழப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறு, நேரத்துடன் தேர்தலை நடத்தி அவரது அடுத்த பதவிக் காலத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறதாம்.

அதற்கு மூன்று காரணங்கள் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன.

முதலாவது – நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்கள், ஆளுந்தரப்பின் செல்வாக்குச் சரியத் தொடங்கியிருப்பதை முதல் தடவையாகக் கோடி காட்டியிருக்கின்றன.

விடுதலைப் புலிகள் மீதான வெற்றி என்ற பிரசாரம் ஐந்து வருடங்களுக்குப் பின்னரும் எடுபடுமா என்பது தெரியவில்லை.

சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, மின்சாரக் கதிரையில் தன்னை இருத்தி, மரண தண்டனை தருவதற்கான சூழ்ச்சி நடக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசுத் தலைமை முன்னெடுத்த போதிலும் கூட அது இந்தத் தேர்தலில் செல்லுபடியாகவில்லை.

ஆகவே சரிந்துவரும் செல்வாக்கு முற்றாக வீழ்ச்சியடைய முன்னர் அடுத்த பதவிக் காலத்துக்கான வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கணிப்பு.

இரண்டாவது – எதிரணிகள் தற்போது சிதறிக் கிடக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல் ஒன்று விரைந்து நடத்தப்படுமானால் அதற்கு முன்னர் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கக் கூடிய இணக்கத்தை எதிர்க்கட்சிகள் எட்டுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.

அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்காமலேயே அதிரடியாகத் தேர்தலை அறிவித்து நடத்துவது ஆளும் தரப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்ற மதிப்பீடு.

மூன்றாவது – சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராகக் கட்டவிழும் நடவடிக்கைகளின் விளைவு சம்பந்தமானது. இலங்கை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணை நடைபெறப் போவது திண்ணம். அது உள்நாட்டில் இல்லாவிட்டாலும் வெளிநாட்டிலாவது நடக்கும்.

அப்படி நடைபெறும் போது தென்னிலங்கையில் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் தேசிய உணர்வலைகளைத் தமக்குச் சாதகமாக மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம். அதையும் மிக எச்சரிக்கையுடன்தான் ஆளும் தரப்பு கையாள விரும்புகிறது என்று தெரிகிறது.

சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று கட்டவிழும் போது தேசிய உணர்வலைகள் தென்னிலங்கையில் ஆளும் தரப்புக்கு ஆதரவாகப் பீறிட்டு எழுந்தாலும் அத்தகைய பொறிமுறையின் இறுதிக் கட்டத்தில் இலங்கைக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் என்ற விளைவு உருவாகுமானால் அதன் பெறுபேறு தென்னிலங்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூறுவது இயலாத காரியம்.

சர்வதேசம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தென்னிலங்கையில் அரசுக்குப் பாதகமான கருத்தலைகளை ஏற்படுத்த மாட்டா என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியாது.download (2)

அத்தோடு, மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலைப் புதிதாக நடத்தி மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதன் மூலம், இலங்கைக்கும் தமக்கும் எதிரான நடவடிக்கை எடுக்க விளையும் சர்வதேசத்துக்கு இலங்கையும் மக்களும் தமக்குப் பின்னால்தான் ஒன்று திரண்டு நிற்கிறார்கள் என்ற செய்தியை மிகத் தெளிவாகக் காட்ட முடியும் என்று கருதுகிறாராம் ஜனாதிபதி ராஜபக்‌ச.

அதாவது சர்வதேச விசாரணை நடந்தாலும் அதன் பெறுபேறுகளை, அல்லது அதன் அடிப்படையிலான தீர்மானங்களை, சர்வதேசம் எடுக்க முன்னர் ஜனநாயகத் தேர்தல் ஒன்றின் மூலம் அதற்கு ஒரு பதிலடி நடவடிக்கையாகக் காட்ட ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த நினைக்கிறாராம்.

இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நவம்பருக்குப் பின்னர் அறிவித்து, அடுத்த ஆண்டு முற்பகுதியில் அதனை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தயாராகி விட்டார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தந்தன. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE